Elegant Rose - Diagonal Resize 2 திப்யானுல் ஹக் பாகம்- ~ TAMIL ISLAM

ஞாயிறு, 20 நவம்பர், 2011

திப்யானுல் ஹக் பாகம்-

திப்யானுல் ஹக் பாகம்-2-Tibyanul Haque-2

திப்யானுல் ஹக் பாகம்-2

தொகுத்தவர்கள்:
மௌலானா மௌலவி அல்ஹாஜ் அஷ்ஷெய்கு முஹம்மதலி ஸைபுத்தீன் ஆலிம் காதிரி ஸூபி ஹஜ்ரத் அவர்கள்.
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம்.
இன்னல்லாஹ வமலாயிகத்தஹு யுஸல்லூன அலன்னபிய்யி யா அய்யுஹல்லதீன ஆமனூ ஸல்லூ அலைஹி வ ஸல்லிமூ தஸ்லீமா.
நிச்சயமாக அல்லாஹு(தஆலாவு)ம், அவனது மலக்கு(அமரர்)களும் இந்த நபியின் மீது சலவாத்து சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! நீங்களும் அவர்கள் மீது சலவாத்தும் சலாமும் சொல்லுங்கள்.
 
                                                                                                             -அல்-குர்ஆன் 33-56.
 
என் மீது ஒரு தடைவ சலவாத்து சொன்னால் அவன் மீது அல்லாஹ் பத்து தடைவ சலவாத்து சொல்வான். பத்து தவறுகளை அவனை விட்டும் இறக்குவான்(மன்னிப்பான்) பத்து படித்தரங்களை உயர்த்துவான்.
                                                                                           மிஷ்காத் ஹதீது எண்: 922.
சலவாத்து சொல்வதற்கு அல்லாஹுதஆலாவோ, நபிகள் நாயகமோ எதையும் மட்டுப்படுத்தவில்லை. விரும்பிய நேரத்தில் விரும்பிய அளவு சொல்லலாம். மாஷிஃத – நீ விரும்பிய அளவு அதிகப்படுத்தி சலவாத்து சொல் என்று ஏவியும் இருக்கிறார்கள்.
அல்லாஹுதஆலாவும் மலக்குகளும், மனிதர்களும் ஒன்றுபோல் செய்யும் அமல் இந்த சலவாத்து மட்டும்தான். இதை அங்கே ஓதக்கூடாது, இங்கே ஓதக்கூடாது என்று என்னமோ ஹராமான பெரிய பாவத்தைப் போன்று வரிந்து கட்டிக் கொண்டு தடுப்பது, நிறுத்துவது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் பொறாமை கொள்வதுதான். அல்லாஹு தஆலா அதைவிட்டும் நம்மைக் காப்பாற்றுவானாக!
நல்ல காரியங்களுக்கு முன்னும் பின்னும் துஆவானாலும் கூட சலவாத்து ஓதுவதினால் அவைகள் அல்லாஹுத்தஆலா இடத்தில் அங்கீகாரம் பெறுகிறது.
நிச்சயமாக துஆ வானத்திற்கும், பூமிக்குமிடையில் நிறுத்தப்பட்டுள்ளது. உனது நபியின் மீது சலவாத்து சொல்லும் வரை அதில் நின்றும் எதுவும் உயராது என்று உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்னார்கள்.
                                                                                ஹதீது: திர்மிதி, மிஷ்காத் 938.
பாங்கு, இகாமத்திற்கு முன், பின் சலவாத்து ஓதுவது
'ஷரஹுல் வஸீத்தில் இமாம் நவவி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்ன பிரகாரம் இகாமத்திற்கு முன் சலவாத்து சொல்வது சுன்னத்தாகும். இதையே ஷெய்குனா இப்னு ஸியாத் அவர்கள் ஊண்டுதல் பிடித்துள்ளார்கள். பாங்கிற்கு முன் எதையும் நான் கண்டதில்லை என்று சொன்னார்கள். இமாம் ஷெய்குல் கபீருல் பக்றி அவர்கள் பாங்கிற்கும், இகாமத்திற்கும் முன்னால் நிச்சயம் சலவாத்து சொல்வது சுன்னத்தாகும் என்று சொல்லி இருக்கிறார்கள்.'
                              பத்ஹுல் முயீன், பஸ்லுன் பில்அதானி வல்இகாமதி.
அல்லாமா இப்னு ஹஜர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் சொன்னார்கள்:-
'பாங்கிற்கு முன் சலவாத்து சொல்வதும், பின்னால் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று சொல்வது சம்பந்தமாக நான் எதையும் கண்டதில்லை. நம் இமாம்களின் பேச்சுகளிலும் இதை எடுத்துக் கூறியதாகவும் நான் கண்டதில்லை(மேலே) குறிப்பிட்ட இடத்தில் இவ்விரண்டும் சுன்னத்தில்லை. அந்த குறிப்பிட்ட இடத்தில் சுன்னத் என்று நிர்ணயம் கொண்டு சொன்னால் விலக்கப்படுவான். ஆதாரமில்லாமல் மார்க்க(சட்டட)மாக்குதலாகும். ஆதாரமில்லாமல் மார்க்க(சட்ட)மாக்கினால் தண்டிக்கப்படுவான், தடுக்கப்படுவான்.'                               –பதாவா குப்றா.
ஒரு இமாம் சுன்னத் என்று தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதுவே செயல்படுத்துவதற்கு போதுமாகும். இதையே அடிப்படையாக வைத்துதான் நம் முன்னோர்களான நாதாக்கள் முற்காலத்திலிருந்தே பாங்கிற்கு முன்னும் சலவாத்தை ஓதி வந்துள்ளார்கள்.
இமாம் இப்னு ஹஜர் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள்:- நான் கண்டதில்லை, சுன்னத் என்று சொல்வதற்கு ஆதாரமில்லை, ஆதாரமில்லாமல் ஒரு காரியத்தை (மார்க்க(சட்ட) மாக சுன்னத் என்று நிர்ணயம் செய்து கொண்டு செயல்படுத்தக் கூடாது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதாரம் இல்லாமல் பர்ளு, சுன்னத், ஹராம், மக்ரூஹ்  என்று சொல்வது கூடாது என்பதும், ஆகும் என்பதற்கு ஆதாரம் தேவை இல்லை  என்பதும், பொதுவான சட்டம். பாங்கிற்கு முன் சலவாத்து 'ஆகும்' என்று நிர்ணயம் கொண்டு சொல்வதை தடுக்கவில்லை இது அவர்களது வாசகத்தின் தெளிவு.
சுன்னத் என்று சொல்லும் இமாம் ஷெய்குல் கபீருல் பக்றி ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கு என்ன அந்த பொதுச் சட்டம் தெரியாமாலா ஆதாரம் இல்லாமலா, முட்டாள்தனமாகவா சுன்னத் என்று சொல்லியிருக்கிறார்கள்? அல்லாஹுதஆலா அப்படிப்பட்ட எண்ணத்தை விட்டும் நம்மை காப்பாற்றுவானாக! அவர்களது பதவி, அந்தஸ்தை உயர்த்துவானாக! ஆமீன்.
எவ்வளவு சலவாத்தை எவ்விடத்திலும் அதிகப்படுத்தினாலும் நன்மை கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
சலவாத்தை சுருக்குவதின் விளைவு
அண்ணல் நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது திருநாமத்தை எடுதப்படும்போது 'ஸல்' என்றும், 'ஸல்அம்' என்றும், 'ஸல்லம்' என்றும், 'ஸாது' என்றும், 'அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்' என்பதற்கு 'அம்' என்றும் சுருக்கி எழுதுகிறார்கள்.
இவ்வழக்கம் நானூறு ஆண்டுகளாக பாமர மக்களிடையேயும், பெரும் உலமாக்களான மேதைகளிடமும் எப்படியோ ஊடுருவி விட்டது.
கொஞ் அளவு பேனா மை, அல்லது ஒரு அங்குல காகிதம் அல்லது சில வினாடிப் பொழுதை மிச்சப்படுத்துவதற்காக எவ்வளவோ அபரீதமான பாக்கியத்தை விட்டு விடுகின்றனர்.
முதன்முதலில் இப்படி ஸலவாத்தை சுருக்கி எழுதியவரின் கை துண்டிக்கப்பட்டதாக இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் நவின்றுள்ளார்கள்.
-மன்கதப அலைஹிஸ்ஸலாம்-பில்ஹம்ஸதி-வல்மீமி-யக்புறு லிஅன்னஹு-தக்பீபுன்-வதக்பீபுல் அன்பியாயி குப்றுன்- அலைஹிஸ்ஸலாம் என்பதை ஹம்ஸு கொண்டும், மீம் கொண்டும் ('அம்' என்று) எவன் எழுதுவானோ அவன் காபிராகுவான். ஏனென்றால், இது இலேசாக மதிப்பதாகும். நபிமார்களை இலேசாக மதிப்பது குப்றாகும்' என்று அல்லாமா செய்யிது தஹ்தாவி ரஹிமஹுல்லாஹு அவர்கள் துர்ருல் முக்தாரின் ஹாஷியாவில், பதாவா தாதர்கானியாவில் இருந்து நகல் படுத்துகிறார்கள்.
வேணுமென்று இலேசாக மதிப்பானாகில், அல்லது ஏளனமாக நினைப்பானாகில் அவன் காபிராகிவிடுவான் என்பதில் ஐயமில்லை(மஆதல்லாஹ்)
சோம்பேறித்தனமாக பொடுபோக்காக, அறியாத்தனமாக செய்வார்களாயின் அவர்கள் காபிராகமாட்டார்கள். என்றாலும் பாக்கியமற்ற நஸீபு கெட்ட வேலை இது என்றால் மிகையாகாது.
'அல்லாஹ்' என்ற திருநாமம் எழுதினால் அதற்கு பின்னால் 'தஆலா' என்றோ அல்லது  தகத்தஸ' என்றோ அல்லது 'அஸ்ஸவஜல்ல'என்றோ அல்லது இது போன்றவற்றை எழுதி கண்ணியப்படுத்த வேண்டும். இதை போன்றே அவனது தூதர் நாமம் எழுதினால் அதற்கு பின்னால் 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று எழுத வேண்டும். இது ஸலப் – முன்னோர்கள் வழக்கம் போல் கலப்-பின்னோர்கள் வழக்கம். 'ஸல்அம்' என்று சுருக்கக் சுடாது. இது பாக்கியமற்றவர்களின் வழக்கம்.
முஜ்தஹிதுகளான இமாம்களுக்கு ரலியல்லாஹு அன்ஹு என்றும் மற்றவர்களுக்கு ரஹிமஹுல்லாஹ்  என்றும் எழுத வேண்டும்.
                                                                              பதாவா ஹதீதிய்யா பக்கம் 230.
ஹதீதை எழுதக் கூடியவர் அல்லாஹுதஆலாவின் பெயரை எழுதினால் 'அஸ்ஸவஜல்ல' என்றோ, அல்லது 'தஆலா' என்றோ அல்லது சுபுஹானஹு வதஆலா' என்றோ அல்லது 'தபாரகவ தஆலா' என்றோ, அல்லது 'ஜல்லதிக்ருஹு' என்றோ அல்லது 'தபாரக இஸ்முஹு' என்றோ அல்லது 'ஜல்லத் அழ்மத்துஹு' என்றோ அல்லது இது போன்றவைகளை (இணைத்து) எழுத வேண்டும்.
இதை போன்றே நபி நாயகத்தின் பெயரை எழுதும் போது 'ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்' என்று முழுமையாக எழுத வேண்டும். இவை இரண்டின் பக்கம் சமிக்கையாகவோ ஒன்றை சுருக்கியோ எழுதக் கூடாது.
இதைப் போன்றே சஹாபியின் பெயரிலும் 'ரலியல்லாஹு அன்ஹு' என்றும், சஹாபியின் மகனாக இருந்தால் 'ரலியல்லாஹு அன்ஹுமா' என்றும், சிறந்தவர்கள், உலமாக்களாக இருந்தால் 'ரலியல்லாஹு அன்ஹு' என்றோ அல்லது 'ரஹிமஹுல்லாஹ்' என்றோ எழுத வேண்டும்(சொல்ல வேண்டும்)
                                                                               ஷரஹு முஸ்லிம் பக்கம் 73.
ஆகவே ஸஹாபா பெருமக்கள் இறைநேசச் செல்வர்களான அவ்லியாக்கள், இமாம்கள் திருப்பெயர்களோடு 'ரலியல்லாஹு அன்ஹு' என்று எழுதப்படுவதை சுருக்கி 'ரலி' என்'றும், அது போன்றே 'குத்திஸஸிர்ருஹு' என்பதற்கு சாடையாக 'க' என்றும், ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதற்கு 'ரஹ்' என்றும், எழுதப்படுவது பரக்கத்தற்ற துர்பாக்கியத்தனமாகும்.
இப்படிப்பட்ட காரியங்களை விட்டும் தற்காத்துக் கொள்வது சாலச்சிறந்தது. அதை எடுத்து நடக்க அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
                                                          (ஆதாரம்: பதாவா ஆப்பிரிக்கா பக்கம் 45)
எனவே எழுத்தாளர்களும், பத்திரிகையாளர்களும் முழுமையாக எடுதுவது, பிரசுரிப்பது மூலமாக வாசகர்களின் நாவுகளில் 'ஸலவாத்' மணத்தை கமழச் செய்வோம். அதற்குரிய நற்கூலியையும் பெற்றிடுவோம்.
'அலைஹிஸ்ஸலாம' என்று யாருக்கு சொல்லக் கூடாது?

நபிமார்கள் திருப்பெயர்களை சொல்லும்போது மட்டும் அவர்களை கண்ணியப்படுத்துவதற்காக 'அலைஹிஸ்ஸலாம்' என்று சொல்ல வேண்டும். இது அவர்களுக்கென்று சொந்தமாக்கப்பட்டது. அவர்கள் அல்லாதவர்களின் பெயர்களுக்குப் பின்னால் 'அலைஹிஸ்ஸலாம்' என்று சொல்லக் கூடாது.
'ரலியல்லாஹு அன்ஹு' என்று அல்லது 'ரஹிமஹுல்லாஹு' அல்லது ரஹ்மத்துல்லாஹி அலைஹி' என்றுதான் சொல்ல வேண்டும். 'அலைஹிஸ்ஸலாம்' என்று சொல்வது வழிகெட்ட ராபிழ்கள், ஷpயாக்கள், சிலஇமாம்களுக்கு உண்டாக்கிய வழக்கமாகும். அதை பின்பற்றி நாம் சொல்லக் கூடாது.
'முஹக்கிகீன்களான வல்லுனர்கள் சென்றதும், இமாம் மாலிக், இமாம் சுப்யான் ரஹிமஹுல்லாஹ் ஆகியோர்கள் சார்ந்ததும், இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களால் அறிவிக்கப்பட்டதும், புகஹாக்கள்-மார்க்க அறிஞர்கள், முதகல்லிமீன்கள்-கொள்கை நிர்ணய வல்லுனர்கள் தேர்ந்தெடுத்ததுவானதும்:-
நபிமார்கள் அல்லாதவர்கள் பெயர் சொல்லும் போது சலவாத்து சலாம் சொல்லக் கூடாது. இது நபிமார்களுக்கு அவர்களை கண்ணியப்படுத்துவற்காக சொந்தமாக்கப்பட்டது. அல்லாஹுதஆலாவின் பெயர் சொல்லும் போது 'தஆலா' என்பது போன்று, தூய்மை மேன்மை படுத்துவது அவனுக்கு சொந்தமாக்கப்பட்டது போன்று இது நபிமார்களுக்கு சொந்தமானது. இதில் எவரும் கூட்டாவதில்லை. இதுபோன்று நபிநாயகம்  மற்ற நபிமார்களுக்கு சொந்தமானதுதான் சலவாத்தும் சலாமும், இதிலும் மற்றவர்களை கூட்டாக்கக் கூடாது.
'ஸல்லு அலைஹி……(நபிநாயகம்) அவர்கள் மீது சலவாத்து சலாம் சொல்லுங்கள்' (35-56)  என்று அல்லாஹ் சொல்வது போலும்;, அவர்கள் அல்லாத மற்றவர்களுக்கு குப்ரான்-பிழை பொறுத்தல், ரிழா-(இறையருள்) பொருத்தம் போன்றவற்றைச் சொல்லுவது போலும், 'யகூலூன ரப்பனக்பிர்…' அவர் (முஃமின்)கள் சொல்வார்கள் இறiவா! எங்களுக்கும் எங்களைக் கொண்டு முந்தி சென்றவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் பிழை பொறுப்பாயாக! (10:59). 'வல்ல தீனத்தப ஊஹும்….. நன்மையைக் கொண்டு பின் தொடர்ந்தவர்களுக்கு ரலியல்லாஹு அன்ஹும் – அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக! (9:100) என்று குர்ஆன் ஷரீபில் வந்திருப்பது போலும் சொல்ல வேண்டும். இமாம் அபூ இம்ரான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லியிருப்பது போன்று இது (அலைஹிஸ்ஸலாம் என்று நபிமார்கள் அல்லாதவர்களுக்கு சொல்'லும் வழக்கம்) முற்காலத்தில் அறியப்பட்டதில்லை. ராபிழ்கள், ஷியாக்கள் (நபி வழித்தோன்றல்களான) சில இமாம்களுக்கு சொல்வதை புதிதாக உண்டாக்கியிருக்கிறார்கள். சுலவாத்தையும் அவர்களுக்கு கூட்டாக்கி, நபி நாயகத்தையும் அவர்களுக்கு சமமாக்கி இருக்கிறார்கள்.
பித்அத்காரர்களைக் கொண்டு ஒப்பாக நடப்பது விலக்கப்பட்டதாகும். அவர்கள் எதை தங்களுக்கு (அடையாளமாக) அவசியமாக கொள்கிறார்களோ அதற்கு மாற்றமாக நடப்பது நமது கடமையாகும்.
நபி நாயகத்தின் ஆல்கள் – கிளைஞர்கள், மனைவிமார்களுக்கு சலவாத்து சொல்வது நாயகத்தின் பெயரை தொடர்ந்து சொல்வதாகும். தனியாக குறிப்பிட்டுச் சொல்வதில்லை.
                                                        ஆதாரம்: கிதாபுஷ் ஷிபா பாகம்2, பக்கம் 83.
இதைபோன்றே நபிமார்களை தொடர்ந்து அவர்களது சங்கைமிகு மனைவிமார்களுக்கும் அலைஹி மஸ்ஸலாம் என்றும், இதை போன்றே மலக்குகளுக்கும் அலா நபிய்யினா வஅலைஹிஸ்ஸலாம் என்றும் சொல்லலாம். ஆகவே அலி அலைஹிஸ்ஸலாம், ஹஸன் அலைஹிஸ்ஸலாம், ஹுஸைன் அலைஹிஸ்ஸலாம், மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்று சொல்வது ராபிழ்கள், ஷியாக்களின் வழக்கம். இவ்வழக்கம் நம்மிடையில் எப்படியோ ஊடுருவி விட்டது. இதை நாம் தவிர்த்து கொள்ள வேண்டும்.
ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அலைஹிஸ்ஸலாம் என்று சொல்வது பெரும்பாலான இமாம்களின் சொல்படி அவர்கள் ஹயாத்துன்னபி என்பதினால் ஆகுமாகும்.
கேள்வி:- லுக்மான், மர்யம் இவர்களுக்கு நபிமார்கள் போன்று சலவாத்து சொல்வதா? அல்லது சஹாபாக்கள், அவ்லியாக்களைப் போன்று ரலியல்லாஹு அன்ஹு-அன்ஹா என்று சொல்வதா? அல்லது அலைஹி-அலைஹிஸ்ஸலாம் என்று சொல்வதா?
பதில்:- பெரும்பாலான உலமாக்கள் இவர்கள் இருவரும் நபிமார்கள் அல்ல என்று சொல்லியிருக்கிறார்கள். (நபிமார்கள் போன்று தனியாக சலவாத்தும், அலைஹிஸ்ஸலாம்-அலைஹஸ்ஸலாம் என்று  சொல்லக் கூடாது, சலவாத்து சொல்வதாக இருந்தால்) நபிமார்களை சேர்த்து இவர்களுக்கும் லுக்மான்-ஸல்லல்லாஹு அலல் அன்பியா-வ-அலைஹிஸ்ஸலாம் என்று அல்லது மர்யம்- ஸல்லல்லாஹு அலல் அன்பியா-வ-அலைஹஸ்ஸலாம் என்று சொல்ல வேண்டும். தனியாக சொல்லக் கூடாது. உறுதியான சொல் லுக்மான் ரலியல்லாஹு அன்ஹு, மர்யம் ரலியல்லாஹு அன்ஹா என்று சொல்வதுதான்.
                                                                ஆதாரம்: அத்காறுன்னவலி பக்கம் 109.
கற்றமல்லாஹு- வஜ்ஹஹு என்று சொல்வது பற்றி:
சங்கைக்குரிய அமீருல் முஃமினீன் இமாம் அலி இப்னு அபூதாலிப் அவர்களுக்கு மட்டும் 'கற்றமல்லாஹு வஜ்ஹஹு' என்று சொல்வதின் தத்துவம், இமாம் இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் 'பதாவா ஹதீதி'ல் சொல்லியிருப்பதன் சுருக்கம்:
இமாம் அலி நாயகம் கற்றமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் சிறு பிராயத்திலும் கூட சிலைகளுக்கு அறவே சுஜூது- தலைவணக்கம் செய்ததில்லை. ஆகவே அவர்களது திருமுகத்தை கண்ணியப்படுத்தி அழைக்க (துஆ செய்ய) வேண்டியது பொருத்தமாகிவிட்டது.
எதார்த்தத்தில் அவர்களது திருமுகத்தை கண்ணியமாக்குதல் என்றும், அல்லது முகத்தை சொல்லி திருமேனி பூராவையும் சமிக்ஞையாக்கி அல்லாஹுதஆலா அல்லாத சிலைகளுக்கு தலை வணங்குவதை விட்டும் அவர்களது திருமேனியை பாதுகாத்தான், கண்ணியப்படுத்தினான் என்றும் பொருள் கொள்ளலாம்.
இதன் அடிப்படையில் செய்யிதுனா அமீருல் முஃமினீன் இமாம் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களுக்கும் கற்றமல்லாஹு வஜ்ஹஹு என்று சொல்வதும் பொருத்தமாகும். ஏனெனில் அவர்களும் அறவே சிலை வணக்கம் செய்ததில்லை. என்றாலும் அலி நாயகத்திற்கு மட்டும் சொல்லும் வழக்கம் அதிகமாகி விட்டது. ஏனெனில் அவர்கள் எந்தவொரு சிலைக்கும் சுஜூது செய்யவில்லை என்பது ஏகோபித்த முடிவு. அவர்கள் சிறுவராக இருக்கும் போதே இஸ்லாம் ஆகிவிட்டார்கள்.
அப்படியானால் சிறுவயதிலே இஸ்லாம் ஆன இப்னு அப்பாஸ், இப்னு உமர், இப்னு ஜுபைர் போன்றவர்களுக்கம் கற்றமல்லாஹு வஜ்ஹஹு என்று சொல்லாமல் மற்றவர்களுக்கு சொல்வது போன்று ரலியல்லாஹு அன்ஹு என்றுதான் சொல்லப்படுகிறார்களே என்று கேட்டால்,
பதில்: ஷிர்க் – இணை வைத்தல் ஒழிந்து ஒடிந்தப் பின் வழிக்கேடு, குழப்பம் என்ற நெருப்பு அணைந்து விட்டபின் இவர்கள் பிறந்தார்கள். அவர்களோ ஷிர்க், வழிக்கேடு, குழப்பம் கொடிகட்டிப் பறந்த காலம். பெற்றோர்கள், உற்றார்கள் வற்புறுத்திய நிலையிலும், நோவினை செய்துவந்த நிலையிலும் கூட பொறுமையாக இருந்து சிலை வணக்'கம் செய்யாதிருப்பது மிக மிக பெரிய காரியம். அதனால்தான் அபூபக்கர் சித்தீக், அலி ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா அவர்களுக்கு கற்றமல்லாஹு வஜ்ஹஹு என்று சொல்லி மற்ற சஹாபாக்களை விட்டும் அலாதியாக பிரித்து காட்டுவது மிக பொருத்தமாகும்'.
                                                              ஆதாரம்:- பதாவா ஹதீதிய்யா பக்கம் 57.
'ரலியல்லாஹு அன்ஹு' என்று சொல்வது சஹாபாக்களுக்கு மட்டும் சொந்தம், மற்றவர்களுக்கு 'ரஹிமஹுல்லாஹ் என்றுதான்'; சொல்ல வேண்டும் என்று சில உலமாக்கள் சொல்வது (இதையே தேவுபந்த் வஹ்ஹாபிகள் சொல்வது) உதாவக்கரை, பெரும்பாலான உலமாக்கள் சொல்வது போன்று மற்றவர்களுக்கும் ரலியல்லாஹு அன்ஹு என்று சொல்வது தான் சரியான சொல்லாகும்.
                                                         ஆதாரம்: அத்காருன்னவலி பக்கம் 109.
பெரும்விரலை முத்தி கண்ணில் வைப்பது
'அஷ்ஹது-அன்ன-முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்' என்று பாங்கில் கேட்டதும் இரு பெரும் விரல்களை முத்தி கண்ணில் வைப்பது முஸ்தஹப்பு – விரும்பத்தக்கதாகும். இம்மை, மறுமை பயன்களை அளிக்க வல்லததாகும்.
'முதல் அஷ்ஹது-அன்ன-முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று கேட்கும்போது 'ஸல்லல்லாஹு அலைக்க யாரஸூலல்லாஹ்' என்றும், இரண்டாவது 'அஷ்ஹது-அன்ன-முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று கேட்கும்போது, 'குற்றத்து ஐனிபிக யாரஸூலல்லாஹ்' – உங்களைக் கொண்டே என் கண் குளிர்ச்சி என்று சொல்லி இருப் பெரும் விரல்களை முத்தி இரு கண்களில் வைப்பது முஸ்தஹப்பாகும். பின் 'அல்லாஹும்ம-மத்தியினி-பிஸ்ஸம்யி-வல் பஸரி -  கேள்வி, பார்வையைக் கொண்டு எனக்கு சுகிக்கச் செய்வாயாக! என்று சொல்வான். ஏனெனில் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அ(ப்படி செய்த)வனை சுவர்க்கத்திற்கு இழுத்துச் செல்வார்கள்.
ஆதாரம்:- துர்ருல் முக்தார், கன்ஜுல் இபாத், பதாவா ஸூபிய்யா, கஹ்ஸதானி, பஹ்ருற்றாயிக், ஷரஹு விகாயா.
பாங்கில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் கேட்கும்போது இருபெரும் விரலை முத்துவதும், இரு கண்களில் வைப்பதும் ஆகுமாகும். நமது nஷய்குமார்கள் முஸ்தஹப்பு என்று தெளிவாக கூறியுள்ளார்கள்.
                         பதாவா ஜமால் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் மக்கி
'முஅத்தின் -பாங்கு சொல்பவர்' அஷ;ஹது அன்னமுஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று சொல்வதை கேட்கும்போது மர்ஹபன் – பிஹபீபி-வ-குற்றத்துஐனி – சோபனம். எனது நேசரைக் கொண்டு கண்குளிர்ச்சி – முஹம்மதிப்னி அப்தில்லாஹ் – ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  என்று சொல்லி இரு பெரும் விரலை முத்தி கண்ணில் வைப்பானாகில் குருடாக மாட்டான், கண் வலி எக்காலமும் வராது.'
                                                                              இஆனா பாகம் 1, பக்கம் 243.
இரு பெரும் விரலை முத்தி கண்ணில் வைத்தால் குருடாக மாட்டான். ஒருக்காலமும் கண்வலி வராது.
               ஆதாரம்: இமாம் மாலிக் மத்ஹப் கிதாப் கிபாயத்துத் தாலிப்.
சஹீஹு அல்லாத ஹதீதுகளைக் கொண்டு செயல்படுத்துவது பற்றி
எந்த ஒரு நல்ல காரியத்தை நாம் சொன்னாலும் சஹீஹான ஹதீது இருக்கிறதா? என்ற நவீனமான யூகம் இக்காலத்தில் கிளப்பி விடப்பட்டுள்ளது.
முற்காலத்தில்  எந்த விஷயத்தை எந்த ஒரு இமாம் சொன்னாலும் அதை அப்படியே செய்வார்கள், செயல்படுத்துவார்கள். இது இமாம்களை ஆதாரம் எதுவும் டோமல் தக்லீது –பின் தொடருவதின் அடிப்படையாகும். (தக்லீது -இமாம்களை பின்தொடருதல் என்ற தலைப்பில் தனியான ஒரு நூல் எழுதி வெளியாக்கி இருக்கிறேன். அதை வேண்டுமானால் பாருங்கள்.)
ஆதாரங்களைத் தேடுவது நமக்கு கடமையில்லை. சங்கைமிகு இமாம்களுக்கு கடமை, சஹீஹானதா? பலஹீனமானதா? என்று ஆய்வு செய்வது அவர்களது பொறுப்பு, என்றாலும் ஆயத்துகள், ஹதீதுகளை ஆங்காங்கு மேற்கோள் காட்டுவது நம் மன நிம்மதிக்கு தான்.
சஹீஹு அல்லாத ஹதீதுகளைக் கொண்டு செயல்படுத்துவது பற்றி சங்கைக்குரிய இமாம்கள் சொல்வதை பாரீர்!
'ஆசை ஊட்டுவதற்கு, அச்சமூட்டுவதற்கு, சிறப்பியல்புகளை காட்டுவதற்கு, இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகள் அல்லாமல் ழயீபான-பலஹீனமான ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்யலாம். அமல் செய்வது முஸ்தஹப்பு – விரும்பத்தக்கதாகும்'
                                                                                 அதகாறுன்னவலி பக்கம் 7.
'அமல்களின் சிறப்புகளில் ழயீபான ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது ஆகுமாகும்.'
                                               ரத்துல் முஹ்தார் முதல் பாகம், பாபுல் அதான்.
'அமல்களின் சிறப்புகளில் ழயீபான ஹதீதுகள் முர்ஸல்-தொடர்பில்லாத, முஃழல், முன்கதிவு-தொடர் அறுந்துவிட்ட ஹதீதுகளைக் கொண்டு அமல் செய்வது ஆகும் என்பது ஏகோபித்த, ஒற்றுமையான முடிவாகும்.
ஆதாரம்:- இமாம் இப்னு ஹஜர் அவர்களின் பதாவா ஹதீதிய்யா பக்கம் 132.
'மாற ஆஹுல் – முஃமினூன ஹஸன்-பஹுவ-இன்தல்லாஹி ஹஸனுன்….. முஃமின்கள் எதை நன்மையானதாக கருதுகின்றார்களோ, அது அல்லாஹ் தஆலா இடமும் நன்மையாகும்' என்ற ஹதீதும் இதற்கு துணையாக இருக்கிறது.

பித்அத்தும் அதன் வகைகளும்
'பித்அத்' என்பது அகராதி பாiஷயில் புதிதாக ஓர் காரியத்தை உண்டாக்குவது. இஸ்லாமிய பரிபாiஷயில், நபிகள் நாயகம் ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்' அவர்களது ஜீவிய காலத்தில் வெளிப்படையாக இல்லாதவற்றை உண்டாக்குவது.
'மன்அஹ்தத –பீஅம்ரினா-ஹாதா-மாலைஸ-மின்ஹு-பஹுவ-ரத்துன் – நமது இந்த (மார்க்க) காரியத்தில் இல்லாத புதிதான ஒன்றை உண்டாக்கினால் அது மறுக்கப்பட்டதாகும்.'
                                                                                                   மிஷ்காத் பக்கம் 27.
இந்த ஹதீதின் கருத்தை அல்லாமா முல்லா அலி காரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இதன் விரிவுரையில் கூறுகிறார்கள்:-
'குர்ஆன், ஹதீதுகளில் வெளிப்படையாக, அல்லது மறைமுகமாக மொழியப்படாத அல்லது கிரகித்து எடுக்கப்படாத ஒரு புதிய அபிப்பிராய விஷயத்தை இஸ்லாத்தில் உண்டாக்குவானாகில் அது மறுக்கப்பட்டதாகும் என்பதுதான்.
                                                             மிர்காத்து ஷரஹு மிஷ்காத் பக்கம் 27.
மார்க்கத்திற்கு மாறுபடாது துணையானவைகள் அல்லது அதற்கு விதர்ப்பமில்லாதவைகள், விரும்பத்தகாதானவைகளை உண்டாக்குவது சில சமயம் அவசியமாகும், சுன்னத்தாகவும், ஆகுமானதாகவும் ஆகும். எனவே எந்த ஒரு நல்ல பித்அத்தை உண்டாக்கக் கூடாது என்பது ஹதீதின் கருத்தல்ல.
'மன்ஸன்ன-பில் இஸ்லாமி-சுன்னத்தன்-ஹஸனத்தன்-பலஹு அஜ்ருஹா….' ஒருவன் இஸ்லாத்தில் அழகிய சுன்னத்தை (வழிமுறையை) உண்டாக்குவானால் அவனுக்கு அதற்கான (நற்) கூலியும், இன்னும் அதன்படி அவனுக்குப் பின்னால் அமல் செய்தவனின் (நற்) கூலியும் எவ்வித குறைவின்றி இவனுக்கும் கிடைக்கும். இன்னும் ஒருவன் இஸ்லாத்தில் கெட்ட சுன்னத்தை (வழி முறையை) உண்டாக்கினால் அவனுக்கு அதற்கான பாவமும், அதன்படி அவனுக்குப் பின்னால் அமல் செய்தவனின் பாவமும் எவ்வித எவ்வித குறைவின்றி இவனுக்கும் கிடைக்கும்.'
                                                                                              மிஷ்காத் பக்கம் 33.
'தீமையான காரியத்தை பித்அத்தாக (புதிதாக) உண்டாக்கினால் அவனுக்கு அதன் பாவமும், அவனை பின்பற்றியவர்களின் பாவமும் கிடைக்கும். நன்மையான காரியத்தை பித்அத்தாக (புதிதாக) உண்டாக்கினால் அவனுக்கு அதன் நன்மையும், கியாமத் நாள்வரை அதன்படி அமல்செய்கிறவர்களின் நன்மையும் கிடைக்கும் என்பது இஸ்லாத்தின் முக்கியமான சட்டமாகும் என்று உலமாக்கள் சொல்லியிருக்கிறார்கள்.
                                                                    துர்ருல் முக்தார்- பாபுல் பழாயில்.
ஆகவே நல்ல பித்அத்தை உண்டாக்குவது நன்மையை பயக்கும். கெட்ட பித்அத்தை உ;ணடாக்குவது திண்மையை பயக்கும் என்பது தெளிவாகி விட்டதினால் ஹதீது ஷரீபில் வந்துள்ள 'குல்லு-பித்அத்தின்-ழலாலத்துன் -எல்லா பித்அத்தும் வழிகேடு என்பதற்கு குல்லு பித்அத்தின் (செய்யி அத்தின்) தின்மையான பித்அத் அனைத்தும் வழி கேடு என்று பொருள் கொள்வது அவசியமாகும். இதை இதற்கு பின்வரும் பித்அத்தின் வகைகள் உறுதிப்படுத்ததுகின்றது.
பித்அத்தின் வகைகள்
பித்அத் ஐந்து வகைப்படும்.
1.    வாஜிபதுன் – கட்டாயமான கடமை (உதாரணம்) குர்ஆன் ஷரீப், (ஹதீது ஷரீப்) மற்றுமுள்ள மார்க்க சம்பந்தமான நூற்களை செம்மைபடுத்தி வெளியிடுவது.
2.    முஹற்றமதுன் – ஹறாமாக்கப்பட்டது. (உதாரணம்) ஜபரிய்யா, (கதரிய்யா, வஹ்ஹாபிய்யா) போன்ற கெட்ட கொள்கைகள் (செயல்பாடுகள்)
3.    மன்தூபத்துன் – சுன்னத்தானவைகள் (உதாரணம்) தவசாலைகள், மத்ரஸாக்கள் – பாடசாலைகள் போன்றவற்றை உண்டாக்குவதும் முற்காலத்தில் இல்லாத நன்மையான காரியங்களை உண்டாக்குவதுமாகும். தராவீஹ் தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதுமாகும்.
4.    மக்ரூஹத்துன் – வெறுக்கப்பட்டவைகள்; (உதாரணம்) பள்ளிவாசல்களை பெருமைக்காக (தேவையில்லாது) அழகுப்படுத்துவது.
5.    முபாஹத்துன் – ஆகுமாக்கப்பட்டவைகள். (உதாரணம்) சுப்ஹு, அஸர் தொழுகைக்குப் பின் முஸாபஹா செய்வதும், உணவிலும் குடிப்பிலும் இன்பகரமானவற்றை விஸ்தீரணப்படுத்துவதுமாகும்.
                                        ஆதாரம்: மிஷ்காத் ஷரஹு மிர்காத் பக்கம் 27.
                      இஆனா ஷரஹு பத்ஹுல் முயீன் பாகம் 1, பக்கம் 271.
'குர்ஆனுக்கோ அல்லது சுன்னத்திற்கோ அல்லது இஜ்மாவு(ஏகோபித்த முடிவு)க்கோ அல்லது அதர் – நல்வழிமுறைக்கோ மாற்றாக புதிதாக உண்டாக்கப்பட்டால் அது வழிகேடான பித்அத்தாகும். இவைகளில் எதற்கும் மாற்றமில்லாமல் நல்லதாக உண்டாக்கப்பட்டால் அது புகழப்பட்ட பித்அத்தாகும் என்று இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
                       இஆனா ஷரஹு பத்ஹுல் முயீன் பாகம் 1, பக்கம் 271.
ஆகவே சத்திய விளக்கத்தை சத்தியமாக விளங்கி அதன்படி அமல் செய்வதற்கும், அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதை விட்டும் விலகிக் கொள்வதற்கும் எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலா தவ்பீக் -நல்லருள் புரிவானாக! ஆமீன்.

(நிறைவடைந்தது.)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates