Elegant Rose - Diagonal Resize 2 பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்யலாமா? ~ TAMIL ISLAM

புதன், 22 ஜூன், 2011

பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்யலாமா?


பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்யலாமா?

பலவீனமான நபிமொழிகள் என்றால் என்ன? நபிமொழியினை அறிவித்தவர்கள் பட்டியலில் ஒருவரோ, அல்லது சிலரோ நபிமொழிக் கலை வல்லுனர்கள் அறிவிப்பாளர்களுக்கென வகுத்து வைத்துள்ள விதிகளுக்கு மாற்றமானவர்களாக இருப்பர். எனவே அறிவிப்பாளர்களின் தகுதியின்மையைக் கருத்தில்  கொண்டு, அவர் அறிவித்த அந்த நபிமொழியை ளயீப்-பலவீனமானது என்று கூறுவர்.
இதில் கூட ஹதீஸ் கலைவல்லுனர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி விதிகளை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அம்று-ஏவல், நஹீ-விலக்கல் போன்ற ஆணைகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில்தான் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுக்கக் கூடாது. ஆனால் 'பழாயில்' சிறப்பு குறித்தான விசயங்களில் அமல் செயல்வதற்கு பலவீனமான நபிமொழிகளை எடுக்கலாம் என்பது நபிமொழிக் கலை வல்லுனர்களுடையவும் சட்ட அறிஞர்களுடையவும் ஏகோபித்த அபிப்பிராயம் ஆகும்.
பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாலயிலுல் அஃமால்'-நற்செயல்களில் அமல் செய்யலாம் என உலமாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ளனர். (நூல்: ஷரஹ் ஷிபா பாகம் 2 பக்கம் 123)
'நற்செயல்களில் பலவீனமான நபிமொழிகளின் படி அமல் செய்யலாம். சட்டங்கள் வகுப்பதற்குத்தான் ஸஹீஹான அல்லது ஹஸனான நபிமொழிகள் தேவை' (ஷரஹ் ஷிபா பாகம் 2, பக்கம் 133)
'பலவீனமான நபிமொழிகளின் படி, ஆசையூட்டுவதற்காக அமல் செய்யலாம் என நபி மொழிக் கலைவல்லுனர்க் கருத்து வேறுபாடின்றி கூறியுள்ளனர்.' (தப்ஸீர் ரூஹுல் பயான் பாகம் 6 பக்கம் 410)
உலமாக்களும், ஹதீஸ் கலை மேதைகளும், ளயீபான ஹதீஸ்களைக் கொண்டு சிறப்பு அமல்களில் ஆசையூட்டுவதற்கும், எச்சரிக்கை செய்வதற்கும்அமல் செய்வது சுன்னத் என சிறந்த ஹதீஸ்கலை மேதையும், சட்டத்துறை அறிஞருமான இமாம் நவவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது அத்காறுன் நவவீ எனும் நூலில் கூறுகின்றனர்.
பலவீனமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு 'பழாயிலுல் அஃமாலி'ல் அமல் செய்யலாமா? என இமாம் றமலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வின விடுக்;கப்பட்டபோது,
இமாம் நவவி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அமல் செய்யலாம் என ஹதீஸ் கலை மேதைகள் கூறியுள்ளதாகச் சொல்கின்றனர்' என பதில் கூறினார்கள். (பதாவா ரமலீ பாகம் 4, பக்கம் 383)
ஹாபிழ் இப்னு ஹஜர் மக்கீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லுகின்றார்கள், 'ளயீபான ஹதீஸ்கள் மூலம் சிறப்பானவைகளில் கருத்து வேறுபாடின்றி அமல் செய்யலாம்' (அல் மன்ஹுல் மக்கிய்யா ஃபீ ஷரஹில் ஹம்ஸிய்யா பக்கம் 82)
சிறப்பிற்குரிய அமல்களில் பலவீனமான நபிமொழிகளைக் கொண்டு அமல் செய்யலாம் என உலமாக்கள் கருத்து வேறுபாடின்றி சொல்லியுள்ளனர் (இமாம் நவவீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களது அர்பஈன் ஹதீஸ் பக்கம் 8, 9)
பலவீனுமான நபிமொழிகளை ஆதாரமாகக் கொண்டு அமல் செய்யலாம் என்பதற்கு இமாம்களும் ஹதீஸ் கலை மேதைகளும் தந்துள்ள அனுமதிகள் இலை. இமாம்கள் பலவீனமான நபிமொழிகளை வைத்து அமல் செய்திருக்கிறார்களா? ஆம்! செய்திருக்கின்றனர். ஆதாரங்கள் இதோ:
ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அருளினார்கள் 'அலியே! எனக்கு எதை நான் விரும்புகின்றேனோ அதைத்தான் உமக்கும் விரும்புகின்றேன். எனக்காக வெறுப்பவற்றை உமக்காகவும் வெறுக்கின்றேன். நீர் இரு ஸஜ்தாக்களுக்கிடையில் குதிகாலில் அமர வேண்டாம்'.
அறிவிப்பவர்: அலி ரலியல்லாஹு அன்ஹு.
அபூ ஈஸா திர்மிதீ ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள் 'அலி அவர்களிடமிருந்து ஹாரிதும் ஹாரிதிடமிருந்து அபூ இஸ்ஹாக்கும் அறிவிக்கும் இந்த நபிமொழியை வேறு எவரும் அறிவிப்பதாக நாம் காணவில்லை.
இந்த அறிவிப்பாளர்களில் வரக்கூடிய ஹாரிதுல் அஃவர் என்பாரை சில அறிஞர்கள் பலவீனுமானவராக ஆக்கியுள்ளனர். (எனினும்) அனேகமான அறிஞர்கள் இந்த நபிமொழிப்படியே அமல் செய்கின்றனர். அதாவது இரு ஸுஜூதுகளுக்கிடையில் குதிகாலில் இருப்பது (நாயிருப்பு) மக்ரூஹ் என்று கூறுகின்றனர்.
(நூல்: ஜாமிஉத் திர்மிதி பாகம் 1 பக்கம் 57,58)
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  தொழுகையில் தமது இரு பாதங்களின் முற்பகுதியிலேயே (நிலைக்கு) எழும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு நூல்: ஜாமிஉத் திர்மிதி பாகம் 1 பக்கம் 58.
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் காலிது இப்னு இயாஸ் என்பவர் இடம் பெறுகிறார். இவரை ஹதீஸ் கலை மேதைகள் பலவீனமானவர் என்கின்றனர்.
அபூஈஸா திர்மிதி ரலியல்லாஹு அன்ஹு கூறுகின்றனர், 'அறிஞர்களிடத்து அமலில் இருப்பது அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்ற ஹதீதின் அடிப்படையில்தான்! தொழுகையில் இரு பாதங்களின் முற்பகுதி (யின் துணை)யால்(நிலைக்கு) எழுவதையே அறிஞர்கள் தேர்வு செய்திருக்கின்றனர்.
சற்று எண்ணிப் பாருங்கள்! பலவீனுமானவர்கள் என்று நபி மொழி வல்லுனர்களால் கணிக்கப்படுகின்ற அறிவிப்பாளர்கள் அறிவிக்கின்ற ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆறு ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றான திர்மிதியைத் தந்துள்ள மேதை அபூஈஸா திர்மிதி  ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளதோடு அந்த நபிமொழிகளை பலவீனுமானவை, அமல் செய்லதக்கதல்ல என்று கூறூது, அறிஞர்கள் அந்த நபிமொழிகளின் படி அமல் செய்கின்றனர் என்று கூறுகிறார்கள்.
ளயீபான-பலவீனமான ஹதீஸ்களை அடிப்படையாக வைத்து அறிஞர் பெருமக்கள் அமல் செய்தனர் என்பதற்கு இதுபோன்ற ஏராளமான ஆதாரங்களை நாம் எடுத்துக் காட்ட முடியும்.
ஆனால் நவீனவாதிகள் அமல்கள் செய்வதற்கு தடை விதிக்கின்றனர். இறைபொருத்தத்தை நாடி செய்கின்ற அமல்களை விட்டும் மக்களை சோம்பேறிகளாக ஆக்குகின்றனர். அவர்களின் இக்கெடுதிகளை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! ஆமீன்!!!

நன்றி: வஸீலா 1-6-87

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates