Elegant Rose - Diagonal Resize 2 ஜூலை 2012 ~ TAMIL ISLAM

வியாழன், 19 ஜூலை, 2012

இஸ்லாத்தின் சுவை கெடுக்கும் மேலதிக மசாலாக்கள்




 M U S T     R E A D

மனைவி : என்னாங்க ஒற்றையா ஒரு பார்ஸலை மட்டும் வாங்கியிருக்கீறீங்க..... நூடில்ஸுக்கு கறி, புளி, மசாலா ஒன்டும் வாங்கலியா?
கணவன்: இன்னிக்கு ஒங்க கையால கறி, புளி, மசாலான்னு எதுவும் போட்ற வாணாம். எல்லாம் சேர்ந்ததா இப்போ ஓறே பார்ஸல்ல அடைச்சி விக்கிறாங்கல்ல... பார்ஸலைப் பிரிச்சி அப்படியே ஆக்கிடுங்க். எல்லாம் சரியாயிடும்.
இதைப் போன்றுதான் உப்பு, உரைப்பு, மசாலா அனைத்தையும் மேலதிகமாகப் போட்டு மார்க்கத்துக்கு சுவையூட்ட பலர் எத்தனிக்கிறார்கள்- அல்லாஹ் தேவையான சுவைகள் அனைத்தையும் மார்க்கத்தினுள் அளவாக வைத்து ஓரே பொதியாகத் தந்திருக்கின்ற போது அனைத்துச் சுவைகளும் பொருத்தமான அளவில் சேர்க்கப்பட்டமார்க்கம் இஸ்லாம். ஆனால், அந்த் சுவை சிலருக்குப் போதாமால் இருக்கிறது.
இஸ்லாத்தை இஸ்லாமாக முன்வைத்தால் உப்புச் சப்பில்லை என்கிறார்கள். உப்புச் சப்பில்லாத உணவை ருசித்து ரசித்து உட்கொள்ள முடியாதல்லவா? அதை நாவில் வைத்து சுவைக்க முடியாது. கையில் வைத்து பிசைத்து பிசைத்து இருப்பதைத் தவிர வேறு வழியில்லை. சிலருக்கு இஸ்லாம் இஸ்லாமாக முன்வைக்கப்படும் போது அது பிசைத்து பிசைத்து இருப்பது போலத் தென்படுகிறது. எனவே, மேலதிகமாக உப்பு, மசாலா என்பவற்றைச் சேர்த்தே அவர்கள் சாப்பிடுகிறார்கள். பிறருக்கும் சாப்பிடக் கொடுக்கிறார்கள்.
அது என்ன மேலதிக மசாலா?

சூடு பறக்கும் விவாதம்..... கொடூரமான விமர்சனம், அநாமதேய பிரசுரம், அவதூறுகள், அபாண்டங்கள் நிறைந்த பொய்ப் பிரசாரம், பல கருத்துக்களூக்கு இடமுள்ள ஒரு மார்க்கப் பிரச்சினையில் ஒரு கருத்தை அளவு கடந்து போற்றி அதை மாத்திரமே சத்தியம் என்று ஏனைய கருத்துக்கள் அசத்தியம் என்றும் நிறுவ முயலும் தீவிரம், தனது கருத்து பிறர் ஏற்கும் வரை தனது உயிரே போனாலும் விட்டுக் கொடுக்காத பிடிவாதம், பிறரை டெலிபோனிலும் நேரடியாகவும் வம்புக்கழைத்து அவர்களது உணர்ச்சிகளைக் கொதிப்படைய வைத்து அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுப் பேசும் வார்த்தைகளை இரகசியமாக ஒலிப்பதிவு செய்து தங்களது சகாக்களுக்கு மத்திப்ப்யில் அதனைப் பரிமாறி மகிழ்ச்சியும் கபடத்தனம், தங்களுடன் கருத்து முரண்படுபவர்கள் எங்காவது ஒரிடத்தில் எழுத்துலே வார்த்தையில் சறுக்கும் இடங்களை உன்னிப்பாகத் தேடி அலையும் மோப்பம், நரகத்திற்கும் அனுப்பப்பட வேண்டியவர்களின் பட்டியலை உயிர் பிரிவதற்கு முன்னால் தயாரித்து விடாலாமா? முடியாமல் போகுமா? எனும் பதட்டம்.......
இஸ்லாம் பரவிச் செல்லும் இடமெல்லாம் முந்திச் சென்று அதன் வருகையைத் தடுக்கும் ஷைத்தானிய வியூகம், பகிரங்கமாகவே அறிஞர்களையும் இமாம்களையும் இஸ்லாமிய இயக்ககங்களையும் கீறிக் கிழிக்கும் விமர்சனம், அல்லாஹ்வின் இயற்கை மார்க்கத்தை மாசற்ற மனதோடு அமர்ந்து கற்கிறார்களே அவர்களது உள்ளங்களில் சந்தேகங்களை ஏற்படுத்தி மனம் பேதலிக்க வைத்து இஸ்லாத்திலிருந்து அவர்களைத் திசைதிருப்ப முயலும் குரூரம், வாழ்க்கை முழுவதையும் மறுசீரமைக்க விரும்பும் இஸ்லாத்தின் விசாலத்தன்மையை வணக்க வழிபாடுகள் சிலவற்றின் உட்பிரிவுகளுக்குள் இழுத்து வந்து முடக்கி ஒரு போதும் அவற்றிலிருந்து சமுகத்தை வெளியேற விடாமல் தடுத்து வைத்துருக்கும் அழுங்குப் பிடி, ஆயிக்கணக்கான உயிர்கள் பலி கொள்ளப்படும் முஸ்லிம் உம்மத்தின் சர்வதேச அவலத்தையோ சீரிய தலைமையில்லாமல் சிதறுண்டு கிடக்கின்ற நம் தேச அவலத்தையோ எதிர்கொள்ளும் காத்திரமான முயற்சிகள், திட்டங்கள் எதுவுமின்றி பிரிவையும் பிளவையும் தூபமிட்டு வளர்க்கும் அக்கிரமம், உடன்படுவதற்கு நூற்றுக்கணக்கான அடிப்படை அம்சங்கள் இருக்கிக்கின்றபோது முரண்படுவதற்கென்றே கிளை அம்சங்களைத் தூக்கிப் பிடிக்கும் வக்கிரம், எதிரியையும் நண்பனாக்கும் அன்பைத் தொலைத்து விட்டு நண்பனை எதிரியாக்கும் குரோதம்.........
இவற்றையெல்லாம் கலந்து இஸ்லாத்தையும் அவற்றோடு குழைத்துக் கொடுத்தால் இஸ்லாம் உப்புப்புளியுடன் உறைப்பாக இருக்குமாம். இவை இல்லாமால் இஸ்லாம் முன்வைக்கப்பாட்டால் அதில் உப்புச்சப்பில்லையாம். பிசைந்து பிசைந்து இருக்க வேண்டியதுதானாம். இஸ்லாம் இஸ்லாமாக முன்வைக்கப்படுகின்ற போது இன்றைய சில அழைப்பாளர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். அவர்கள் இஸ்லாத்தோடு அல்லாஹ் சேர்த்து வைத்துள்ள இயற்கையான, பொருத்தமான, பக்க விளைவுகளற்ற மனிதனது இயல்புக்குப் பொருத்துகின்ற சுவைகள் போதாதென்று மேற்கூறப்பட்ட மேலதிக மாசாக்களையும் இஸ்லாத்தோடு கலந்து கொடுக்கின்றனர்.
ஒரு சமையலுக்கு அளவாகச் சேர்க்கப்படுகின்ற மசாலாக்கள்தான் அந்த சமையலை சுவையூட்டுகின்றன. அதிகமானவர்கள் இத்தகைய சமையலை விரும்பி உட்கொள்வார்கள். காரணம் அவர்களது நாவிலோ, உடலிலோ கோளாறுகள் இருப்பதில்லை. எனினும் சிலருக்கு அளவாக சுவையூட்டப்பட்ட உணவுகள் இருப்பதில்லை. ஒன்றில் அவர்கள் போதையில் இருப்பார்கள், அல்லது காய்ச்சலில் இருப்பார்கள்; அல்லது நீரிழிவு நோயால் சுவை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு மேலதிகமாகச் சேர்த்தால் சுவை தட்டும்.
இயல்பு நிலை பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிடும் இந்தக் கலவையை சுகதேகிகளுக்குக் கொடுத்தால் எப்படியிருக்கும்? ஒன்றில் அவர்கள் அதனைச் சாப்பிடமாட்டார்கள். தவறியேனும் சாப்பிட்டால் அவர்களும் இயல்பு நிலை பாதிக்கப்படுவார்கள்.
இஸ்லாமும் இதுபோன்று மேலதிக மசாலாக்களின் கலவையோடு கொடுக்கப்படும் ஒரு துர்ப்பாக்கியமான நிலை இன்று தோன்றியிருக்கிறது. இந்த மேலதிக மசாலாக்களில் மற்றொரு பிரச்சினையும் இருக்கிறது. இந்த மசாலாக்கள் அனைத்தும் ஷைத்தானியத் தயாரிப்புகள், இவற்றிக்கு உலகின் எந்த ஹலால் நிறுவனமும் ஹலால் சான்றிதழ் வழங்க மாட்டாது. இன்னும் சொன்னால் பன்றிக் கொழுப்பு அதன் இரத்தம், இறைச்சி போன்றவற்றின் ஹரமிய்யத் ஐ விட இந்த ஷைத்தானியத் தயாரிப்புகளின் ஹராம் தன்மை செறிவானது; கனதியானது. இத்தகைய ஹராம்களையெல்லாம் கலந்து தூய இஸ்லாத்தையும் அதன் சுவையையும் மாசுபடுத்தும் எம்மவர்களில் சிலர் வாய்கூசாமல் சொல்கிறார்கள். ‘நாங்கள்தான் குர்ஆன் சுன்னாவின் சொந்தக்காரார்கள். நாங்கள்தான் அவ்விரண்டையும் பின்பற்றுபவர்கள்; ஏனையோர் வழிகேடர்கள், நரகவாதிகள்’ என்று.................

ஏன் இஸ்லாத்தை முன்வைப்பதற்கு இப்படியொரு கீழ்த்தரமான வழியை இவர்கள் தெரிவு செய்ய வேண்டும்? இஸ்லாத்தின் அழகை யும் அதன் ஆழ ,அகலத்தையும் அது தன்னகததே பொதிந்து வைத்துள்ள அற்புதமான அறிவுக் கருவூங்களையும் மனித வாழ்க்கையை உள்ளத்திலும் உலகத்திலும் மேலோங்கச் செய்வதற்கு அது கற்றுத் தரும் அற்புதமான வழிகாட்டல்களையும் வாழ்வின் ஒவ்வொரு சிறிய, பெரிய விடயத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கு அது தரும் இனிமையான உபதேசங்களையும் நுணுக்கமாகவும் தெளிவாகவும் வேறு கலவைகள், அசுத்தங்கள் பட்டு விடாமால் தூய்மையாக முன்வைக்க ஏன் இவர்களால் முடியாமல் இருக்கிறது?

காரணத்தை முன்னைய இதழ்களில் விளக்கியிருக்கிறேன்; அது ஒரு நோய் . அந்த நோயோடு மற்றொரு பிரச்சினையும் இந்தக் கீழ்த்தரமான வழிமுறையை அவர்கள் தெளிவு செய்வதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது . இவர்கள் மார்க்கத்தை ஒரு சிறிய எல்லைக்குள் சுருக்கிக்கொள்கின்றர். தொழுகை, நோன்பு, ஹஜ், திருமணம், பிறப்பு, இறப்பு போன்றவற்றுடன் தொடர்பான நடைமுறைகளில் காணப்படும் கருத்து வேறுபாடு அவற்றின் நடைமுறைகளில் புகுந்துள்ள இஸ்லாத்துக்குப் புறம்பான நூதனங்கள் ஆகிய இரண்டு அம்சங்களுக்குள் இவர்கள் இஸ்லாத்தை இழுத்து வந்து சுருக்கி வைத்துள்ளார்கள். கருத்து வேறுபாடுகளில் ஒரு கருத்தை மாத்திரம் முன்வைக்கிறார்கள். அதில் மித மிஞ்சிய தீவிரத்தைப் பிரயோகிக்கிறார்கள். நூதனங்களை எதிர்க்கும் விடயங்களில் இறுதித் தீர்ப்பையே வழங்கி நூதனவாதிகளை நரகத்திற்கே அனுப்பி விடுகிறார்கள். இவர்கள் அழைப்பாளர்களாக செயல்படவில்லை.மாறாக நீதிபதிகளாகவே செயல்படுகிறார்கள். இவர்களது பணியை "அழைப்பு" என்று கூறுவதைவிட "தீர்ப்பு" என்று கூறுவதே பொருத்தமானது.
அதுமட்டுமன்றி தொழுகை, நோன்பு, ஹஜ், திருமணம், பிறப்பு, இறப்பு போன்றவற்றின் நடைமுறைகளிலுள்ள கருத்து வேறுபாடுகளையும் அவற்றில் புகுந்துள்ள நூதனங்களையும் இவர்கள் வேறுபடுத்திக்கூடப் பார்ப்பதில்லை. கருத்து வேறுபாடுகளை சிலபோது இவர்கள் ‘பித்அத்" என்ற வட்டத்திற்குள் கொண்டுபோய் விடுகிறார்கள். ஓருவர் குத்பாப் பிரசங்கம் செய்கிறார். "ஒரு மனிதர் விபசாரத்தில் ஈடுபாடுவதை விட குனூத் ஒதுவது பெரும் பாவமாகும்" என்று . இவ்வாறு இவர்களது பார்வையில் பட்ட சில கருத்து வேறுபாடுகளையும் நூதனங்களையும் மாத்திரம் தொகுத்தால் மொத்த இஸ்லாத்தில் அவற்றின் அளவு என்ன விகிதாசாரத்தில் இருக்கும்? 6600ற்கு மேற்பட்ட குர்ஆன் வசனங்களுக்கும் பல பத்தாயிரங்களுக்கு மேற்பட்ட நபிமொழிகளுக்கும் மத்தியில் இவர்கள் தேடித் தெரித்து கொண்ட இஸ்லாம் அந்த அளவுதான்.
பரவாயில்லை, கற்றது கைமண்ணளவு, கல்லாதது உலகளவு. எமக்கு இவ்வளவுதான் தெரியும் என்றாவது இவர்கள் நினைக்கிறார்களா? இல்லை. குர்ஆனும் ஸீன்னாவும் தங்களுக்கு மட்டுமே முழுமையாகத் தெரியும்; ஏனையோருக்கு பைபிளும் பகவத்கீதையும் தெரியும் என்ற ரீதியில்தான் இவர்களது பிரசாரம் நடைபெறுகிறது.
இவர்களுக்கு வணக்க வழிபாடுகளில் புகுத்தப்பட்டுள்ள நூதனங்கள் பற்றித் தெரிந்த அளவு மக்களுடன் உறவாடுவதற்குத் தேவையான பண்பாடுகள் பற்றியோ நற்குண நல்லொழுக்கங்கள் பற்றியோ எதுவும் தெரியாது. அதுமட்டுமல்ல, சமூகத்தின் மீது அன்பு அனுதாபம் கொண்ட நிலையில் இவர்களுக்குப் பிரசாரம் செய்யவும் தெரியாது. இதன் விளைவாக சமூகத்தின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகிறார்கள்.

இவர்களை எதிர்க்கும் மக்களிடமும் தயவு தாட்சண்யம் இருப்பதில்லை. காரணம், அவர்களும் இவர்களைப் போன்று மற்றோர் அறியாமையில் இருக்கிறார்கள். எனவே , இரு தரப்பினரும் ஒருவருக்கெதிராக மற்றவர் கடுமையாக விமர்சனத்திலும் மோதலிலும் இறங்கிவிடுகின்றனர். பாவங்கள் சங்கிலியாக தொடர்கின்றன. விளைவு என்ன தெரியுமா?

வணக்க வழிபாடுகளிலுள்ள நூதனங்களுக்குத் தீர்ப்பு வழங்கப் போனவர்கள் சமூகத்தில் உருவான எதிர்ப்புக் காரணமாக தமக்கென ஒரு வணக்க வழிபாட்டுத்தளத்தை அமைத்துக் கொண்டு ஒதுங்கிப் போகின்றனர். அத்தோடு இவர்களுக்கும் சமூகத்துக்குமிடையிலான உறவுகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. வணக்க வழிபாடுகள் மாத்திரமே இஸ்லாம் என்ற அவர்களது எண்ணம் இதனூடாக நிறைவேறுகிறது. உள்ளச்சமுள்ள வணக்க வழிபாடுகள், வாழ்க்கை முழுவதையும் சீராக்கும் வணக்க வழிபாடுகள், முஸ்லிம் சமூகத்தை ஒர் உம்மத்தாக ஒன்றிணைக்கும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் விட்டு விட்டு நூதனங்களற்ற வணக்க வழிபாடுகளை உருவாக்குவதோடு இவர்கள் தங்களது பணியை முடித்துக் கொள்கிறார்கள்.
இஸ்லாத்தின் எல்லையை இவ்வாறு ஒரு சிறிய வட்டத்துக்குள் கொண்டுவந்து தாமும் சமூகத்தை விட்டொதுங்கி அந்த வட்டத்துக்குள் இருக்கின்ற ஒரு சில தலைப்புகளை மாத்திரம் எவ்வளவு காலம்தான் திரும்பபேசிக் கொண்டிருக்க முடியும்? அவ்வாறு பேசும்போது ஏற்கனவே எதிர்த்த சமூகம்கூட இப்போது அந்தப் பேச்சுக்களைப் பொருட்படுத்துவதில்லை. தங்களது சடங்கு, சம்பிரதாயங்களைப் பாதுகாத்துக் கொண்டால் போதும் என அவர்களும் இவர்களை விட்டொதுங்கிறார்கள்.
இஸ்லாமியப் பணியின் அடைவு இவ்வளவுதானா? அல்லது இஸ்லாமியப் பணி துவங்கிய இடத்திலேயே இவ்வளவு முடிவடைந்து விடுகிறதா? இது இஸ்லாமியப் பணி செல்ல வேண்டிய சரியான திசையல்ல. இத்தகைய அடைவுகள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்கும் வளர்ச்சியைத் தருவதுமல்ல. எனவே, இந்த அணுகுமுறையை மாற்ற வேண்டும் எனப் பலர் அறிவுரை கூறுகிறார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்.
எனினும், அந்த அருளுரைகள் இவர்களை மாற்றவில்லை. மாறாக, தங்களது அணுகுமுறையை இவர்கள் மேலும் மோசமாக்கிக் கொள்கிறார்கள். அணுகுமுறையை மாற்றுமாறு அறிவுரை கூறியவர்களையும் வழிகேடர்கள் என இழித்துரைக்கிறார்கள். தங்களது அணுகுமுறையை தவறான திசை நோக்கி இன்னும் வேகமாக முன்னெடுக்கிறார்கள்.
திரும்பத திரும்ப பேசிக் கொண்டிருக்கும் ஒரே மாதிரியான விடயங்கள் சமூகத்தின் கவனத்தை ஈர்க்க மாட்டாதல்லவா? எனவே அந்த குறையை நிவர்த்தி செய்ய சமூகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் தொடர்ந்து வைத்துக் கொள்வதற்காக புதிய விடயங்களைத் தேடலானார்கள். அந்தோ பாவம் புதிய விடயங்கள் இஸ்லாத்தில் எவ்வளவோ இருக்கின்றன. உளத்துய்மை, பண்பாடுகள், நற்குணங்கள், முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துக்கூறல், தலைமைத்துவத்தையும் கட்டுப்படும் சமூகமொன்றையும் உருவாக்குவதற்காகத் திட்டங்கள் வகுத்துச் செயல்படுதல், பிளவுபட்டுத் தூரமாகி இருக்கின்ற சமூகத்தை நெருக்க்மாக்கிக்கொள்வதற்கான வழிமுறைகளைப் பயன்படுத்தல்.......எனப் புதிய விடயங்கள் ஏராளம்

இஸ்லாத்தின் பரந்த இந்த சமூத்திரத்தினுள் மூழ்கி முத்தெடுப்பதற்குப் பதிலாக அவர்கள் செய்த வேலை என்ன தெரியுமா? நான் ஏற்கனவே கூறியது போல தாம் முன்வைத்த கண்டுபிடித்த இஸ்லாம் போதாதென அதற்கு மேலும் உறைப்பு, உப்பு, புளி மசாலா என்பவற்றை சேர்த்ததுதான். இயல்பு நிலை பாதிக்கப்பட்டவர்களைத் தவிர வேறு எவராலும் உட்கொள்ள முடியாத ஒரு சமையலாக அவர்கள் இஸ்லாத்தை முன்வைக்கிறார்கள்.

நரக நெருப்பிலிருந்து மனிதனைக் காக்கும் வியாபாரமல்லவா இஸ்லாத்தை நிலைநாட்டுவதற்கான உழைப்பு . அவ்வாறிருக்க, நரகத்திற்கு இட்டுச் செல்லும் வங்குரோத்து வியாபாரத்தை ஏன் இவர்கள் செய்ய வேண்டும்? நாளை இவர்களால் விமர்சிக்கப்பட்டவர்களும் மானம் பறிக்கப்பட்டவர்களும் மனம் புண்படுத்தப்பட்டவர்களும் இவர்களை வழிமறித்து அல்லாஹ்விடம் நீதி கேட்டால் இறுதித்தூதர் (ஸல்லல்லாஹீ அலைஹி வஸல்லம்) அவர்கள் எச்சரித்த வங்குரோத்து நிலை தமக்கு ஏற்படாலம் என இவர்கள் அஞ்சவில்லையா?
அன்போடு உபதேசிக்கிறோம். இந்த அசிங்கமான அணுகுமுறையை விட்டு விடுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
நன்றி: ஹஜ்ஜுல் அக்பர், அல்ஹஸனாத்
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
read more "இஸ்லாத்தின் சுவை கெடுக்கும் மேலதிக மசாலாக்கள்"

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates