Elegant Rose - Diagonal Resize 2 TAMIL ISLAM

வெள்ளி, 16 மார்ச், 2012

மௌலிதுகள் – ஒரு பார்வை


நமது நாட்டிலும், ஏனை பிற நாடுகளிலும் மௌலிது ஷரீஃப் என்பது முஸ்லிம்களால் வழமையாக ஓதப்பட்டு வருகிறது. இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பாடப்படும் புகழ்பாக்களும், அவர்களின் சரித்திரங்களும், முஃஜிஸா –அற்புதங்களும், அன்னவர்களின் சிறப்பியல்புகள், உயர் குணநலன்கள் எடுத்தோதப்படுகின்றன.
அதேபோல் இறைநேசச் செல்வர்களின் வரலாற்றுச் சம்பவங்களும், அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும், அவர்கள் இஸ்லாத்திற்கு செய்த தியாகங்களும், கராமத் -அற்புதங்களும் எடுத்தோதப்படுகின்றன.
அல்லாஹு சுப்ஹான ஹுவத் தஆலா ஒரு சிலருக்கு தனிப் பெரும் ஆற்றல்களை நல்கியிருக்கிறான். அந்த ஆற்றல்களில் குறைவானோர் அல்லது அதில் தேவையுடையோர் அந்த ஆற்றல் மிகுந்தவர்களிடம் சென்று துஆ கேட்பதும் வஸீலா – உதவி தேடுவதும் நமது முஸ்லிம்களிடம் இருந்து வரும் வழமை. அதற்கேற்ப இறைநேசர்களின் மௌலிதுகளை ஓதுவதும் இஸ்லாத்தில் உள்ளதாகும். இதனால் தாங்கள் எண்ணிய எண்ணம் நிறைவேறுகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் எல்லாம் இறைவன்தான் தருகிறான் என்ற நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் ஆழப் பதிந்துள்ளது.
இவ்வாறு நபிகளின் புகழ்பாடும் மௌலிதுகளையும், இறைநேசர்களின் புகழ்பாடும் மௌலிதுகளையும் ஓதுவது ஷிர்க், பித்அத், ஹராம் என்று பலவாறு பலர் கூறித் திரிகின்றனர். இவர்களின் கூற்றுக்கள் உண்மைதானா? இஸ்லாத்திற்கு உட்பட்டதுதானா? நபிகளார் மௌலிது ஓதுவதை அனுமதித்துள்ளார்களா? குர்ஆனில் அதற்கு ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் விளங்கிக் கொள்வதற்காக இக்கட்டுரை தொகுத்தெழுதப்பட்டுள்ளது.
மௌலிது என்றால் என்ன?
மௌலிது என்னும் வார்த்தைக்கு அரபி மொழியில் பிறப்பு என்று பொருளாகும். இஸ்லாமியர்களின் வழக்கத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் இறைநேசர்கள் ஆகியோர்களின் பிறப்பு, வாழ்க்கை, வரலாறு, அற்புதங்கள், மாண்புகள் ஆகியவற்றைக் குறித்து பாடப்பட்ட கவிதைகளுக்கு மௌலிது என்று பெயர்.
இதை இஸ்லாமியர்கள் மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், புண்ணியம் கருதியும் ஓதி வருகின்றனர்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உன்னத நினைவை உயிர்பிப்பது என்பது, மவ்லிது ஓதுவதால் ஏற்படும் பயன்களில் ஒன்றாகும். அதேபோல் இறைநேசர்களின் மௌலிதும் பயனள்ளதாகும். இறைநேசர்களைப் பற்றி நினைவு கூறுமிடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்று ஜுனைதுல் பகுதாதி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆனில் இறைவன் பல்வேறு இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்.
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ
(நபியே) நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள். (68:4)
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ
(நபியே) உங்கள் கீர்த்தியை நாம் உயர்த்தியுள்ளோம். (94:4)
وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ
(நபியே) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம். (21:107)
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
وَفِيْنَا رَسُوْلَ اللهِ يَتْلُوْا كِتَابَهُ
اِذَا انْشَقَ مَعْرُوْفٌ مِنَ الْفَجْرِ سَاطِعٌ
اَرَانَا الْهُدَى بَعْدَ الْعَمى فَقُلُوْبُنَا
بِهِ مُوْقِنَاتٌ اَنَّ مَاقَالَ وَاقِعِ
يَبِيْتُ يُجَافِيْ جَنْبُهُ عَنْ فِرَاشِهِ
اِذَا اسْتَثْقَلَتْ بِالْمُشْرِكِيْنَ الْمَضَاجِعُ
1.    எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப் பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்.
2.    குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.
3.    இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும்போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 1087.

ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
هَجَوْتَ مُحَمَّدًا فَاَجَبْتَ عَنْهُ
وَعِنْدَ اللهِ فِيْ ذَاكَ الْجَزَاءُ
هَجَوْتَ مُحَمَّدًا بَرًّا حَنِيْفًا
رَسُوْلِ اللهِ شَيْمَتُهُ الْوَفَاءُ
وَقَالَ الله قَدْ اَرْسَلْتُ عَبدًا
يَقُوْلُ الْحَقَّ لَيْسَ بِهِ خَفَاءُ
 

1.    (இறை மறுப்பாளர்களே) முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறைவுபடுத்தி நீங்கள் கவி பாடுகிறீர்கள். அதற்குப் பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு.
2.    நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்திப் பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.
3.    அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான், சத்தியத்தைக் கூறுகிற ஓர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன். அதில் ஒளிவு மறைவு இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்: முஸ்லிம் 4545
கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
وَالْعَفْوَ عِنْدَ رَسُوْلَ اللهِ مَأْمُوْلُ
فَقَدْ اَتَيْتُ رَسُوْلِ اللهِ مُعْتَذَرَا
وَالْعَذْرُ عِنْدَ رَسُوْلَ اللهِ مَقْبُوْلُ
اِنَّ الرَّسُوْلَ لَنُوْرٌ يُسْتَضَاءُ بِهِ
وَصَارِمٌ مِنْ سُيُوْفِ اللهِ مَسْئُوْلٌ

1.    நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
2.    மன்னிப்புத் தேடியவனாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது.
3.    நிச்சயமாக முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் இருக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6558

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا
 

நிச்சயமாக இறைவனும் அவனுடைய மலக்குகளும் நபி மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! அந்த நபி மீது நீங்களும் ஸலவாத் சொல்லுங்கள் சலாமும் கூறுங்கள். (அல்குர்ஆன் 33:56)
   இதற்கு விரிவுரை சொல்லும் போது இமாம் அபுல் முஆலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 'அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் திருநபியை அமரர்களிடம் போற்றிப் புகழ்கிறான் என்பதே பொருள் என்று கூறுகிறார்கள். -ஸஹீஹுல் புகாரி 2:77
இமாம் இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அல்லாஹ் இப்பூவுலகவாசிகளோடு திருநபி மீது ஸலவாத் உரைக்க கட்டளையிட்டதன் நோக்கம், அவ்விண்ணிலும் இம்மண்ணிலும் திருநபியின் புகழ் முழங்கப்பட வேண்டும் என்பதற்கே என்கிறார்கள். -இப்னு கதீர் 3:533
மவ்லிதுகளில் கூறப்படும் ஸலவாத்துகள் இந்த இறைக் கட்டளையை நிறைவேற்றிய பலனைத் தருகிறது.
அதேபோல் இங்கு கூறப்படும் சலாமும், புகழ்ச்சிகளும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உடனே எத்திவைக்கப்படுகிறது.
عَنْ اِبْنِ مَسْعُوْد قَالَ قَالَ رَسُوْلِ اللهِ صَلّى الله عليه و سلم اِنَّ لله مَلَا ئِكَة ً سَيَّا حِيْنَ فِيَ اَلَا رْضٍ يَبَلِّغُوْنَي مِنْ امَّتَى
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்விற்கு மண்ணுலகில் சுற்றிவரும் மலக்குகள் இருக்கிறார்கள். என் உம்மத்தினர் கூறும் சலாமை அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: நசாயீ 1265
ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்புப்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து பாடினால் அதற்கு அல்லாஹ்விடம் கூலியும் கிடைக்கிறது.
இறைநேசர்களின் பேரில் மௌலிது ஓதுவது:
அருள்மறையாம் திருக்குர்ஆனும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளும் இறைநேசர்கள் பெயரில் மௌலிது ஓதுவதற்கு சான்றாக அமைந்துள்ளன.
அல்குர்ஆன்:
இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறு, மாண்புகள் மற்றும் அற்புதங்களைக் கூறுபவைகளாகவே மௌலிதுகள் அமைந்துள்ளன. இதற்கு குர்ஆனில் காணப்படும் ஆதாரங்கள்:
1.    மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 3:35-47, 1:16-29)
2.     இஸ்கந்தர் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல் குர்ஆன் 18:83-98)
3.    ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 18:65-82)
4.    அஸ்ஹாபுல் கஃப் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 1:9-25)
أَلَا إِنَّ أَوْلِيَاءَ اللَّهِ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
கவனமாகக் கேளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எப்பயமும் இல்லை. அவர்கள் கவலை சொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:62)
திண்ணமாக, எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பிறகு (அதிலே) நிலைத்திருந்தவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள்.
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ خَالِدِينَ فِيهَا جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ
அத்தகையவர்களே சுவர்க்கவாதிகள். அவர்கள் செய்தவற்றிற்கு நற்கூலியாக அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 46:13,14)
பருவமில்லாத (ருn-ளுநயளழn) காலத்திலும் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்த கனிவர்க்கங்கள் பற்றியும், (அல்குர்ஆன் 3:37)
சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அவையிலிருந்த ஞானம் பெற்ற ஓர் இறைநேசர் பன்னூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த பல்கீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 27:38-40)
முன்னூறு வருடங்களுக்கு மேலாக உறங்கிய குகைத் தோழர்களுக்கு நிகழ்ந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 18:9-25)
அல்குர்ஆன் இனிதாக எடுத்தியம்புகிறது. இதேபோல்தான் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகள், அற்புதங்கள் மௌலிதுகளில் கூறப்பட்டுள்ளன.
ஹதீதுகள்:
عَنِ ابْنُ عُمَرَ قَالَ قَالَ رَسُوْلُ الله صَلَّى الله عليه وسلم: اُذْكُرُوْا مَحَاسِنَ مَوْتَاكُمْ .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி 940, அபூதாவூத் எண் 4254.
عَنْ اَنَسِ بْنِ مَالِكِ قَالَ قَالَ مَرُّوْا بِحَنَازَةَ فَاَثْنَوْا عَلَيْهَا خَيْرًا فَقَالَ النَّبِيُ صَلّى الله عليه وسلم فَقَالَ عُمَرُبْنُ الْخَطَّابِ مَا وَجَبَتْ قَالَ هَدَا اَثْنَيْتُمْ عَلَيْه خَيْرًا فَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ
ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவியபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுரைத்தார்கள், இறந்து போன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்துரைத்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்கள்: புகாரி 1278, முஸ்லிம் 1578.
பத்ரு மௌலிது:
عَنِ الرَّبِيْعِ بِنْتِ مَعُوْذِ قَالَتْ دَخَلَ عَلىَ النَّبِيُّ صلى الله عليه وسلم غَدَاةَ بُنِيَ عَلَيّ وَجُوَيْرِيَّاتٌ يَضْرِبْنَ بِالدَّف يَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِهِنَّ
எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் யுத்தத்தில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர்: ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 3700, திர்மிதி 1010, 4276.

முஹாஜிர்-அன்ஸார் மௌலிது:
اَللهُمَّ اِنِّ الْعَِيْشَ عَيْشُ الآخِرَةِ
فَاغْفِرْ لِلَانْصَارِ وَالْمُهَاجِرَة
اَللّٰهُمَّ اِنَّهُ لاَ خَيْرَ اِلاَّ خَيْرُ الآخِرَة
فَبَارِكْ فِي الاَنْصَارِ وَالْمُهَاجِرَةِ
اَللهُمَّ لاَ عَيْشَ اِلاَّ عَيْشُ لآخِرَةِ
فَاَكْرِمِ فِي الاَنْصَارِ وَالْمُهاَجِرَةِ
اَللهُمَّ اِنَّ الاَجْرَ اَجْرُ الآخِرَةِ
فَارْحَمِ الاَنْصارَ وَالْمُهَاجِرَةِ
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிரார்த்தனை செய்து கவி படித்தார்கள்.
திண்ணமாக வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக!
உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வும் இல்லை. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை கண்ணியப்படுத்துவாயாக!
திண்ணமாக நற்கூலி என்றாலே மறுமையின் நற்கூலிதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2622, 2623, 2741, 3616.
ஸித்தீகா மவ்லிது:
عَنْ مَسْرُقٍ قَالَ قَالَ دَخَلْنَا عَلى عَائِشَةَ وَعنْدَهَا خَسَّان بن ثَابِتٍ يُنْشَدُهَا شِعْرًا يُشَبَّبُ: بِأَبْيَاتٍ لَهُ وَقَالَ
خَصَّانُ رَزَانٌ مَاتَزَنِّ بِرِيْبَة
وَتُصْبِحُ غَرْثِىِمْن لَحُوْمِ الْغَوَافِلِ
நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு தாபித் ரளியல்லாஹு அன்ஹு தனது கவிகளின் மூலம் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். (அவற்றில் ஒன்று)
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவும் மிக்கவர்கள், ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார்கள்.
அறிவிப்பாளர்: மஸ்ரூக் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 3831, முஸ்லிம் 4543
மவ்லிது ஓதுவதின் பலன்கள்:
மவ்லிது ஓதக் கூடியவர்களுக்கு மலக்குமார்களைக் கொண்டு பாதுகாப்பு அரண் இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.
عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُوْلُ الله صَلى الله عليه وسلم لِحَسَّانَ اِنَّ رُوْحَ الْقُدُسِ لاَيَزَالُ يُؤَيَّدُكَ مَانَفَحْتَ عَنِ اللهِ وَرَسُوْلِهِ
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்,
நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காவும் கவிபாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்) உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: முஸ்லிம் 4545.
عَن اَنَسِ بنِ مَالِكٍ اَنَّ النَّبِيُّ صلى الله عليه وسلم مَرَّ بِبَعْضِ الْمَدِيْنَةِ فَاَذَا هُوَ بِجَوَارِ يَضْرِبْنَ بِدُفِّهِنَّ وَيَتَغَنَّيْنَ وَيَقَلْنَ
نَحْنُ جَوَارِ مِنْ بَنِي النَّجَّارِ
يَاحَبَّذَا مُحَمَّدٌا مِنْ جَارِ
فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم: يَعْلَمُ الله اِنِّيْ لأْحُبُّكُنَّ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஒரு பகுதிக்குச் சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் தஃப் அடித்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். (அவற்றில் ஒன்று) நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள்.
(இதைக் கேட்ட) நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன்.(இதை) அல்லாஹ் அறிகிறான்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு மாஜா 1889.
பள்ளிவாசலில் மௌலிது:
عَنْ اِبْن جَدْعَانَ قَالَ اَنْشَدَ كَعْبُ بْنُ زُهَيْرِبْنِ اَبِي سلّمَ رَسُوْل الله صلى الله عليه وسلم فِي الْمَسْجِدِ
கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து படித்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6555.
عَنْ اَبِي  هُرَيْرَةَ اَنَّ عُمَرَ مَرَّ بِحَسَّانَ وَهُوَ يَنْشُدُ الشِّعْرَ فِي الْمَسْجِدِ فَلَحِظَ اِلَيْهِ فَقَالَ قَدْ كُنْتُ اُنْشِدَ وَفِيْهِ مَنْ هُوَ خَيْرٌ مِنْكَ
பள்ளிவாசலில் ஹஸ்ஸான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கவி பாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்,
உங்களை விட சிறந்தவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தபோதே இப்பள்ளிவாசலில் கவி பாடியுள்ளேன்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2973, முஸ்லிம் 4539.
عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ رَسُوْلَ الله صَلى الله عَلَيْهِ وَسَلَّمَ يَضَعُ لحَسَّانَ مِنْبَرًا فِي الْمَسْجِدِ يَقُوْمُ عَلَيْهِ فَاِنَّمَا يُفاخِرُ عَنْ رَسُوْلِ الله صلى الله عليه وسلم .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள்.
அதிலே அவர்கள் ஏறி நின்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையேப் புகழ்வார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: திர்மிதி 2773.
மவ்லிது ஓதும் அமல் பெருவிழாவானது எப்போது?
மௌலிது ஓதும் அமலை பெரும் விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்தியவர், தலைசிறந்த வள்ளல் தன்மை மிக்க அரசர்களில் ஒருவரான 'அல்மலிக்குல் முழஃப்பர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலியிப்னு புக்தகீன்' என்பவர் ஆவார்.
இந்த மன்னர் இனிய பல பொது சேவைகள் செய்தவர் என்று இமாம் சுயூத்தி அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த மன்னர் ரபியுல் அவ்வலில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் மௌலிதிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க, மாபெரும் கூட்டத்தை திரட்டி வந்தார் என்றும், இந்த மன்னர் வீரமும், வியத்தகு ஞானமும், கொடைத்தன்மையும் கொண்டவர் என்றும் இப்னு கதீர் அவர்கள் எழுதிய வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஏற்பாடு செய்த மௌலிதின் விருந்தில் ஞானிகள் மற்றும் ஸூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அன்பளிப்புகளும் வழங்கினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்பர் இந்த மௌலிதிற்காக செலவிட்டார்.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களில் அல்ஹாபிழ் இப்னு ஜவ்ஸி, இப்னுல் இமாதுல் ஹன்பலிய்யீ, இமாம் ஸர்கானீ, இப்னு கல்கான், அல்ஹாபிழ் இப்னு கதீர் போன்றோர் இந்த மன்னரின் வரலாற்றையும், அவர் மவ்லிது மஜ்லிஸ் நடத்திய தனிச்சிறப்பையும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
மௌலிதுகள் பற்றி மார்க்க அறிஞர்கள் கூற்று:
வஹ்ஹாபிகளின் கருத்துக்களுக்கு முன்வடிவம் கொடுத்த இப்னு தைமிய்யா கூட தமது 'இக்திளா' நூல் 2:136 ல் கூறுகிறார், 'திருநபியின் மௌலிது நடத்துவதால் மகத்தான நற்கூலி கிடைக்கும்' என்று.
எனக்கு உஹது மலை அளவு தங்கம் இருந்தால் அவையனைத்தையும் அருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மவுலிது ஷரீபை நடத்துவதற்காக செலவு செய்வதையே நான் பெரிதும் விரும்புவேன் என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஸெய்யிதுத் தாயிபா -ஸூபியாக்களின் சக்கரவர்த்தி ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'எவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மவ்லிது ஷரீபுக்கு ஆஜராகி அதை மகிமைப் படுத்தி சிறப்புறச் செய்தாரோ நிச்சயமாக அவர் காமிலியத்தான –சம்பூரணமான-ஈமானைப் பெற்றுக் கொண்டவராவார்' என்று.
ஆதார நூற்கள்: தர்ஜுமத்து இக்தில் ஜவ்ஹர் பீ மவுலிதிந் நபிய்யில் அஸ்ஹர், பர்ஸன்ஜீயின் ஷரஹு.
பர்ஸன்ஜீ மவுலிதை அரபுத் தமிழில் மொழி பெயர்த்துள்ள மர்ஹும் அல்ஹாஜ் அபூபக்கர் மிஸ்கீன் சாகிபு ஆலிம் பாஸி (காயல்பட்டணம் ஜாவியா கலீபா வ முதர்ரிஸ்) அவர்களும் அந்நூலில் மேற் சொன்ன ஆதாரங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்.
எந்த இடத்தில் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிது ஓதப்படுகிறதோ, அந்த இடத்தை ஒருவர் நாடினால், நிச்சயமாக அவர், சுவனப் பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். ஏனெனில், ஏந்தல் நபி நாயகம் அவர்கள் மீது கொண்ட அன்பினாலேயே தவிர அவ்விடத்தை அவர் நாடியிருக்கவில்லை. என்னையொருவர் நேசித்தால் அவர், என்னுடனேயே சுவர்க்கத்தில் இருப்பார் என்பது நபி மொழியாகும் என்று மாமேதை அஷ்ஷெய்கு ஸரியுஸ் ஸிக்திய்யி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும், நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியாக நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மௌலிதின் தனித்தன்மையைச் சார்ந்தது என்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருப்பதாக இமாம் கஸ்தலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த புனித இடத்தை மக்காவாசிகள் அன்றும் இன்றும் தரிசிக்கும் அமல், ரபியுல் அவ்வல் 12 ம் நாள் நடைபெற்று வந்ததாக மவாஹிபுல் லதுன்னியா என்ற நூல் கூறுகிறது.
முந்தைய பிந்தைய மார்;க்க மேதைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் இரவிலும் பகலிலும் மவ்லிது எனும் அமலில் ஈடுபடுவதில் ஒத்திருந்தார்கள் என்று அஷ்ஷெய்க் யூசுபுன்னபஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
எந்த ஒரு வீட்டிலோ, பள்ளிவாசலிலோ மஹல்லாவிலோ மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களை கருணையினால் அல்லாஹ் சூழ வைத்து விடுகிறான் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது அல்வஸாயில் ஃபீ ஷறஹிஷ் ஷமாயில் என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.
இது போன்ற எண்ணற்ற அறிஞர்களும், மார்க்க மேதைகளும் மவ்லிது ஓதுவதை புனிதமான அமல் என்றும் அதற்காக ஈடுபடுவது அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்றுத் தரக் கூடியது என்றும் சொல்லியிருப்பதால், மௌலிது என்னும் புனித அமலை நாம் சிறப்புற செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெறுவோமாக!
முற்றும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "மௌலிதுகள் – ஒரு பார்வை"

வஸீலா – ஒரு ஆய்வு!


வஸீலா என்பதற்கு அரபியில் இஸ்திம்தாது, இஸ்திகாதா, இஸ்திஷ்ஃபா, இஸ்திஆனா என்று பல சொற்களைக் கொண்டு வழங்கப்படுகின்றது. ஆனால் இவை அனைத்தும் கருத்திலும் அர்த்தத்திலும் ஒன்றுதான்.
மார்க்கச் சட்டவிதிப்படி பதவி உயர்ந்த ஒன்றின் பொருட்டினால் அல்லாஹ்விடத்தில் கேட்பதற்கு வஸீலா எனக் கூறலாம். அல்லாஹ்விடத்தில் நல்லமல்களும், நல்லடியார்களும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அன்பிற்குரித்தான பொருட்களாகும். இதனால்தான் இரண்டைக் கொண்டும் வஸீலா தேடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் நன்றாக சிந்தித்துப் பார்ப்போமானால் நற்கருமங்களோ, துஆவோ வஸீலாவாக மாட்டாது. காரணம் துஆவும், நற்கருமங்களும் ஒரு நபரைக் கொண்டு நிகழ்த்தப்படுபவை. எனவே துஆவும், நற்கருமங்களும் நிகழ்ச்சியாகும். இனி நிகழ்ச்சியை நிகழ்த்தும் மனிதனை விட நிகழ்த்தப்பட்ட அந்நிகழ்ச்சிகள் உயர்வானதெனக் கருதப்படுமாயின், இறைவனது செயல்கள் உயர்வானதாகக் கருதப்பட்டு இறைவன் அச்செயலை விட தாழ்ந்தவனாக கருதப்பட்டுப் போய்விடுவான்.
இவ்வாறே நபிமார்கள், வலிமார்கள் எந்தச் சிறப்பையுமுடையவர்கள் அல்ல. அவர்கள் வஸீலாவாக மாட்டார்கள். அவர்கள் வெறும் பிரார்த்தனை மட்டும்தான் செய்ய முடியும். ஆதலால், அவர்களின் அந்த 'துஆ' தான் வஸீலா என்று வாதாட தலைப்படுவது மாபெரும் அறிவீனமாகும். ஏனெனில், நபிமார், வலிமார் இன்றி அவர்களின் துஆ எப்படி செயல் வடிவம் பெற முடியும்?
எனவே துஆவை விட துஆ செய்யும் நபிமார்கள், வலிமார்கள்தான் உயர்ந்தவர்களும், வஸீலாவுமாகும். இது போன்றுதான் நற்கருமங்கள் உயர்வானதல்ல. அதனை நிகழ்த்துபவர் தான் உயர்ந்தவராவார். ஆதலால் வஸீலா என்பது நற்கருமங்களோ, துஆவோ அல்ல. அவைகளைத் தம்மிலிருந்து வெளிப்படுத்துபவர்கள்தான் உண்மையான வஸீலா என்று கூறப்படும்.   
உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகம், திருக்குர்ஆனில் அல்லாஹ்…

واستعينوا بالصبر والصلاة
பொறுமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் உதவி (வஸீலா) தேடுங்கள். (அல்குர்ஆன்)
பொறுமை, நோன்பு, ஸகாத், சதகா, ஹஜ் பிறருக்கு உதவி செய்தல் போன்ற நற்கிரிகைகளைக் கொண்டு உதவி தேடலாம் என்பது குர்ஆனின் கூற்றுப் பிரகாரம் அல்லாஹ்விடம் பரிந்துரைக்கும் சக்தி பெற்றதாகும்.
இந்த நல்லமல்களும், நல்லடியார்களும் அல்லாஹ்வின் படைப்புக்கள்தான். அல்லாஹ்வின் படைப்புக்களில் ஆக அதியுயர்ந்த படைப்பு எதுவெனக் கேட்டால் மனிதன் என்றே கூறப்படும். பொறுமைக்குப் பகரமாக பொறுமையாளியையும், நோன்புக்குப் பகரமாக நோன்பாளியையும், ஹஜ்ஜுக்குப் பதிலாக ஹாஜியையுமே கூறப்படும். உலகில் படைக்கப்பட்ட யாவும் மனிதனுக்கும,; மனிதன் படைத்தவனை அறியவும் தான்.
அல்லாஹ்வுக்கு மாறு செய்யாது அவன் ஏவியதை புரிந்து தாழ்வுயர்வன்றி இருப்பவர்கள் அமரர்கள். ஆனால் மனிதன் வணக்கங்கள் புரிந்து படைத்தவனை நெருங்கும் பட்சத்தில் அமரர்களை விடவும் பல மடங்கு உயர்ந்த பதவிக்கும், அவனது காதலனாக அல்லாஹ் மாறுகின்ற படித்தரத்தை கொண்டவன் மனிதன். அல்லாஹ்வின் சன்னிதானத்தில் எமது தேவைகள் நிறைவேற படித்தரம், தாழ்வு உயர்வற்ற நல்லமல்களை வஸீலாக்குவது மேன்மையா? அல்லது அவனிடத்தில் நெருங்கிய, அவன் தன் திருமறையில் புகழ்ந்துரையாடிய நல்லடியார்களை வஸீலாவாக ஆக்குவது மேன்மையா?
அல்லாஹ் தன் திருமறையில் மற்றுமோரிடத்தில் நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் புதல்வரைப் பற்றிக் கூறுகையில் என்ன சொல்லை உபயோகித்துள்ளான் என்பதை பாருங்கள்:

انه عمل غير صالح
நபியவர்களின் புதல்வர் தன் தகப்பனார் கொண்டு வந்த ஏகத்துவத்தை ஏற்காததால் அந்தப் புதல்வர் அமலுன் கைறு ஸாலிஹ் – நல்லமலில்லை என்றான்.
ஏகத்துவக் கொள்கையை ஏற்காது கைரியத்தில், ஷிர்க்கில் மூழ்கியிருந்த ஓர் அடியானை அல்லாஹ் அவர் நல்லமல்ல எனக் கூறியுள்ளான் என்றால் என்ன பொருள்? அவனை ஏற்ற நல்லடியார்கள் நபிமார்கள் அனைவரும் 'அமலுன் ஸாலிஹ்' நல்லமல்கள் என்பது தானே.
ஆம். நிச்சயமாக அவர்கள் யாவரும் நல்லமல்கள் என்ற பெயரில் அடங்குவோர்கள் தான். நபிமார்கள், வலிமார்கள், ஸாலிஹீன்கள், மஷாயிகீன்கள், இமாம்கள் யாவரும் அல்லாஹ்விடம் அமலுன் ஸாலிஹ் – நல்லமல்கள் எனப் பெயர் சூட்டப்பட்டவர்கள்தான். ஆனால் நாம் தான் தவறாக தொழுகை, பொறுமை, நோன்பு போன்ற கிரிகைகளைத்தான் நல்லமல்கள் என்று அர்த்தம் கொண்டிருக்கிறோம்;. ஆகவே வஸீலா என்பது நல்லடியார்களைக் கொண்டு கேட்பதுதான் என்பது உறுதியாகிறது.
நீங்கள் கேட்கலாம் அல்லாஹ் அல்குர்ஆனில்,
نحن اقرب اليه من حبل الوريد
'நாம் அவனின் பிடரி நரம்பை விட நெருக்கமானவன்' என்று கூறுவதால் நமக்கு வலியின் வஸீலா எதற்கு என்று? அல்லாஹ்வே நம்மை நெருங்கியிருக்கும் பட்சத்தில் நமக்கு இறைநேசர்கள் எதற்கு? உங்கள் மனதில் ஏற்படும் நியாயமான கேள்விதான் இது.
இந்த வசனம் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவாகவே சொல்லப்பட்டது. அவ்வாறிருக்க, காபிர்கள், முஷ்ரிகீன்கள், முனாபிக்குகள் போன்றவர்களின் பிடரி நரம்பை விடவும் அல்லாஹ் நெருங்கியிருந்தானா? இல்லை என்று கூற முடியுமா? முடியாது. ஆனால் இதில் அவர்கள் அல்லாஹ்வை நெருங்கியிருந்தார்களா? என்பதே கேள்வி. அவர்களால் அல்லாஹ்வை நெருங்க முடியவில்லை என்பதை வரலாறுகள் மூலம் தெரிந்திருப்பீர்கள். ஏன் அவர்களுக்கு ஈமான் என்பது இல்லை. ஆனால், அல்லாஹ் திருக்குர்ஆனில்,
ياايها النبيّ اناارسلناك شاهدا ومبشرا ونذيرا وداعياالى الله باذنه
 
நபியே! நாம் உங்களை சாட்சி சொல்வோராகவும், சுபச் செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்வதற்காகவும், அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு அவன்பால் அழைப்பதற்காகவும் அனுப்பினோம். (அல்குர்ஆன் அஹ்ஸாப் 45,46)
இந்த வசனத்தை சற்று உற்று நோக்குங்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் உத்திரவு கொண்டு மக்களை அவன் பக்கம் அழைப்பார்களேயானால், அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைப்பார்களா? மாட்டார்களா?
எனவே இந்த இடத்தில் மேற்கூறிய அவனின் பிடரி நரம்பை விட நெருக்கமானவன் என்ற வசனம் உங்கள் சிந்தனையை விட்டும் எங்கே போனது? அல்லாஹ்தான் யாவற்றையும் பார்ப்பவனாகவும், கேட்பவனாகவும் இருக்கிறானே. அவன் தன் அடியார்களை தன் பக்கம் முன்னோக்கச் செய்யலாம்தானே?
அவ்வாறில்லாமல், 'வதாயின் இலல்லாஹி பிஇத்னிஹி' அவன் உத்திரவு கொண்டு அவன்பால் அழைக்க மற்றொருவரின் வருகை எதற்கு? இதில்தான் வஸீலா தெரிகிறது.
முஷ்ரிகீன்கள் சொன்னார்கள், நாம் இந்த (பொய்யான) கடவுள்களான லாத், உஸ்ஸா, மனாத், ஹுபல் போன்றவைகளை வணங்குவது இவைகள் எங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமுடையவர்களாக ஆக்கும் என்பதற்காகத்தான் என்று. ஆனால் அந்த சிலைகளுக்கு அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமடையச் செய்யும் சக்தி இருந்ததா? என்பதே கேள்வி.
அவைகள் அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமடையச் செய்யும் சக்தி பெற்றதுமல்ல. வணங்கப்படுவதற்கு தகுதியானதுமல்ல. வணங்கப்படுபவன் அல்லாஹ் ஒருவனேதான். நாம் அவனைத்தான் வணங்குகிறோம். அவ்லியாக்களை வணங்கவில்லை. ஆனால் அவ்லியாக்களை அல்லாஹ்வின் பக்கம் நெருங்குவதற்கு வஸீலாவாக கருதுகிறோமென்றால், உண்மையில் இவர்கள் அதற்கு தகுதியானவர்கள்தான்.
ஒரு படைப்பு எவ்விதம் வஸீலாவாக ஆக முடியும்? என்பதை நாம் தெரிந்திருக்க வேண்டும்.
அல்லாஹ்வை அறிந்து கொள்வதற்கு நமக்கு எவரினதும் உதவி தேவை என்பதற்கான காரணம் அவன் மறைந்திருக்கும் ஒன்றை அறிந்தவன், யாவற்றையும் பார்ப்பவன், சகலதையும் தெரிந்தவன். அவனுக்கு செய்ய முடியாத ஒன்றுமே இல்லை என்பதற்காகவோ அல்லது அவன் நம் பிடரி நரம்பை விட நெருக்கமானவன் என்பதற்காகவோ அல்ல. அப்படியானால் அவனை அறிவதற்கு மற்றொரு சிருஷ்டியை வஸீலாவாக ஆக்க வேண்டிய அவசியம் என்ன?
'அமலுன் ஸாலிஹுன்' என்று திருக் குர்ஆனில் ஒரு இடத்தில் வஸீலாவை மறைமுகமாக வலியுறுத்திய இறைவன் மற்றுமொரு இடத்தில்,
ياايها الذين آمنوا اتقو الله وابتغوا اليه الوسيله
எனதடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். மேலும் அல்லாஹ்வளவில் ஓர் வஸீலாவை (உதவியாளரைத்) தேடிக் கொள்ளுங்கள். (மாயிதா 6:35)
என்று நேரடியாகவே நீங்கள் வஸீலா தேடிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வே சொன்னபிறகு, அதை ஷிர்க் என்று சொல்வது திருக்குர்ஆனை மடத்தனமும், திருக்குர்ஆனை மறுப்பதும் ஆகுமல்லவா?
والله خلقكم وما تعبدون
உங்களையும் நீங்கள் புரியும் ஒன்றையும் படைத்தவன் அல்லாஹ்தான்' (ஸாப்பாத் 23:96)
நீங்கள் ஈமான் கொண்டவர்களாயிருப்பின், நல்லமல்கள் அல்லாஹ்வின் படைக்கப்பட்ட சிருஷ்டிதான் என்பதை தெரிந்திருப்பீர்கள்.
நல்லமல்களை வஸீலாவாக அமைக்க முடியுமென்றால், அச்செயலை புரிபவனை ஏன் வஸீலாவாக அமைக்க முடியாது?  அவ்லியாக்களை வஸீலாவாக ஆக்குவது உண்மையில் அமல்களின் வஸீலாவை ஏற்றுக் கொள்வதாகும்.
நன்றாக சிந்தித்துப் பார்த்தீர்களேயானால், எந்தவொரு நல்லமல்களும் எதுவரை அதை ஒரு நபரேனும் புரிந்து கொண்டு செயல்படவில்லையோ அதுவரையிலும் அவைகள் வஸீலாவாக அமைய முடியாதென்பது தெரியவரும்.

'அஃமால் ஸாலிஹா'
நல்லமல்களை நாம் அல்லாஹ்வின் கூற்றின் பிரகாரம் வஸீலாவாக அமைக்கின்றோம். ஆனால் நல்லமல்கள் என்பது ஒரு புதிய பொருள் அல்ல என்பதை சிந்தனையில் பதிய வைத்துக் கொள்ளுங்கள்.
தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்றவைகள் நல்லமல்கள்தான். ஆனால் இதை உலகில் எவராலும் நிலைநாட்டப் படாவிடில் நீங்கள் அதைப் பெற்றுக் கொள்ள முடியுமா?
ஆகவே நல்லமல்களை புரிவோர்கள் இல்லாது அதைப் பெற்றுக் கொள்ள முடியாதிருக்கையில் எப்படி அதை வஸீலாவாக அமைக்க முடியும்.?
நபிமார்கள், அவ்லியாக்களை வஸீலாவாக்குவது ஷிர்க்கான விசயம் எனக் கூறும் அறிவீனர்கள், தாங்கள் தொழும் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற அமல்கள் இவர்களுக்கு நல்லமல்களாக காட்சி தந்து அதைக் கொண்டு வஸீலா தேடி பயன்பெற்றிருக்கிறார்களா? இல்லையே!
ஏனெனில், முனாபிக்குள் தொழுகிறார்கள்தான்.  எவர்களது வணக்கங்கள் அவர்களின் உள்ளங்கள் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் பெருந்தன்மைக்கு சிறிதளவேனும் தரக்குறைவை ஏற்படுத்துமோ அவர்களின் அந்தச் செயலுக்கும் எவ்வித சக்தியும் கிடையாது.  இவர்களின் செயல்கள் அஃமால் சாலிஹா என்று முடிவு செய்யப்படவில்லை. இப்படிப்பட்டவர்களின் வணக்கங்களை நாம் இத்திபாஃ ரஸூல் எனக் கூற முடியாது. ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள், இமாம்கள், இறைநேசர்களின் வணக்கங்கள்தான் இத்திபாஉ ரஸூல் என்று போற்றத்தக்கதாகும்.
எனவேதான் இந்த அஃமால் ஸாலிஹா உடைய நல்லடியார்களைக் கொண்டு நாம் வஸீலா தேடுகிறோம். இந்த வஸீலா மூன்று வகைப்படும்.
1. இறைவா! முஹ்யித்தீன் ஆண்டவர்கள் பொருட்டால் எனது பிணியை நீயே நீக்கியருள் புரிவாயாக!
2. யா முஹிய்யத்தீன்! எனது பிணி நீங்க இறைவனிடம் பிரார்த்தனை புரிவீர்களாக!
3. யா முஹிய்யத்தீன் தாங்கள் இறைவனது பிரதிநிதியாகவும் அவனில் நின்றும் தத்துவத்தை அடையப் பெற்றவர்களாகவும் இருக்கிறீர்கள். எனவே தங்களையன்றி எனக்கு வேறு கதியில்லையாதலால் எனது பிணியைத் தாங்களே நீக்கியருள் புரிய வேண்டும்.
இந்த மூன்று வகை உதவி தேடுதலும் ஆகுமானதே.
படைப்புக்களில் சிறந்த படைப்பாகிய கருணை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருக்க, வலிமார்களை ஏன் வஸீலாவாக கொண்டு வருகிறீர்கள்? என்பது உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கேள்வி.
வலிமார்கள் என்போர் எமக்கும் கருணை நபிகளாருக்கும், கருணை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கும் படைத்த நாயனுக்கும் இடையே வஸீலாவாக அமைகிறார்கள். எனவே வலிமார்கள் பின்னே சென்று திருநபியை சென்றடைந்து அல்லாஹ்வைப் புரியலாம்.
இதற்கு ஆதாரங்கள் மார்க்கத்தில் உள்ளனவா? என்று பார்க்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள், இமாம்கள், நல்லறிஞர்கள் அனைவர்களும் வஸீலா தேடியிருப்பது நமக்கு ஆதாரமாக மார்க்கத்தில் நிறைந்து காணக் கிடைக்கின்றன. அவற்றிலிருந்து சில….

நபிகளாரின் வஸீலா:

அப்தால்கள் ஷாம் நாட்டில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நாற்பது பேர்களாகும். அவர்களில் ஒருவர் மரணிப்பார்களேயானால் மற்றொருவர் அவர் இடத்தில் நியமனம் செய்யப்படுகிறார். அவர்களின் பொருட்டினாலேயே மழை பொழிகிறது என்றும், அவர்களின் வஸீலாவைக் கொண்டே விரோதிகளிடமிருந்து வெற்றி கிடைக்கிறது என்றும் அவர்களினால்தான் ஷாம் தேசத்திற்கு வேதனை இறங்காமலிருக்கிறது என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு
(மிஷ்காத் 582-3)
நீங்கள் உங்கள் பலகீனமானோரில் என் பொருத்தத்தைத் தேடிக் கொள்ளுங்கள். அல்லது அவர்களில் என்னைத் தேடிக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர்கள் பொருட்டாலேயே உணவும் வெற்றியும் கிடைக்கின்றது.
அறிவிப்பாளர்: ஹழ்ரத் அபுத்தர்தா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: மிஷ்காத் பாபு பஸ்ஸில்புகராஃ 447ம் பக்கம்.

நபிகளின் பொருட்டால் வஸீலா:

لمّا اقترف آدم الخطيئة قال يارب اسالك بحق محمد لمّا غفرت لى فقال الله ياآدم وكيف عرفت محمداولم أخلقه؟ قال يارب لمّاخلقتنى بيدك ونفخت فيّ من روحك رفعت رأسى فرأيت على قوائم العرش مكتوبا لااله الاالله محمد رسول الله فعلمت انك لم تضف الى اسمك الاأحب الخلق اليك فقال الله صدقت ياآدم انه لاحبّ الخلق الّي ادعني بحقه وقدغفرت لك ولولا محمد ماخلقتك.
நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் செய்த ஒன்றை ஏற்றுக்கொண்ட பின் யா அல்லாஹ்! முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பொருட்டால் என்னை மன்னித்திடுவாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். அல்லாஹ் நபியவர்களை நோக்கி, ஆதமே! நீ எப்படி நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அறிந்தாய்? இன்னும் நான் அவர்களை படைக்கவும் இல்லை எனக் கூற, நபியவர்கள், எனது இரட்சகா! நீ உனது கரத்தால் என்னைப் படைத்து எனக்குள் ரூஹை அனுப்பிய சமயத்தில் நான் என் சிரசை உயர்த்தி அர்ஷைப் பார்த்தேன். அங்கே லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மத் ரஸூலுல்லாஹ் என உன் பெயருடன் மற்றுமோர் பெயரையும் இணைத்திருந்தாயல்லவா? இதனால் நான், நீயே உன் பெயருடன் மற்றொருவரின் பெயரைச் சேர்த்திருக்கிறாய் என்றால், நிச்சயமாக அவர் உன்னிடத்தில் சகல சிருஷ்டிகளையும் விட மிகப் பிரியத்திற்குரியவராக இருக்கும் என்று நினைத்தேன் என்றார்கள். அதற்கு அல்லாஹ் ஆதமே! நீர் கூறியது உண்மைதான். அவர் சகல படைப்புகளை விடவும் என்னிடத்தில் மிக மிக நெருக்கமானவரே! எனவே அவரின் பொருட்டால் நீர் என்னிடம் பிழை பொறுக்கக் கேட்டதால் நான் உம்மை மன்னித்து விட்டேன் எனக் கூறிய அல்லாஹ் அவாரை நான் படைத்திடாவிட்டால் உம்மையும் படைத்திருக்க மாட்டேன் என்றான். இதன் சனத் ஸஹீஹானதாகும்.

(அல் முஸ்தத்ரக், கிதாபுத் தாரீக் 2:615)

ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக இமாம் தப்ரானீ அவர்கள் முஃஜிம் கபிரீலும் முஃஜிம் அவ்சத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள், ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருமைத் தாயார் ஹஜ்ரத் பாத்திமா பின்த் அசத் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மறைந்ததும், ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹழ்ரத் அபு அய்யூபில் அன்ஸாரி, ஹழ்ரத் உசாமா பின்த்  ஜைத் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோரையும் ஒரு ஹபஷி அடிமையையும் கபுர் தோண்டுமாறு ஏவினார்கள். கப்ர் வெட்டுதல் முடிவடையும் சமயத்தில் அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அங்கே சமூகம் கொடுத்து கப்ரில் இறங்கி தங்களின் திருக்கரத்தாலும் மண்ணை வெளிப்படுத்தினார்கள். கப்ர் தோண்டி முடிந்ததும் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அக்கபுரில் சாய்ந்து கொண்டவர்களாக பின்வருமாறு பிரார்த்தித்தார்கள்.
'மரணிக்கச் செய்வதும், உயிர்ப்பிப்பதும் அல்லாஹ்தான் அவன் என்றும் உயிருள்ளவன். அவனுக்கு மரணம் என்பதே கிடையாது. என் பொருட்டாலும், என் முன் சென்ற நபிமார்கள் பொருட்டாலும் என் தாயார் பாத்திமா பின்த் அசத் அவர்களின் பாவங்களை மன்னித்து அவர்கள் நுழையும் இத்தலத்தை விசாலமாக்குவாயாக! நிச்சயமாக நீ மிகவும் இரக்கமுள்ளவன் எனப் பிரார்த்தனை செய்தார்கள்.
(வஃபாஉல் வஃபா 3:899)
ஸஹாபாக்களின் வஸீலா:
عن انس بن مالك ان عمربن الخطاب رضى الله عنه كان اذاقحطوا استسقى بالعباس بن عبد المطلب رضى الله عنه فقال اللهم اناكنانتوسل اليك بنبينا صلى الله عليه وسلم فتسقينا وانا نتوسل اليك بعم نبينا فاسقنا قال فيسقون
(மதினாவில்) மழைப் பஞ்சம் ஏற்பட்டால் உமருப்னுல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பொருட்டைக் கொண்டு மழை இறக்கித் தர இறைவனிடம் வேண்டுவார்கள். அவர்கள் சொல்வார்கள், இறைவா! நாங்கள் நபிகள் கோமான் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வஸீலாவாக்கி-பொருட்டாக்கி மழையைத் தேடினோம். மழை இறக்கினாய். இப்பொழுது அண்ணலின் பெரிய தந்தை அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை பொருட்டாக்கி மழை கேட்கிறோம். மழை அருள்வாய் எனக் கூறுவாhகள். இப்படி துஆக் கேட்டால் உடனே மழை பொழியும்.
அறிவிப்பாளர்: அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி பாகம் 1 பக்கம் 138.

ஹஜ்ரத் சுலைம் பின் ஆமிர் சுபாயீரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பு செய்கிறார்கள், மக்கள் நீரில்லாப் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தார்கள். ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களும், திமிஷ்க் நாட்டு மக்களும் மழை தேடிப் பிரார்த்திப்பதற்காக வெளியானார்கள். ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மிம்பரில் உட்கார்ந்த போது ஹழ்ரத் யஜீத் பின் அஸ்வத் அல் ஜரஷிய்யூ ரலியல்லாஹு அன்ஹு அவர்களை எங்கே? எனக் கேட்டார்கள். இவர்களைத் தேடி சென்றனர் சிலர். தன்னை தேடப்படும் செய்தி எட்டிய ஹழ்ரத் யஜீத் அவர்கள் ஓடோடி சபைக்கு வந்ததும், ஹழ்ரத் முஆவியா ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஏவல் பிரகாரம் மிம்பரில் ஏறி அவர்களின் பாதத்தடியில் உட்கார்ந்து கொண்டார்கள். யா அல்லாஹ்! நாம் இன்று சிறந்த ஒரு மனிதாரின் சிபாரிசை முன்வைக்கின்றோம். யா அல்லாஹ்! உன்னிடம் யஜீத் பின் அல் அஸ்வத் பின் அல் ஜீர்ஷிய்யின் பொருட்டால் மழையைத் தருமாறு கேட்கின்றோம் என்றார். ஹழ்ரத் முஆவியா அவர்கள் யஜீத் அவர்களை நோக்கி கையை உயர்த்திக் கேளுங்கள் எனக் கூற ஹழ்ரத் யஜீத் அவர்கள் கையை உயர்த்தினார்கள். வீற்றிருந்தோர்கள் எல்லோரும் கரங்களை உயர்த்தி துஆக் கேட்டார்கள். திடீரென மேற்கு பக்கமாக முகில் கூட்டம் தென்பட்டு பெரும் இடி முழக்கத்துடன் மழை பொழிந்தது. கடைசியில் கூடியிருந்தோர் வீடுகளைச் சென்றடைவதே கஷ்டமாகிவிட்டது.
நூல்: அத்தபகாத் 7: 444

நான்கு இமாம்களின் வஸீலா:
ஹழ்ரத் இமாம் அபூஹனீபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
يا مالكى كن شافعى فى فافقتى               انى فقير فى الورى لغناك
يااكرم الثقلين ياكتر الورى         جدلى بجودك وارضنىبرضاك
اناطاحع بالجودمنك ولم يكن             لابي حنيفة فى الانام سواك
என் எஜமானே! என் கஷ்ட நிலையில் எனக்குச் சிபாரிசாளனாயிரு. உலக படைப்புகளில் உன் தயாளத் தன்மையின் பக்கம் நான் தேவையானவன். மனு ஜின்களில் தலை சிறந்தவரே! உலக பொக்கிஷமே! உங்கள் கொடையால் என்னைப் பாருங்கள். உங்களை ஏற்றவனாக என்னைப் பொருந்துங்கள். நான் உங்கள் அருளின் பக்கம் தேவையானவன். உங்களைத் தவிர இந்த ஹனீபாவுக்கு எவருமே இல்லை என பிரார்த்தித்திருக்கின்றார்கள்.
(கலீதா நுஃமானிய்யா 199-200)
ஹஜ்ரத் இமாம் மாலிக்கி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு சமயம் மஸ்ஜித் நபவியில் அமர்ந்திருந்தார்கள். அப்போது அப்பாஸியர்களின் இரண்டாவது கலீபா மன்சூர் என்பவர் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ரௌழா ஷரீபுக்கு வருகை தந்தார். அவர் ஹஜ்ரத் இமாம் அவர்களிடம், நான் கிப்லாவை (கஃபாவை) முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? அல்லது நபிகளார் அவர்களை முன்னோக்கி துஆ கேட்கட்டுமா? என விசாரித்தார். அதற்கு இமாம் அவர்கள்,
ولم تصرف وجهك عنه وهووسيلتك ووسيلة ابيك آدم الى الله تعالى بل استقبله واستشفع به فيشفّعه الله فيك
உனக்கும் உன் தகப்பனார் நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும் வஸீலாவான கருணைக் கடல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவ pட்டும் ஏன் உன் முகத்தைத் திருப்பப் போகின்றாய்? வேண்டாம். நீ அவர்கள் பக்கமே திரும்பிக் கேள். அவர்கள் பொருட்டால் அல்லாஹ் உன்னை மன்னித்திடுவான் என்றனர்.
நூல்: அஷ்ஷிஃபா 2:33
ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
آل النبى ذريعتى   وهم اليه وسيلتى
ارجوابهم اعطى غدا بيدى اليمين صحيفتى
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் எனக்கு உபகாரமளிப்போர், அவர்கள் அல்லாஹ் பக்கம், எனது வஸீலா. அவர்கள் பொருட்டாலேயே நாளை மறுமை நாளில் என் பட்டோலை எனது வலது கரத்தில் கிடைக்கும் என நினைக்கிறேன் என்கின்றனர்.
நூல்: அஸ்ஸவாயிகுல் முஹ்ரிகா பக்கம் 180.
ஹழ்ரத் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,
இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பொருட்டால் துஆ கேட்டார்கள். இதை செவியுற்ற அவர் புதல்வர் ஹழ்ரத் அப்துல்லாஹ் அவர்கள் ஆச்சரியமுற்று,

இன்னஷ்ஷாபியிய்ய கஷ்ஷம்சி லின்னாசி, வகல் ஆஃபியதி லில்பதனி

இமாம் அஹ்மத் அவர்கள், இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்கு சூரியனையும், சரீரத்திற்கு சுகத்தையும் போன்றவர் என பதிலளித்தார்கள்.
நூல்: ஷவாஹிதுல் ஹக் பக்கம் 166.
இமாம்கள், ஷெய்குமார்கள் பார்வையில் வஸீலா:
இமாம் ஹுஜ்ஜத்துல் இஸ்லாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'இஹ்யா உலூமுத்தீன்' நூலில் பாகம் 2 பக்கம் 247ல் பிரயாணத்தின் நடைமுறைகளைப் பற்றிக் கூறுகையில்,
ويدخل فى جملته زيارة قبر الا نبياء عليهم السلام وزيارة قبور الصحابة والتابعين وسائر العلماء والا ولياء وكل من يتبرّك بمشاهدته فى حياته يتبرّك بزيارته بعد وفاته ويجوز شد الرحال هذا الغرض
பிரயாணத்தின் இரண்டாவது பிரிவு நபிமார்கள், ஸஹாபாக்கள், தாபிஈன்கள், அவ்லியாக்கள், நல்லடியார்களின் அடக்கஸ்தலங்களுக்குச் செல்வதாகும். உலக வாழ்க்கையில் எவர்களைச் சென்று தரிசிப்பதால் பிரயோஜனம் கிடைக்குமோ அவர்களை மரணித்த பின்பும் சென்று தரிசிப்பதில் பிரயோசனம் கிடைக்கின்றது. இச்செயலுக்காக பிரயாணம் செய்வதும் ஆகுமானதுதான்.
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'அல் மஜ்மூஃ அன்நப்ஹானிய்யா' பாகம் 2 பக்கம் 391 ல் கூறுகிறார்கள்,
يا سيدى يارسول الله قدشرفت    قصائدى بمديح قدرصفا
مدحتك اليوم ارجوالفضل منك غدا   من الشفاعةفالحظى بهاطرفا
بكم توسل يرجو العفو عنزلل   من خوفه جفنه الهامى لقدذرفا
நபியே நாயகமே! அல்லாஹ்வின் தூதரே! உங்களைப் புகழ்ந்து பாடியதால் என் கஸீதாக்கள் சிறப்புடையதாகிவிட்டன. இன்று நான் உங்களைப் புகழ்ந்தேன். நாளை மறுமையில் உங்கள் சிபாரிசை ஆதரவு வைக்கின்றேன். உங்கள் கருணையை என் மீதும் காட்டுங்கள். உங்களை வஸீலாவாக்கி என் பிழைகளை மன்னிக்க கோருகிறேன் என்று.
ஷெய்குல் இஸ்லாம் ஷிஹாபுத்தீன் ரமலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இக்கால பொதுமக்கள் கஷ்ட நஷ்ட நேரங்களில் யாஷெய்க் கவாஜா முயீனுத்தீன் இப்படியாக அவர்களை அழைத்தும் உதவி தேடுகின்றனரே! இம் மக்களால் அழைக்கப்படுவோர் மரணமான பின்னரும் அழைப்போருக்கு உதவி புரிய, அழைப்புக்கு பதிலளிக்க முடியுமா? எனக் கேட்கப்பட்டது. அதற்கு ஷெய்குல் இஸ்லாம் அவர்கள் நபிமார்களைக் கொண்டும், வலிமார்களைக் கொண்டும் உதவி தேடலாம். ஏனெனில் அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் எவ்விதம் உதவிகள் செய்தனரோ அவ்விதமே மறைவுக்குப் பின்பும் அவர்களால் உதவி செய்ய முடியும். அது நபிமார்களுக்கு அளிக்கப்பட்ட முஃஜிஸாத்தும், வலிமார்களுக்கு அளிக்கப்பட்ட கராமத்தும் ஆகும் என்றனர்.
நூல்: மஷாரிகுல் அன்வார் பக்கம் 59 .
காயல்பட்டணம் தந்த மாமேதை அல் குத்புல் உஜூது ஷெய்குனா ஷெய்கு அப்துல் காதிர் ஸூபி ஹழ்ரத் கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்கள் வஸீலா-இஸ்திஙாதா என்னும் குத்பிய்யா பற்றி தமது முரீதிற்கு எழுதிய கடிதத்தில்,
'….. பொதுவாக அவுலியாக்களை கொண்டு வஸீலா தேடுவது என்ன, எல்லா பொருளைக் கொண்டு கூட வசீலா தேடுவதும் ஆகுமானது. குர்ஆனிலும் ஹதீதுகளிலும் நிறைய வந்துள்ளது. வசீலாயில்லாமல் ஒரு காரியமும் நடக்காது. அல்லாஹ் எல்லாத்தையும் ஸபபுகளை வைத்து ஸபபுகளைக் கொண்டேதான் நடத்துகிறான். வஸீலா… ஸபபுகளை அல்லாஹ்வின் செயல் வெளியாகும்தானம் -வகை என்று நம்பிக் கொண்டு கேள்பதுக்குத்தான் சொல்லப்படும். ஒருகால் செயலை ஸபபு பக்கம் சேர்த்து உதாரணமாக அவுலியாக்களிடத்தில் நீங்கள் உதவி செய்யுங்கள் என்று நேரடியாகவே கேட்டால் இதற்கு அவர்களிடத்தில் உதவி தேடுதல-; இஸ்திஙாதா என்று பொருள். எத்தனை பேர்கள் சொன்ன போதிலும் இதுவும் வசீலாதான். அதாவது அவுலியாக்களை அல்லாஹ்வின் உதவி வருகிற வழி என்று நம்பி கொள்கிறது. இதுதான் முஸ்லிம்களுடைய கருத்து. ஏன் அவர்கள் சகல செயல்களும் அல்லாஹ்வுடையது. அவனிலின்றும் சகலமும் உண்டாகிறது என்று நம்பினார்கள். அவர்கள் வாயிலிருந்து செயலை அவுலியா பக்கம் சேர்த்து வைத்தால் இது செயலை வலி பக்கம் சேர்த்தாகும். அதாவது நிஸ்பத்து மஜாஸியாகும். நிஸ்பத்து மஜாஸிதான் என்பதற்கு அவர்கள் முஸ்லிமாக இருப்பது போதியதாக இருக்கும். அவர்கள் பேரில் அவர்கள் நிஸ்பத்து ஹகீகிய்யாகத்தான் சேர்ந்திருக்கிறார்கள். அதாவது அவுலியாக்களை அவர்களே சுயமாக செய்கிறார்கள் என்று நம்பி செயலை அவர்கள் பக்கம் சேர்த்து சொல்கிறார்கள் என்று அவர்கள் பேரில் கெட்ட எண்ணம் வைப்பது கூடாது. கெட்ட எண்ணம் வைப்பது ஹறாமாகும். வஹ்ஹாபிகள் முஸ்லிம்கள் பேரில் கெட்ட எண்ணம் வைத்துக் கொண்டே அல்லது அவர்களுக்கு வசீலா என்றால் என்ன ஷிர்க்கு என்றால் என்ன வென்றும் தெரியாமலே கண்டதையெல்லாம் ஷிர்க்கு என்று இதுபோலவே பித்அத்து என்றால் என்ன வென்றும் தெரியாமல் உளறுகிறார்கள். செயலை நேரடியாக மற்றவர்கள் பக்கம் சேர்த்து வைக்கிற குர்ஆன், ஹதீது மற்றும் பெரியார்களுடைய வார்த்தை, என்ன சகலர்களுடைய பேச்சிலும் கலந்திருக்கிறது…..' என்கிறார்கள்.
ஆக வஸீலா தேடுவது இஸ்லாமிய மார்க்கத்தின் ஏகோபித்த முடிவு படி ஆகுமான செயலே. அது நல்லமல்களைக் கொண்டாயினும் (இதுவும் நல்லடியார்களைக் கொண்ட வஸீலாதான்), நல்லடியார்களைக் கொண்டாயினும் சரி என்பது நமக்குத்  தெளிவாக விளங்குகிறது. அல்லாஹ் நம் அனைவர்களையும் ஹபீப் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஸஹாபாக்கள், இறைநேசர்கள் பொருட்டால் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையில் இறுதிவரை நிலைக்கச் செய்து மரணிக்கச் செய்வானாக! ஆமீன்.
முற்றும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "வஸீலா – ஒரு ஆய்வு!"

தௌஹீதும் ஷிர்க்கும்-Thowheed and Shirk


By: மௌலவி அஸ்ஸெய்யித் ஹாஃபிள் அப்துர் ரஹ்மான் பாகவி ஃபாளில் அஹ்ஸனி அவர்கள்.
'தவ்ஹீத்' என்ற வார்த்தையின் நேரடி பொருள் ஏகத்துவம், ஏகத்துவப் படுத்துல் ஆகும். படைப்புகளிலிருந்து படைத்தவனை தனித்தன்மையுடன் தூய்மைப் படுத்துவதாகும் இதன் நோக்கம். இஸ்லாமிய உலகில் தவ்ஹீத் என்பதின் உட்கருத்து இறைத்தன்மையிலும், அதன் பிரிவுகளான தனித்தன்மைகளிலும் அல்லாஹ்விற்கு இணையானவன் இல்லை என்று உறுதியாக நம்புவதாகும்.
இறைத் தன்மை என்றால், காலங்களுக்கும், இடங்களுக்கும் அப்பாற்பட்டு எப்போதும் இருப்பவன் என்ற கருத்தைக் கொண்ட 'வாஜிபுல் வுஜூத்' என்பதாகும்.
தனித் தன்மைகள் என்பது படைத்தல், காத்தல், வணங்குவதற்கு தகுதியாகுதல் போன்ற அடிப்படைத் தன்மைகளாகும். இறை தன்மையிலும், அதை அடிப்படையாக வைத்து வருகின்ற தனித் தன்மைகளிலும், அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி அவன் ஏகத்துவத்தை நம்பிக்கை கொள்ள, தவ்ஹீதை அறிவது கட்டாயமாகிறது.
ஏகத்துவத்தின் அடிப்படை:

அல்லாஹ்வின் தனித்தன்மையின் அஸ்திவாரம் செயல்பாட்டை கொடுக்கின்ற அத்துணை சக்திகளும், அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமாக்குதலாகும். அதில் எள்ளளவும், அணுவளவோ அதைவிட குறைவாகவோ, எந்தப் படைப்பினங்களுக்கும் சொந்தமாக்காமல் இருப்பதாகும். அல்லாஹ்வே தன் ஏகத்துவத்தைப் பற்றி நமக்கு இக்லாஸ் எனும் சிறு அத்தியாயத்தில் தெளிவுபடுத்துகிறான்.
நபியே! எடுத்துச் சொல்லுங்கள் 'அல்லாஹ் ஏகன்' என்று. –அல் இக்லாஸ் வசனம்1.
இந்த அஹது என்ற ஏகனின் விளக்கத்தை அடுத்த வசனமாகிய 'அல்லாஹ் தேவையற்றவன்' என்பது தெளிவுபடுத்துகிறது. இந்த இரு வசனங்களுமே தவ்ஹீதின் அடிப்படையாகத் திகழ்கிறது.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த வசனத்திற்கு விளக்கவுரை தருகின்ற போது தனித்தன்மை பெற்று எந்த விஷயத்திலும் யாரிடமும், தேவையாகாமலும், அனைத்து வஸ்துக்களும் எல்லா நிலையிலும் அவன் பக்கமே தேவையாகுதலுமாகும் ஸமதின் சுருக்கமான விளக்கம். தஃப்ஸீர் அபுஸ்ஸுஊத் சொல்கிறது: 'தான் தேவையற்றவனாக எல்லா நிலையிலும் இருப்பதே மற்றவைகள் அவனிடம் தேவையாகிறது என்பதை உணர்த்துகிறது.'
திருக்குர்ஆன் விரிவுரையாளரான இமாம் ராஸீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்: பொதுவாக 'தவ்ஹீத்' என்றால் உலகைப் படைத்து காத்து நிர்வாகம் செய்பவன் ஒருவன்தான் என்று விளங்குவதும், அடியானுக்கு எந்த செயலிலும் சுயசக்தி கொண்டு செயல்பட முடியாது என்று நம்புவதும் ஆகும். ஏகன் என்பதற்கு 'பொதுப் பொருள்' கொடுத்தால் ஒவ்வொரு மனிதனும் படைப்பாலும், குணநலன்களாலும், கைரேகைகளாலும் தனித்தவனாகத் திகழ்கிறான். ஒருவனுக்கு துல்லியமான இணை மற்றொருவனில் பார்க்க முடியாது என்பதை உலகமும், மார்க்கமும், தெளிவுபடுத்துகிறது. எனவே அல்லாஹ் ஏகன் என்றால் தேவையற்றவன், அனைத்தும் அவன் பக்கமே தேவையாகின்றன என்பது தெளிவாகிறது.
அல்லாஹ் பார்ப்பவன், கேட்பவன், சக்தியுள்ளவன் என்று நாம் விளங்கியதைப் போன்று மனிதனும் பார்ப்பவன், கேட்;பவன், சக்தியுள்ளவன் என்று தெளிவாக விளங்குகிறோம். ஆனால் அல்லாஹ் உறுப்புகளின் தேவையோ, சக்தியை கொடுப்பவனின் தேவையோ, மற்றவைகளின் தேவையோ அன்றி செயல்படுபவன். மனிதனோ, சக்தியைக் கொடுக்கும் அல்லாஹ்வின் பக்கம் பல வழிமுறைகளில் தேவையாகி செயல்படுகிறான்.
மனிதனுக்கும், விலங்குகளுக்கும் மற்ற படைப்புகளுக்கும் சக்தி இல்லையா? என்றால் அல்லாஹ் கொடுத்த அல்லாஹ்விடம் தேவையாகிற சக்தி இருக்கிறது. அல்லாஹ்வின் சக்தியோ, யாராலும் கொடுக்காத, கொடுக்க முடியாத சுய சக்தியாகும். இவ்வாறு வித்தியாசங்களை விளங்க முற்பட்டால் தவ்ஹீதும் தெளிவாகும். முரண்பாடுகளும் உருவாகாது. மாற்றுக் கருத்துக்கள், முரண்பாட்டினை உருவாக்கி அடிப்படையையே தகர்த்து விடுகிறது. தவ்ஹீதை உறுதிபடுத்த அதனுடைய எதிர்பதமாகிய 'ஷிர்க்'கை அறிவதும் அவசியமாகிறது.
'ஷிர்க்;' என்றால் தவ்ஹீதின் நேர் எதிர் கருத்தாகும். இறைத் தன்மையிலும் அதன் தனித்தன்மைகளிலும், அல்லாஹ்விற்கு இணையானவன் இருக்கிறான் என நம்பிக்கை கொள்வதாகும்.
தனித்தன்மையில் வணக்கத்திற்கு தகுதியானவனாக இருத்தலும், கட்டுப்படும். எனவே வணக்கத்தின் விளக்கத்தையும், தெளிவாக அறிகிறபோது தான் தவ்ஹீதின் பரிபூரண பொருள் விளங்கும்.
பரிபூரண கண்ணியத்துடன் செயல்களை கொண்டு வருவதைப் பற்றிய வாசகத்திற்கே வணக்கம் எனப்படும்.
பரிபூரண கண்ணியம் என்பது பணிவின் உச்சகட்ட நிலையின் மிக உயர்வான நிலையில்தான் வெளிப்படும். இந்த அடிப்படையில் அல்லாஹ் ஏவியவைகளை எடுப்பதும், தடுத்தவைகளை தவிர்ந்துக் கொள்வதும் வணக்கம் என்ற பொருள் கொடுத்தாலும் இவைகள் பணிவின் மிக உச்சநிலையில் வெளிப்பட்டால் மட்டுமே வணக்கங்களாகும்.
உபகாரம், அதிகாரம், இவைகளின் அடிப்படையில் தான் கண்ணியத்தின் தரம் மதிக்கப்படுகிறது. பரிபூரண அதிகாரமும், உயர்ந்த உபகாரமும் கொண்டவனுக்கே பரிபூரண கண்ணியமும் பணிவும் கிடைக்கிறது.
முஸ்லிம்களின் நம்பிக்கையில் அல்லாஹ்வே மிக உயர்ந்த அதிகாரத்திற்கும், உபகாரத்திற்கும் சொந்தக்காரன். எனவே அவனுக்கு கொடுக்கும் பணிவை, கண்ணியத்தை மற்ற யாருக்கும் முஸ்லிம்கள் கொடுக்கவே மாட்டார்கள். அல்லாஹ்விற்கே வணக்கம் என்பதை சொந்தமாக்குவார்கள்.
இப்பொருளில் அல்லாஹ்விற்கு கொடுக்கும் மிக உயர்ந்த பணிவுடனும் கண்ணியத்துடனும் யாருக்கு கட்டுப்பட்டாலும் அது வணக்கமாகவே மாறும். எல்லா பணிவுகளையும், மரியாதை செய்தல்களையும், கண்ணியப்படுத்துதலையும் வணக்கம் என்று சொல்லவோ, ஷிர்க் என்று கூறவோ அனுமதியில்லைஎன்பதை மனதில் நிறுத்த வேண்டும்.
இது போன்ற அல்லாஹ்வின் தனித்தன்மைகளின் பெயர்கள் நபிமார்களுக்;கும், மற்ற படைப்பினங்களுக்கும் புழங்கப்படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கருணையாளர், கிருபையாளர் என்று அல்லாஹ் புகழ்கிறான். இங்கு நாம் அல்லாஹ்வின் அன்பும், கருணையும் யாரிடமிருந்தும் பெற்றதாக இருக்காது என்றும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பும் , கருணையும் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் விளங்குகிறோம். இதுபோன்றே அல்லாஹ்விடம் உதவி தேடும்போது அல்லாஹ்வின் உதவி புரியும் ஆற்றல் பிறரால் கொடுக்கப்பட்டது என்ற எண்ணத்துடனோ, குறைவை ஏற்றுக் கொள்வது என்ற அடிப்படையில் உதவி தேடினால் அல்லாஹ்வை விளங்காத நிலையில் அவனை படைப்புகளுடன் ஒப்பிடும் நிலை ஏற்படுகிறது.
அதே போன்று அவனது படைப்புகளிடம் உதவி தேடும் போது படைப்புகளின் உதவி புரியும் சக்தி அல்லாஹ்வால் கொடுக்கப்படாத 'சுய சக்தி' என்ற எண்ணத்துடன் உதவி தேடினால் அது அல்லாஹ்வின் தனித்தன்மையை படைப்புகளுக்கு கொடுத்து 'இணைவைத்தல்' உருவாகிவிடும். 'ஷிர்க்' உருவாவதற்கு எண்ணமே அடிப்படை. உதவி தேடப்படுபவை உயிருள்ளவையா, உயிரற்றவையா, மனிதனா, மற்ற படைப்புகளா என்பதல்ல.
படைப்புகளுக்கு சுய ஆற்றல் இல்லை என்ற நம்பிக்கையில் இறந்தவர்களிடமோ , உயிருள்ளவர்களிடமோ உதவி தேடுவதில் மார்க்கத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. மரணம் என்பது இறையச்சம் நிறைந்த மக்களுக்கு இல்லாமை, முற்றிலும் அழிந்து போகுதல் என்பது இல்லை. அல்லாஹ் குர்ஆனில் 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் கோபம் கொண்ட கூட்டத்தினரை நண்பர்களாக ஆக்காதீர்கள். மண்ணறை வாசிகளிலிருந்து நிராகரிப்போர், நிராசையானதைப் போன்று மறுமையிலிருந்து இவர்கள் நிராசையாகி விட்டார்கள்.'
இதில் மண்ணறை வாசிகளில் நிராசை என்பது என்ன? என்ற விளக்கத்தில் திருக்குர்ஆன் விரிவுரையாளரான பைளாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: அவர்கள் எழுப்பப்படுவதிலும், கூலிக் கொடுக்கப்படுவதிலும், மண்ணறை வாசிகளிலிருந்து நலவை அடைவதிலும் நிராசையாவார்கள் என்ற விளக்கத்தின்படி மரணித்தவர்களிடமிருந்து உதவி கிடைப்பதை மறுப்பது 'காபிர்கள்'; என்ற இறை மறுப்பாளர்களின் பண்பு என்பது விளங்குகிறது. அல்லாஹ் மரணித்த பின்னும் உதவி செய்யும் ஆற்றல் கொடுத்தால் அதை மறுப்பவர் யார்? என்பதை சிந்திப்போம்.
தௌஹீதிற்கு பங்குகளா?

தௌஹீதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, ஸஹாபாக்களோ, தாபிஈன்களோ, 'ரூபூபிய்யத் உலூஹிய்யத்'-'அஸ்மா வஸ்ஸிபாத்' எ ன பங்கு போடவில்லை. காரணம் இறைத் தன்மை என்று சொல்லுகிறபோது உலூஹிய்யத்தும் தனித்தன்மை என் வார்த்தையில் படைத்தல், காத்தல், மற்றும் அல்லாஹ்வின் திருநாம செயல்களும் கட்டுப்படும். ஏதாவது ஒன்றை இழந்தாலும் முழு தவ்ஹீதே பறிபோய் விடுகிறபோது பங்கு போடுவதில் பயன் இல்லை என்பது தெளிவாகிறது. இப்படி பங்கு போடுவது முஸ்லிம்களை இணை வைத்தவர்களாக மாற்றிக் காட்டுவதற்கான குதர்க்க முயற்சியாகும்.
மக்கா முஷ்ரிக்குகளின் நம்பிக்கை:
மக்கா முஷ்ரிக்குகள் பல தெய்வங்களை வணங்கினாலும், அல்லாஹ்வையும், ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையை முஷ்ரிக்குகளின் நம்பிக்கையோடு இணைத்து முஸ்லிம்களை முஷ்ரிக்குகளாக்கும் பெரும் முயற்சி நடப்பதால் மக்கா இணைவைப்பாளர்களின் நம்பிக்கையைப் பற்றி சுருக்கமாக விளங்க வேண்டியுள்ளது.
மக்கா முஷ்ரிக்குகள் அல்லாஹ்வையும், இறைவனாக நம்பி, மற்ற சிலைகளையும் இறைவனாக, இறைத்தன்மை பெற்றவர்களாக வேத நம்பிக்கை கொள்கிறார்கள். சிலைகளின் சக்திகளை அல்லாஹ் கொடுக்காத சுயசக்திகளாகவே நம்பிக்கை வைத்தார்கள் என்பதை பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் ராஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மக்கா இணைவைப்பாளர்கள் தங்கள் சிலைகளுக்கு சொந்தமாக இடைஞ்சல் செய்யவும், உபகாரம்  செய்யவும், சிபாரிசு செய்யவும் சக்தி உண்டு என நம்பியிருந்தார்கள். இப்படி எந்த முஸ்லிமும் நம்பிக்கை வைப்பதில்லை. இந்த நம்பிக்கையே இணைவைத்தலாகும்.
மக்கா முஷ்ரிக்குகள் சிலைகளை இறைவனாகவே நம்பியிருந்தார்கள் என்பதை 'அல்லாஹ்வுடன் வேறு இறைவன் இருந்தால் அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ்விடத்தில் அவர்கள் வழி தேடியிருப்பார்கள்' என்ற வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
முஸ்லிம்கள் 'நபி', 'வலி' எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள். அல்லாஹ்வின் நேசர்கள், அல்லாஹ்வின் எந்த சக்தியும் அவர்களுக்கு இல்லை என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். அல்லாஹ்வின் எந்த தன்மைகளையும், யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்டவர்களின் சிறப்பை மறுக்கவும் மாட்டார்கள் என்பதை விளங்குவோம்! சத்திய தவ்ஹீதை விளங்கி நிலைத்திருப்போம்.!!!
முற்றும்.
நன்றி: அல் மின்ஹாஜ் 05
அல் ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி,
                                 திருவிதாங்கோடு, குமரி மாவட்டம்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "தௌஹீதும் ஷிர்க்கும்-Thowheed and Shirk"

திருத்தப்பட வேண்டிய சிந்தனைகள்


டாக்டர். அஸ்ஸெய்யித் முஹம்மத் அலவீ மாலிகீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ், மக்கா ஷரீஃப்.
டாக்டர். செய்யித் முஹம்மத் அலவீ மாலிகீ கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஜீஸ் அவர்களின் உலகப் புகழ் பெற்ற 'மஃபாஹீம் எஜிப் அன் துஸஹ்ஹஹ்' என்ற நூலின் மரணத்திற்குப் பின் கராமத்துக்கள்' என்ற 36வது அத்தியாயத்தின் மொழியாக்கம் இது.
காலப் போக்கில் முஸ்லிம் சமுதாயத்தில் நுழைக்கப்பட்ட இஸ்லாமிய விரோதக் கொள்கைகளைத் தகர்த்தெறிவதில் இந்நூல் பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. இந்நூல் பத்திற்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளிவந்துள்ளது. ஐக்கிய அரபு நாடுகள், எகிப்து, சிரியா அரசுகள் இலட்சக்கணக்கான பிரதிகள் அச்சிட்டு இலவசமாக வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
யஸீத் இப்னு மஹ்தி சொல்கிறார்கள்: உமர் இப்னு அப்துல் அஜீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து நான் விடைபெற்றுச் செல்லும்போது சொன்னார்கள், 'உங்களிடம் எனக்கு ஒரு தேவை இருக்கிறது.' 'அமீருல் முஃமினீன் அவர்களே! என்ன தேவை அது?' என்று கேட்டேன். 'நீங்கள் மதீனாவிற்கு சென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்றை ஜியாரத் செய்வீர்கள் அல்லவா! அப்போது எனது ஸலாமை திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குச் சொல்லுங்கள்' என்றார்கள்.
ஹாதிம் இப்னு வர்தான் சொல்கிறார்கள்: சிரியாவிலிருந்து பிரத்யேக தூதர்களை நபி ஸல்லல்லாஹ    { அலைஹி வஸல்லம்  அவர்களுக்கு சலாம் சொல்வதற்காக கலீபா உமர் பின் அப்துல் அஜீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மதீனாவிற்கு அனுப்பி வைப்பார்கள்.' காழி இயாழ் அவர்கள் தமது அஷ்ஷிஃபா என்ற நூலில் (2:83) இச்செய்தியை பதிவு செய்துள்;ளார்கள்.
திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஸலாம் சொல்லி அனுப்புதல் ஸஹாபாக்கள், தாபிஈன்களின் வழக்கம். இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும், ஹழ்ரத் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு, ஹழ்ரத் உமர் பாரூக் ரலியல்லாஹு அன்ஹு ஆகியோருக்கும் சலாம் சொல்லி அனுப்புவார்கள் என அல்லாமா கஃபாஜி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தொலைவிலிருந்து உரைக்கும் சலாமுக்கு பயனுண்டு. எனினும் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சன்னிதானத்தில் நின்று சலாம் கூறுதல் தனிச் சிறப்பு. (நஸீமுர் ரியாழ் கஃபாஜி 3:56)
ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூலான தாரிமியில், இமாம் அபூ முஹம்மத் அப்துல்லாஹ் தாரிமீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பின்வருமாறு எழுதுகிறார்கள்:
'ஹர்ரா யுத்த வேளையில் மூன்று தினங்கள் தொடர்ந்து மதீனா பள்ளியில் பாங்கு ஒலிக்கவில்லை. அப்போது ஸஈத் இப்னு முஸைய்யப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளியில் தங்கி இருந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரிலிருந்து கேட்ட சப்தத்தை வைத்து தொழுகையின் நேரங்களை அவர்கள் அறிந்து கொண்டார்கள்.' (தாரிமி 1:44) முஹம்மது இப்னு அப்துல் வஹ்ஹாப் தனது அஹ்காமு தமன்னில் மவ்த்திலும், மற்றும் ஃபைரூஸாபாதி தமது அஸ்ஸிலாத்து வல் பிஷ்ரிலும் இந்நிகழ்ச்சியை பதிவு செய்துள்ளனர்.
இப்றாஹீம் இப்னு ஷைபான் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: ஹஜ்ஜை முடித்துக் கொண்டு, மதீனா சென்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கப்ருக்கருகில் நின்று சலாம் சொன்ன போது, கப்ரிலிருந்து 'வஅலைக்குமுஸ்ஸலாம்' என பதில் வந்ததை செவியுற்றேன்.
இப்னு தைமிய்யா தனது நூலில் 'கப்ருகளை பள்ளியாக்காதீர்' என்ற ஹதீதுக்கு விளக்கம் எழுதுகிறபோது, மேற்சொன்ன நிகழ்வுகளைத் தெரிவிக்கிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது கப்ரிலிருந்தோ, ஸாலிஹானவர்களின் கப்ருகளிலிருந்தோ ஸலாமுக்கு சிலர் பதில் கேட்டதாக அறிவிக்கப்படுவதும், ஸஈத் இப்னு முஸய்யப் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் ரவ்லா ஷரீபிலிருந்து பாங்கு கேட்டதும் மறுக்கப்பட வேண்டியவை அல்ல.' (இக்திளாஉ ஸிராத்துல் முஸ்தகீம் பக்கம் 373)
இப்னு தைமிய்யா மேலும் எழுதுகிறார்: 'நபிமார்கள், ஸாலிஹானவர்களின் கப்ருகளுக்கருகில் பிரகாசம் ஏற்படுதல், மலக்குகள் வருகை தருதல், ஷெய்த்தான்கள் அவற்றுக்கருகில் செல்ல முடியாமை, தீ விபத்து மற்றும்  ஆபத்துக்களிலிருந்து கப்ரும், சுற்றுப்புறங்களும் பாதுகாப்புப் பெறுதல், தங்களுக்கருகே அடக்கம் செய்யப்படுவர்களுக்காக அவர்கள் சிபாரிசு செய்தல், கப்ருகளுக்கு வருபவர்களுக்கு அமைதியும், நிம்மதியும் கிடைத்தல், கப்ருகளை திட்டுபவர்களுக்கு ஆபத்துக்களும், தண்டனைகளும் ஏற்படுத் முதலிய கராமத்துகளும், அசாதாரண நிகழ்ச்சிகளும் உண்மைகளே! நான் அவற்றை எதிர்க்கவில்லை. நபிமார்கள், நல்லவர்களின் கப்ருகளில் நிகழும் அசாதாரண சம்பவங்களும், ரஹ்மத்தும் மனிதக் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவை. அவர்களுக்கு அல்லாஹ் வழங்கும் மதிப்புகள் நம் சிந்தனைக்கு எட்டாதவை.
(இக்திளாஉ பக்கம் 374)
ஸஹாபாக்கள், தாபிஈன்கள் பலரின் மரணத்திற்குப் பின்னர் நடைபெற்ற வெளிப்படையான கராமத்துகளை அறிஞர்கள் தெரிவித்துள்ளனர். நேரடியாகக் கண்ட சம்பவங்களை நம்பகமான அறிவிப்புத் தொடர் வழியாகவும் அறிவிக்கின்றனர்.
சவூதியிலுள்ள முஹம்மத் இப்னு ஸுஊத் பல்கலைக் கழகம் வெளியிட்ட நூல் தொகுப்பின் 'அஹ்காமு தமன்னில் மவ்த்' என்ற அத்தியாயத்தில் நூலாசிரியர் முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப் பதிவு செய்துள்ள சில நிகழ்வுகளைக் காண்போம்.
ஹம்மாத் இப்னு தாவூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்து அஃபான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வழியாக அஹ்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'யா அல்லாஹ்! நீ யாருக்காவது கப்ரில் தொழுவதற்கு அனுமதி வழங்கியிருந்தால் அந்த வாய்ப்பை எனக்குத் தந்தருள்வாயாக! என ஹம்மாத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்வார்கள்.
ஜுபைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'தாபிதுல் பன்னான் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை கப்ரில் வைத்தேன். என்னுடன் ஹுமைது தவீலாவும் உடனிருந்தார். நாங்கள் அடக்கம் செய்துவிட்டு திரும்பும் போது கப்ரின் பலகை இடிந்து விழுந்தது. அதனைச் சரி செய்வதற்காக நான் சென்ற போது தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கப்ருக்குள்ளிருந்து தொழுவதைப் பார்க்க முடிந்தது. அறிவிப்பாளர்: அபூ நுஐம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி.
அபூநுஐம் மற்றும் இப்னு கரீத் ஆகியோர் இப்றாஹீம் அல்முஹல்லப் அவர்களிடமிருந்து அறிவிக்கின்றனர். 'நள்ளிரவில் தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களது கப்ரு வழியாக சுண்ணாம்பு கொண்டு சென்றவர்கள் கப்ரிலிருந்து குர்ஆன் ஓதுவதைக் கேட்டதாக என்னிடம் தெரிவித்தனர்.'
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இமாம் திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஸஹாபி ஒருவர் கப்ரு என்று அறியாமல் தனது மேலங்கியைக் கழற்றி அதன் மீது வைத்தார்கள். அப்போது கப்ருக்குள்ளிருந்து ஸுரத்துல் முல்க் முழுவதும் ஓதப்படுவதை செவியேற்றார். இதனைத் திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவித்த போது சொன்னார்கள்: 'ஸுரத்துல் முல்க் எல்லாத் தீங்குகளையும் தடுக்கும். கப்ர் தண்டனையிலிருந்து காப்பாற்றும்.' இந்த ஹதீதை திர்மிதி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹஸன் என்கிறார்கள்.
நஸஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ஹாகிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆகியோர் அறிவிக்கின்றனர்: பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகிறார்கள்: 'நான் சுவனத்தில் இருப்பதாக கனவு கண்டேன். அங்கே ஒருவர் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, 'யார் இவர்?' என வினவினேன். சுவனவாசிகள், அவர் ஹாரிஸ் இப்னு நுஃமான்' என்றனர். அதுதான் நற்செயலின் பயன். ஹாரிஸ் தனது தாயாருக்காக அதிக பணிவிடைகள் செய்திருந்தார்கள்.' என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து இப்னு அபீதுன்யா அறிவிக்கிறார்கள்: 'திருக்குர்ஆன் மனனமில்லாத நல்லவர் ஒருவர் மவ்த்தாகிவிட்டால் அவருக்குக் குர்ஆனை கற்பிக்க மலக்குகளிடம் ஏவப்படும். கியாமத் நாள் வரை அவர் குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார்.' யஸீத் தகாஷியிடமிருந்தும் இதேபோல் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இப்னு ஸீரீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடமிருந்து அப்னு அபீ ஷைபா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'இப்னு ஸீரீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், மய்யித்திற்கு நல்ல கஃபன் துணி அணிவிக்க வேண்டுமென விரும்புவார்கள். இறந்தவர்கள் தங்கள் கஃபன் ஆடைகளைக் குறித்து தங்களுக்குள் பேசிக் கொள்வர் எனவும் இப்னு ஸீரீன் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்வார்கள்'. ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து நேரடியாக (மர்ஃபூஉ) இப்னு உஸாமா அவர்கள் தமது முஸ்னதில் பதிவு செய்துள்ளார்கள்.
'உங்களில் யாராவது மய்யித்தின் காரியங்களை நடத்துபவராக இருந்தால் நல்ல கஃபன் ஆடையை அணிவியுங்கள்' இந்த நபிமொழியை இமாம் முஸ்லிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
திர்மிதி, இப்னு மாஜா, முஹம்மத் பின் யஹ்யல் ஹமதானி ஆகியோர் அபூகதாதா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஹதீது இப்படி வருகிறது: 'நீங்கள் மய்யித்தின் காரியங்களை நடத்துபவராக இருந்தால் நல்ல கஃபன் அணிவியுங்கள். ஏனெனில் இறந்தவர்கள் கஃபன்களைப் பற்றி கப்ருகளில் கருத்துச் சொல்வார்கள்.'
ராஷித் இப்னு ஸஈதிடமிருந்து இப்னு அயீதுன்யா அறிவிக்கிறார்கள்: 'ஒரு ஸஹாபியின் மனைவி மவ்த்தானார்கள். பின்னர் அவர் சில பெண்களை கனவு கண்டார்கள். அக்கூட்டத்தில் அவரது மனைவியைக் காணவில்லை. மனைவியைக் குறித்து அப்பெண்களிடம் கேட்க, நீங்கள் அவருடைய கஃபன் ஆடையை மோசமாக்கியதால் எங்களுடன் வர வெட்கப்பட்டார்கள் என்றனர்.
ஸஹாபி அவர்கள் இதனை நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சொல்ல, திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவாய் மலர்ந்தார்கள்: 'அந்த வழியாகச் செல்லும் நம்பிக்கைக்குரிய நபரைப் பற்றி விசாரியுங்கள்.'
மரணத்தறுவாயில் இருக்கும் ஒரு நபித் தோழரின் வீட்டிற்கு அந்த ஸஹாபி சென்ற போது, அன்ஸாரியான நபித் தோழர் 'இறந்தவர்களுக்கு ஏதேனும் கொடுத்தனுப்ப விரும்புவோர் என்னிடம் ஒப்படையுங்கள்' எனச்' சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்கிறார். அத்தோழர் மவ்த்தான போது அவரது கஃபன் ஆடையுடன் இன்னொரு கபனும் வைத்து அடக்கம் செய்தோம். பின்னர் அந்த கஃபன் ஆடையை அணிந்தவராக தனது மனைவியை பெண்களுக்கிடையில் அந்த ஸஹாபி கண்டார்கள்.
தனது கஃபன் ஆடையைப் பற்றி கனவில் குறை சொன்ன ஒரு பெண்ணின் சம்பவத்தை முஹம்மத் இப்னு யூசுஃபில் பிர்யாபி அவர்களிடமிருந்து இப்னு ஜவ்ஸியும் அறிவிக்கிறார்கள்.
சிரியாவில் மரணத்தறுவாயிலிருந்த வாலிபர் ஒருவர் 'என்னை என் தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர் விருப்பப்படி செய்தால் எப்படி இருக்கும்' எனக் கேட்டபோது, அவரது சாச்சா சொன்னார், 'உன்னை உனது தாயார் சுவனத்திற்கு அனுப்பி வைப்பார்'. வாலிபர் கூறினார், 'எனது தாயரை விட கருணை மிக்கவன் அல்லாஹ்' என்று.
இப்னு அபீ துன்யா அபூ காலிபிடமிருந்து அறிவிக்கிறார்கள்: அந்த இளைஞரை கப்ரில் அடக்கிய போது நானும் கப்ரில் இறங்கினேன். அடக்கம் முடிந்த போது கப்ர் மீதிருந்த பலகை கீழே விழுந்து விட்டது. அதனை மீண்டும் சரி செய்வதற்காக மீண்டும் கப்ரில் இறங்கிய சாச்சா பயந்து போய் வெளியேறினார். கப்ரு ஒளியால் நிறைந்திருந்தது. பார்வை எட்டா தொலைவுவரை அவ்வொளி பரவியிருந்தது.
'நஜ்ஜாஷி அரசர் மவ்த்தான போது அன்னாரது கப்ரில் ஒளி சூழும் எனச் சொல்லியிருந்தோம்' என்று அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொன்னதாக அபூதாவூத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
'நான் அஹ்னஃப் இப்னு கைஸ் அவர்களின் கப்ர் அடக்கத்தில் பங்கெடுத்தேன். கப்ருக்குள் இறங்கியவர்களுள் நானும் ஒருவன். அடக்கம் முடிந்த பின்னர் கப்ர் மிக விசாலமாக இருப்பதைக் கண்டேன். இச்செய்தியை மக்களிடம் தெரிவித்த போது அவர்களும் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் அதைத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
அறிவிப்பவர்: அப்துற் றஹ்மான் இப்னு உமாரா
நூல்: இப்னு அஸாகிரின் தாரீக்.
ரியாத் நகரில் மக்தபா அஸ்ஸுதியில் பாதுகாக்கப்பட்டுள்ள 'அஹ்காமு தமன்னில் மவ்த்' பார்க்கவும். ஷெய்கு அப்துர் ரஹ்மான் ஜத்ஹான், ஷெய்கு அப்துல்லாஹ் அல்ஜப்ரீன் ஆகியோர் இதனை சோதித்து உறுதி செய்துள்ளனர். முஹம்மத் இப்னு அப்துல் வஹ்ஹாப்தான் இதன் ஆசிரியர் எனவும், இதிலுள்ளவை அனைத்தும் உண்மை எனவும் நூல் தொகுப்பிற்கு வழங்கிய முன்னுரையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

முற்றும்.
நன்றி: அல்-மின்ஹாஜ் 05
அல் ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி,
திருவிதாங்கோடு, குமரி மாவட்டம்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "திருத்தப்பட வேண்டிய சிந்தனைகள்"

யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா?


கேள்வி: 1. யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா?
2. வலிமார்களிடம் நேரடியாக உதவி தேடுவது கூடுமா?
எம்.கே. முஹம்மது சுல்தான், தஞ்சை.
பதில் 1:
நபிமார்களையும், வலிமார்களையும் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பது குர்ஆன் ஹதீஸ்படி ஆகுமான செயலாகும்.
இதை மறுப்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. எனவே 'யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன்' என அழைப்பதில் எவ்விதத் தவறுமில்லை.
அல்லாஹ் தரும் ஆதாரம்: அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் யா அய்யுஹல்லதீன ஆமனூ (ஓ! ஈமான் கொண்ட விசுவாசிகளே!) யா அய்யுஹன்னாசு (ஓ! மனிதர்களே!) என்பதாக பலரையும் பலவாறு அழைத்திருக்கின்றான். அரபி இலக்கணத்தில் 'யா' என்ற பதம் அருகில் இருப்பவர்களையும், தூரத்தில் இருப்பவர்களையும் அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு அழைக்கப்படுவதற்கு அவர்கள் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. காரணம் அல்லாஹ் குர்ஆனில் யா அய்யுஹல்லதீன ஆமனூ (ஓ! விசுவாசிகளே!) என அழைத்தது நபிகளார் காலத்தில் வாழ்ந்த முஃமின்களை மட்டுமல்ல மாறாக யுக முடிவு நாள் வரையுள்ள எல்லா முஃமின்களையும் எடுத்துக் கொள்ளும். இதன் மூலம் 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதற்கு அவர்கள் நம் கண்ணுக்கு தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை என்பது புலனாகிறது. குர்ஆனின் ஆதாரப்படி 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதில் எவ்விதத் தவறுமில்லை.
நபிகளார் தரும் ஆதாரம்: பத்ருப் போர்க்களத்தில் அல்லாஹ் நபிகளாருக்கு வெற்றியை அளித்த போது போர்க்களத்தில் மரணித்தவர்களை காண்பதற்காக நபிகளார் சென்றார்கள். அப்போது அம்மைதானத்தில் மாண்டு கிடந்த அபூலஹப், உத்பா போன்ற காபிர்களை நோக்கி,
'ஓ! அபூ லஹபே, உத்பாவே எனக்கு வாக்களிக்கப்பட்டதை இன்று நான் பெற்றுக் கொண்டேன். உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதை நீங்கள் பெற்றுக் கொண்டீர்களா?' என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட போது, அருகிலிருந்த இரண்டாம் கலீபா உமர் பாரூக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் 'யாரசூலல்லாஹ்! இறந்தவர்கள் எப்படி கேள்விகேட்பார்கள்? என கேள்வி எழுப்பினார்கள். அப்போது இந்த சந்தேகத்தை தீர்க்கும் வண்ணமாக நபிகளார் இறந்தவர்கள் உம்மை விட நன்றாக கேட்பார்கள். உம் காலடி பாதத்தின் சப்தத்தைக் கூட உணர்கின்றார்கள்' என தெளிவாகவே பதிலளித்தார்கள்.
இதன் மூலம் இரு விஷயங்கள் நமக்கு விளங்குகின்றன.
1.    'யா' என்ற பதத்தைக் கொண்டு இறந்தவர்களையும் அழைக்கலாம்.
2.    மரணித்தவர்கள் மறைந்து இருக்கின்றார்களே தவிர அழிந்து விடவில்லை.
இதனால் தான் கப்ருஸ்தானுக்கு சென்றால் இறந்தவர்களுக்கு ஸலாம் கூறுங்கள் என்பதாக பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நம்மை ஏவியுள்ளார்கள்.
முக்கிய குறிப்பு: மரணம் என்பது 'ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு செல்வதுதான். (அதாவது) அழியக் கூடிய இடத்தில் இருந்து அழியாத உலகிற்கு செல்வது) ஒருவன் இறந்தான் என்றால் நம் கண்பார்வையிலிருந்து மறைந்தான் என்றுதான் அர்த்தம். மாறாக அழிந்து விட்டான் என்று அர்த்தம் அல்ல. ஆக குர்ஆன்-ஹதீஸ் மூலம் யா என்ற பதத்தைக் கொண்டு தூரத்தில் இருப்பவர்களையும், நம் பார்வையிலிருந்து மறைந்து வாழ்பவர்களையும் அழைக்கலாம் என்பது தெளிவாகிறது. வலிமார்களையும், நபிமார்களையும் அழைப்பது எவ்விதத்திலும் தவறில்லை.
பதில் 2:
அவ்லியாக்களான இறைநேசச் செல்வர்களிடம் நேரடியாக உதவி தேடலாம். இது குர்ஆன் – ஹதீஸ் படி மார்;க்கத்தில் ஆகுமாக்கப்பட்ட செயலாகும்.
குர்ஆன் கூறுகிறது: 'பஸ் அலூ அஹ்லெத் திக்ரி இன்குன்தும் லா தஃலமூன்' உங்களுக்கு தெரியாதவைகளை திக்ரை உடையவர்களிடம் (அவ்லியாக்களிடம்) கேளுங்கள்' –அல்குர்ஆன் 16:43
இவ்வசனம், உங்களுக்கு எவ்விஷயம் நடக்க வேண்டுமோ, எந்த காரியம் கைகூட வேண்டுமோ, அத்துணை விஷயங்களையும் அதாவது உங்களுக்கு தெரியாத விஷயங்களை நல்லபடியாக முடிந்துவிட வேண்டும் என வலிமார்களான அவ்லியாக்களிடம் துஆ கேளுங்கள் என்பதை மிகத் தெளிவாகவே விளக்குகிறது.
'அஹ்லெ திக்ர்' என்பவர்கள் அவ்லியாக்கள்தான். அவர்கள் அதிகமான திக்ரின் மூலம் தன் நிலையை மறந்து இறைவனின் அளவில் சேர்ந்தார்க்ள. 'தான்' என்ற அகங்காரத் தன்மையை நீக்கி 'அல்லாஹ் மட்டும்தான்' என்ற உயர் நிலையில் தம்மை ஆக்கிக் கொண்டார்கள். இவர்களைப் பற்றி சுபச் செய்தி கூறும் முகமாக அல்லாஹ் கூறியதாக நபிகளார் கூறினார்கள். 'அல்லாஹ்வை அதிகமாக நேசித்தால் அந்த அடியாரின் பார்வையாகவும், கரமாகவும், காலாகவும் அல்லாஹ் மாறிவிடுகிறான்' (ஹதீது குத்ஸி புகாரி)
அதாவது திக்ரின் மூலம் தன்னை இறைவன் அளவில் சேர்த்த அவ்லியாக்களின் மூலம் இறைவனின் சக்தி வெளிப்படுகிறது. இறைநேசர்கள் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் தலமாக மாறி விடுகின்றார்கள். இதனால்தான் அல்லாஹ்வின் சக்தி வெளியாகும் ஸ்தலத்தில் கேட்பது எதார்த்தத்தில் அல்லாஹ்விடம் கேட்பதுதான். மாறாக அல்லாஹ் அல்லாதவர்களிடத்தில் கேட்பதாக ஆகாது.
நமக்கு உடல்நிலை சரியில்லையென்றால், மருத்துவரிடம் செல்கிறோம். மருந்து கொடுக்கிறார். நோய் குணமடைகிறது. இதில் நோயை குணப்படுத்தியது அல்லாஹ்தான். ஆனால் நாம் சென்றது மருத்துவரிடத்தில். இதுபோலத்தான் நம்முடைய தேவைகள் நிறைவேற வேண்டுமெனில் நாம் செல்ல வேண்டியது வலிமார்களிடத்தில். அவர்களின் மூலம் நமக்கு உதவுவது அல்லாஹ்தான். எனவே வலிமார்களிடத்தில் கேட்பதில் எவ்விதத் தவறுமில்லை.
ஹதீஸ்களின் பார்வையில்:
1.    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஜ்ரத் அபூ ஸயீத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்: 'என்னுடைய ரஹ்மத்தான கூட்டத்தார்களிடத்தில் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ளுங்கள்.'
ஆதாரம்: பைஹக்கீ, தப்ரானீ, ஷரஹ் ஜாமிவுஸ்ஸகீர்.
2.    பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 'நீங்கள் காரியங்களில் திகைப்படைந்தால் கப்ரு உடையவர்களை (வலிமார்களை)க் கொண்டு உதவி தேடவும்'
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு
ஆதாரம்: தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 5.
3.    'எவருக்காவது உதவி தேவைப்படுமானால் அல்லாஹ்வின் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள்' என்று மூன்று முறை கூறவும் என்பதாக நபிகளார் பகர்ந்துள்ளார்கள். (ஆதாரம்: தப்ரானி, ஹிஸ்னுல் ஹலீன்)
பற்பல ஹதீஸ்களின் மூலம் நல்லடியார்களான வலிமார்களிடத்தில் உதவி தேடுங்கள் என்பதை நபிகளார் நமக்கு கட்டளையிடுகிறார்கள். உதவி தேடுவதற்கு அவர்கள் நம் கண்ணுக்குத் தெரிய வேண்டும் என்பது அவசியமில்லை. காரணம் தனது நப்ஸை இறைவனின் பாதையில் போரிட்டு வெற்றி கண்ட அவர்கள் என்றும் ஜீவிதம் உடையவர்கள் அல்லாஹ் அவர்களுக்கு உணவளிக்கிறான். (3:168) வலிமார்களை இறந்தவர்கள் எனக் கூறக் கூடாது (2:153)என்பது இறைவனின் கட்டளையாகும்.
வலிமார்கள் என்றும் உயிருடனே இருக்கிறார்கள். அவர்களிடம் உதவி தேடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
ஈமான் உள்ள சீமான்களே!
வலிமார்களை ஜியாரத் செய்வதும், அவர்களின் பேரில் கொடியேற்றுவதும், நேர்ச்சை செய்வதும், உதவி கேட்பதும் அவர்களை 'யா' என்ற பதம் கொண்டு அழைப்பதும், உரூஸ் நடத்துவதும் இவையனைத்தும் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும். இதனன்றி டி.வி. மூலம் பத்திரிகையின் மூலமும் இன்று இஸ்லாத்தை தூய வடிவில் விளக்குகிறோம் என கூறி திரியும் வழிகேடர்களின் பசப்பு வார்த்தையை நம்பி ஈமானை இழந்து வழி தவறிவிட வேண்டாம். அல்லாஹ் நம்மை நேர்வழி ஆக்கட்டும். ஆமீன்.
-இமாரத்தே ஷரயிய்யா,
தாருல் உலூம் கௌசிய்யா,
ஈத்காஹ் மஸ்ஜித், இரயில்வே காலனி, தஞ்சாவூர்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "யாரஸூலல்லாஹ், யா முஹ்யத்தீன், யாகாதிர் வலி என அழைக்கலாமா?"

ஷாபிஈ மத்ஹபில் சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு ஆதாரங்கள்


عن البراء أن النبي صلى الله عليه وسلم كان يقنت في صلاة الصبح
1.இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: பர்ராஃ ரலியல்லாஹு அன்ஹு
நூல்: அபூ தாவூத் எண்: 1229
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா 2ஃ211
   
عن انس ان النبي صلى الله عليه وسلم قنت شهرا يدعوا عليهم ثم تركه فاما في الصبح فلم يزل يقنت حتى فارق الدنيا
2. இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைமறுப்பாளர்களை சபித்து ஒரு மாத காலம் குனூத் ஓதினார்கள். பிறகு அதை (மற்ற தொழுகைகளில்) விட்டுவிட்டார்கள். ஆனால், சுப்ஹ் தொழுகையில் இவ்வுலகை விட்டுப் பிரிகின்றவரை குனூத் ஓதி வந்தார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 201, தாரகுத்னீ எண் 1712.
عن أنس بن مالك قال: مازال رسول الله صلى الله عليه وسلم يقنت في الفجر حتى فارق الدنيا
 
3. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வுலகைப் பிரியும் வரை ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதிக் கொண்டே வந்தார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: முஸன்னப் அப்திர் ரஜ்ஜாக், எண் 4964.
عن علي أن النبي صلى الله عليه وسلم كان يقنت في صلاة الفجر
4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழமையுள்ளவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: அலி ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் எண் 1061.
عن البراء بن عازب: أن النبي صلى الله عليه وسلم كان يقنت في الصبح
5. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: ஃபர்ராஃ இப்னு ஆசிப் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: தாரமீ எண் 1650
ஸஹாபா பெருமக்கள் சுப்ஹ் தொழுகையில் குனூத் ஓதியதற்கு ஆதாரங்கள்:
عن عبد الله بن معقل قال فنت في الفجر رجلان من أصحاب صلى الله عليه وسلم علي وأبو موسى
அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மற்றும் அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு மஃகில் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா, பாகம் 2 பக்கம் 211.
عن أبي رجاء العطاردي قال صلى بنا ابن عباس الفجر بالبصرة فقنت
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஸ்ரா நகரில் எங்களுக்கு சுப்ஹு தொழுகை நடத்தினார்கள். குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ரஜா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா பாகம் 2 பக்கம் 211
عن الاسود قال صليت خلف عمر بن الخطاب رضى الله عنه في السفر والحضر فماكان يقنت الا في صلوة الفجر
பயணத்திலும் ஊரில் உள்ள போதும் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பின்னால் நான் தொழுதுள்ளேன். அவர்கள் பஜ்ர் தொழுகையில் குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பாளர்: அஸ்வத் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 203
عن ابي رجاء قال صلى ابن عباس صلوة الصبح في هذا المسجد فقنت وقرأ هذه الآية: وقوموا لله قانبين
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப்பள்ளிவாசலில் சுப்ஹ் தொழுதார்கள். குனூத் ஓதினார்கள். (கீழ்காணும் வசனத்தையும்) ஓதிக் காண்பித்தார்கள்.
நீங்கள் குனூத் ஓதி அல்லாஹ்வை வணங்குங்கள்! (அல்குர்ஆன் 2:238)
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 205.
عن ابى سلمة بن عبد الرحمن عن ابي هريرة رضى الله عنه قال والله لانا اقربكم صلوة برسول الله صلى الله عليه وسلم فكان أبو هريرة رضى الله عنه يقنت في الركعة الاخيرة من صلوة الصبح بعد مايقول صمع الله لمن حمده
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொழுகையை உங்களை விட அருகில் இருந்து அறிந்தவன் நான். இதை அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன்.
அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சுப்ஹ் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தில் சமிஅல்லாஹு லிமான் ஹமிதஹ்' என்று கூறியதற்குப் பின்னால் குனூத் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஸல்மா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 206
عن ابن عباس قال كان النبي صلى الله عليه وسلم يقنت في صلوة الصبح بهؤلاء الكلمات اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما اعطيت وقنا شرما قضيت انك تقضى ولا يقضى عليك انه لا يذل من واليت تباركت ربنا وتعاليت
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுப்ஹ் தொழுகையின் போது, அல்லாஹும்மஹ்தினா…. (எனத் தொடங்கும் வாசகங்களை) குனூத்தில் ஓதுவார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: பைஹகீ பாகம் 2 பக்கம் 210.
குனூத் ஓதும் போது கையை உயர்த்துதல்:
عن خلاس بن عمرو الخجري عن ابن عباس أنه صلى فقنت بهم في الفجر بالبصرة فرفع يديه
இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஸ்ரா நகரில் மக்களுக்கு சுப்ஹ் தொழுகை நடத்தினார்கள். இரு கைகளையும் உயர்த்தி குனூத் ஓதினார்கள்.
அறிவிப்பாளர்: கிலாஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா பாகம் 2 பக்கம் 215
عن ابى عثمان أن عمر رفع يديه في قنوت الفجر
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பஜ்ருடைய குனூத்தில் இரு கைகளையும் உயர்த்தினார்கள்.
அறிவிப்பாளர்: அபூ உத்மான் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு அபீ ஷைபா பாகம் 2 பக்கம் 215.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "ஷாபிஈ மத்ஹபில் சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு ஆதாரங்கள்"

பள்ளிவாசலின்(மஸ்ஜிதின்) ஒழுக்கங்களும் சட்டங்களும்


اِنَّماَ يَعْمُرُ مَسَاجِدَ اللهِ مِنْ اٰمَنَ بِاللهِ وَالْيَوْمِ الْاٰخِرِ وًَاَقَامَ الصَّلٰوةَ وَاٰتَى الزَّكٰوةََ وَلَمْ يَخْشَ اِلَّا اللهَ فَعَسىٰ اُولٰئِكَ اَنْ يَّكُوْنُوْ نُوْامِنَ الْمُهْتَدِيْن.   
'எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து தொழுகையையும் கடைப்பிடித்து ஜகாத்தும் கொடுத்து வருவதுடன் அல்லாஹ்வையன்றி மற்றெவருக்கும் பயப்படாமலும் இருக்கிறார்களோ அவர்கள்தாம் அல்லாஹ்வுடைய பள்ளிகளைப் பரிபாலனம் செய்யக் கூடியவர்கள். இத்தகையோர் தாம் நேரான வழியில் இருப்பதாக நம்பத்தக்கவர்கள்.'
பள்ளியோடு அதிக ஈடுபாடு கொள்பவர்களைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கீழ்க்கண்டவாறு புகழ்ந்து கூறியுள்ளார்கள்.
فَقَدْ عَدَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَلْبَهُ مٌتَعَلِّقٌ بِالْمَسْجِدِ مِنْ سَبْعَةٍ يُّظِلُّهُمُ اللهُ بِظِلِّ الْعَرْشِ يَوْمَ لَاظِلَّ اِلَّا ظِلُّهُ .
'பள்ளியில் தனது மனமார –லயித்துப் போயிருப்பவர், இறைவனின் நிழலே அன்றி வேறு நிழல் இல்லாத மறுமை நாளில் (தனது) அர்ஷின் நிழலைக் கொண்டு நிழல் அளிக்கப்படும் ஏழுவகை மனிதர்களில் நின்றுமுள்ளவராவார்'.
பள்ளியில் யாராவது ஒருவர் தொழுது கொண்டிருக்கும்போது மற்றொருவர் குர்ஆனை இரைந்து ஓதுவதும், ஹதீஸ் வஃலு – உபதேசம் சொல்வதும் விலக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் பள்ளி என்பது தொழுவதற்கு மட்டும் வக்ஃபு செய்யப்பட்ட இடமாகும்.
பள்ளி என்பது அல்லாஹ்வை தொழுவதற்காக ஒரு தலத்தை வரம்பு குறித்து வக்ஃபாகக் கட்டப்பட்டதாயிருக்கும். அது முகடில்லாத்ததாகவும், சுவர்கள் இல்லாத்ததாகவும் இருந்தாலும் சரிதான். அந்த வரம்பை (வக்ஃபாக்கின எல்லையைத்) தவிர மற்றவைகளுக்கு பள்ளி என்ற ஹுக்மு உண்டாகாது.
பள்ளியில் 'இஃதிகாப்' (அல்லாஹ்வுக்காக பள்ளியில் தரித்தல்) என்ற வணக்கம் உண்டாகிறது. ஆனதால் ஜுனூபாளிகள் (முழுக்கு கடமையுள்ளவர்கள்) பெண்களில் 'ஹைளு'(மாதவிடாய்) நிஃபாஸ்(பிள்ளைபேறு தொடக்கு) உள்ளவர்கள் தரிப்பது கூடாது.
மூட்டைப் பூச்சி, கொசு ஆகியவற்றின் இரத்தமாயிருந்தாலும் சரி பள்ளியில் நஜீஸைத் தடவுவது ஹராமாகும். அதனுடைய மண், கல்லை எடுத்துப் போவதும், விரிப்பு, விளக்கு போன்றவற்றைக் கொண்டு போவதும், அல்லது இரவலாக எடுத்துப் போவதும் கூடாது. அவ்வாறே மஸ்ஜிதின் விரிப்புகளை வேறொரு காரியத்திற்கு உபயோகிப்பதும் கூடாது.
மஸ்ஜிதிலுள்ள ஒரு பொருள் பழுதாகி விட்டால் அதை விற்று விட்டால்தான் நல்லது என்றிருப்பின் அதை விற்பது கூடும். வக்ஃபு செய்யப்பட்ட கிதாபுகள் போன்றவற்றை எந்த நிலையிலும் விற்கக் கூடாது. ஒரு (பள்ளித்) தலம் போன்றது பாழாகிப் போயிருந்தாலும் விற்கக் கூடாது. ஒரு பள்ளி உடைந்து அதைச் செம்மைப் படுத்துவதற்கு முடியாததாகி விட்டாலும் அதன் பூமியில் தொழுவதற்கும் இஃதிகாபு இருப்பதற்கும் இடம்பாடு உண்டாகியிருப்பதோடு அதில் ஜுனூபாளிகள் செல்வதற்கும் ஹறாம் என்றிருப்பதால் அத்தலத்தை விற்கக் கூடாது.
பள்ளியில் உள்ள பாய், குவளை போன்றவற்றை வேறு இடங்களிலுள்ள விசேசங்களுக்கு எடுத்துப் போய் புழங்குதல் மிகவும் கெட்ட காரியமாகும். கண்டவர்கள் அதை விலக்குவது விதியாகும்.
பள்ளியை உடைவு போன்ற (ஆபத்தான) வைகளைக் கண்டு பயப்பட்டாலொழிய எந்த நிலையிலும் உடைக்கக் கூடாது.
(ஒரு பள்ளி அந்த மாதிரி நிலை ஏற்பட்டு) மராமத்துச் செய்வதினால் சீர்படுத்த முடியாதிருந்தது. உடைக்கப்படும் சமயம் அதன் சாமான்களால், மறு பள்ளியை பரிபாலனம் செய்வதை நல்லதாகக் காணுவதாகில் அப்படிச் செய்யலாம். அது அதற்கடுத்தப் பள்ளியாக இருப்பது ஏற்றம். ஆனால் அந்தச் சாமான்களைக் கொண்டு பள்ளியல்லாத தைக்காப் போன்றவற்றை பரிபாலிப்பது ஜாயிஸ் இல்லை.
மஸ்ஜிதில் படும்படி எச்சில் துப்புவதும், சளி சிந்துவதும், ஈரமான நஜீஸ் இருக்கின்ற காலணிகளை உள்ளே கொண்டு செல்வதும், சிறு குழந்தைகளை, பயித்தியக்காரர்களை உள்ளே அனுமதிப்பதும் மக்ரூஹ் ஆகும். இவர்கள் பள்ளியை நஜீஸாக்கி விடுவார்கள் என்பதாகவோ, அல்லது தொழுபவருக்கு அறுவறுப்பு உண்டாக்கி விடுவார்கள் என்பதாகவோ இருப்பின் இவர்களை அனுமதிப்பின் ஹராமாகும்.
மஸ்ஜிதில் உறங்குவது மக்ரூஹ். அங்கு காற்று விடுவது கொடிய மக்ரூஹ். பள்ளியிலிருந்து கொடுக்கல் வாங்கல் செய்வதும், வழக்குகளை பேசுவதும், முடி நகம் களைவதும், கொட்டாவி விடுவதும் மக்ரூஹ் ஆகும்.
ஒரு ருகூவு, சுஜூதுடைய நேர அளவு பள்ளியில் தங்கினாலும் இஃதிகாஃப் என்பது உண்டாகி விடும். இஃதிகாஃபுக்கு நிய்யத் அவசியமாக இருக்கும்.எனவே பள்ளியில் நுழையும் போது,
اَللهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ فَاغْفِرْلِيْ ذُنُوْبِيْ
 
'இறைவா! உனது அருளின் வாயில்களை எனக்குத் திறந்து விட்டு எனது பாவங்களையும் மன்னித்தருள்வாயாக!' என்ற துஆவை ஓதிவிட்டு அத்துடன் இஃதிகாஃப் நிய்யத்து வைப்பவர்கள் கீழ்கண்ட விதமாக நிய்யத்து வைப்பதுடன் கீழ்கண்ட துஆவையும் சேர்த்து ஓத வேண்டும்.
اَللّهُمَّ اِنِّيْ نُوَيْتُ الْاِعْتِكَافَ مَادُمْتُ فِيْ هٰذَا الْمَسْجِدِ فَاغْفِرْلِيْ وَارْحَمْنِيْ بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ الرَّاحِمِيْنَ .
'இறைவா! நான் இப்பள்ளியில் தரிப்பட்டிருக்கும் காலமெல்லாம் இஃதிகாஃப் என்னும் வணக்கத்தைச் செய்வதற்கு நிய்யத்துச் செய்கிறேன். எனவே அருளாளர்களுக்கெல்லாம் அருளாளனே! எனது பாவங்களை மன்னித்து உனது அருட்கொடையைக் கொண்டு எனக்கு அருள்பாலிப்பாயாக!' என்று ஓதவும்.
பள்ளியை விட்டு வெளியேறும் போது இடது காலை முன் வைத்து,
اَللّهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ فَضْلِكَ فَاغْفِرْلِيْ وَارْحَمْنِيْ بِرَحْمَتِكَ يَآ اَرْحَمَ الرَّاحِمِيْنَ .
'இறைவா! உனது அருளின் வாசல்களை எனக்குத் திறந்து விட்டு எனது பாவங்களையும் மன்னித்து உனது பேரருளைக் கொண்டு எனக்கு அருள் பாலிப்பாயாக. அருளாளர்களுக்கெல்லாம் அருளாளா'
பள்ளிவாசலை சுற்றிலும் தாழ்வாரங்கள் வைத்துக் கட்டி அத்தாழ்வாரங்களில் மனிதர்கள் படுப்பதற்கும், ஜுனுபாளிகள் தங்குவதற்கும், மௌலிது, ராத்திபு முதலியவை நடப்பதற்கும் வசதி  செய்து தருவது நம்முடைய நாட்டிலுள்ள பழக்கமாக இருப்பதால் உலமாக்கள் அதனை ஆதரித்துள்ளார்கள்.
பள்ளிவாசலை பரிபாலனம் செய்வதிலும், அதை சுத்தம் செய்து விளக்கேற்றி வைப்பதிலும் மிகுந்த நன்மைகள் உள்ளன என்று ஹதீதுகளில் காணக் கிடக்கின்றன.
பிறருடைய நிலத்தில் அவருடைய பொருத்தமின்றி தொழுவது ஹராமாகும். எனினும் அவ்வாறு தொழுதால் தொழுகை கூடி விடும். அவர் பொருந்திக் கொள்வாரா? இல்லையா? என்பதில் சந்தேகமிருந்தால் தொழுவது மக்ரூஹ். பொருந்திக் கொள்வார் என்று உறுதியாக தெரிந்தால் மக்ரூஹ் இல்லை.
தொழுது முடித்தவுடன் மறு தொழுகையை நாடினால் அவ்விடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாறிட வேண்டும். ஸலாம் கொடுத்த பின் இமாமானவர் மஃமூம்கள் பக்கம் வலது பக்கத்தை திருப்பிக் கொள்ள வேண்டும்.
ஒட்டகை மந்தை, மாட்டு மந்தைகளில் தொழுவது மக்ரூஹ். ஆனால் ஆடுகள் ஒட்டகங்களைப் போன்றும் மாடுகளைப் போன்றும் மிரண்டு தொழுபவரின் கவனத்தை திருப்பும் சந்தர்ப்பம் குறைவாக இருப்பதால் ஆட்டு மந்தையில் தொழுவது மக்ரூஹ் இல்லை.
பள்ளிவாசல் முஸ்லிம்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருப்பதால் அங்கு முதலில் வருகிறவரை பின்னால் வருகிறவர் தடுப்பதும் இடம் மாற்றம் செய்வதும் கூடாது.
பள்ளியில் கூடு வைத்திருக்கின்ற பறவைகளைத் துரத்துல் வாஜிபில்லை. எனினும் அதில் விட்டு வைப்பது ஆகும். ஆனால் அவைகளின் எச்சம் பள்ளிக்குள் விழுந்து அசுத்தமாகி விடும் என்றிருந்தால் துரத்தப்படும்.
பள்ளிக்கு வகஃப் செய்யப்பட்ட சாமான்களை ஒருவர் எடுத்துப் புழங்கினால் அவர் பள்ளிக்கு கூலி கொடுப்பது வாஜிபு.  இதைப் பள்ளிக்குத் தேவையான மராமத்துப் போன்ற காரியங்களுக்கு செலவு செய்ய வேண்டும். அங்கு வரும் ஃபுகஹா, மிஸ்கீன்களுக்கு செலவு செய்யக் கூடாது.
பள்ளிகளில் சிறுபிள்ளைகளை வைத்து ஓதிக் கொடுக்கக் கூடாது என்று கஃப்ஃபால் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
பள்ளியில் உள்ள எண்ணெய், மெழுகுவர்த்தி, கல், மண் இவைகளை எடுப்பது ஹறாம். பள்ளித் தலத்தில் நடப்பட்டிருக்கும் மரங்களில் காய்க்கும் (காய்) கனிகள் பள்ளிக்கு உடையதாக இருக்கும். பள்ளிக்காகவே நடப்பட்டிருப்பதால் உண்பது ஆகாது. அவை எதற்கு நடப்பட்டதென்று தெரியாமல் உண்பது ஆகும்.
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "பள்ளிவாசலின்(மஸ்ஜிதின்) ஒழுக்கங்களும் சட்டங்களும்"

வியாழன், 19 ஜனவரி, 2012

read more " "

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates