Elegant Rose - Diagonal Resize 2 விபச்சாரம் - ஒரு பார்வை ~ TAMIL ISLAM

வெள்ளி, 16 மார்ச், 2012

விபச்சாரம் - ஒரு பார்வை



o பெண்மையும், விபச்சாரமும்

o தொழில்வளம் இல்லாத சமூகங்களில் விபச்சாரம்
o பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள்
o பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில்
o பல்வேறு பரிமாணங்களில் 20-ம் நூற்றாண்டில் விபச்சாரம்
o இஸ்லாமியப்பார்வையில் விபச்சாரம்
நபிமொழி எச்சரிக்கை
''ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்) ''விபசாரத்தை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்

வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)
பெண்மையும், விபச்சாரமும்
விபச்சாரம், பொருளாதார நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். வறுமை தான் விபச்சாரத்தின் பக்கம் பெண்களை நெருங்கச் செய்கின்றது, அவர்கள் தங்களது உடல் இச்சைகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பணம், பரிசுகள் அல்லது சம்பளம் என்பன கிடைக்கின்றன. அதாவது விபச்சாரம் என்ற தொழிலில் பெண்களின் உடம்பே மூலதனமாகப் பயன்படுகின்றது.
இந்த விபச்சாரம் என்பது ஓரினச் சேர்க்கை மற்றும் எதிர்எதிர் பாலினருடன் வைத்துக் கொள்ளக் கூடிய பொருளாதாரம் சார்ந்த ஒன்று என்று கருத்துக் கூறப்படுகின்றது. வரலாறு நெடுகிலும் இந்தப் பாலியல் சார்ந்த தொழில் பெண்கள் தான் அதிகமாக சீரழிக்கப்பட்டு வருகின்றனர். ஏனென்றால் அவர்களது உடம்பு தான் அந்தத் தொழிலின் உன்னதமான மூலதனம். காரணம், சமூகத்தில் நிலவுகின்ற சமூக பொருளாதார காரணங்கள் தான் பெண்களை இந்த விபச்சாரத்தின் பக்கம் கொண்டு வருகின்றன.
இன்னும் இந்த உலகத்தின் மிகப் புராதானமானதொரு தொழிலாக பல்வேறு சமூக கலாச்சாரங்களுக்கு மத்தியில் இருந்து வந்தது என்பதும், அதில் பெண்கள் மூலதனமாக்கப்பட்டிருந்தார்கள் என்ற நிலை கடந்த 19 ம் நூற்றாண்டு வரைக்கும் இருந்து வந்திருக்கின்றது என்பதையும், ஆண்களே இந்தத் தொழிலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள் என்பதையும் பார்க்க முடிகின்றது. அநேகமாக ஆண்களே இந்தத் தொழிலுக்கு வாடிக்கையாளர்களாக இருந்துள்ளார்கள் என்பதும், சிலவேளைகளில் ஆண்களும் பெண்களைப் போலவே விபச்சாரர்களாகவும் இருந்துள்ளதையும் பார்க்க முடிகின்றது.
மேலும், கடந்த காலங்களில் சிறுமிகளும் கூட இந்த விபச்சாரத்திற்குள் தள்ளப்பட்ட அவல நிலையையும் தாய்லாந்து, ஜப்பான் போன்ற நாடுகளில் நடந்து வருவதையும் பார்க்க முடிகின்றது. இவர்களது முக்கியமான குறிக்கோள் பணம் சம்பாதிப்பது மட்டுமேயாகும். குறிப்பாக சிறுமிகளை விப்பச்சாரத்தில் ஈடுபட வைப்பது என்பது உலகம் முழுவதும் நடைபெற்று வரக் கூடியதொரு தொழிலாகவே மாறி விட்டது, இதில் பயனாளிகளாக இருப்பவர்கள் பணக்கார நாடுகளைச் சேர்ந்த உல்லாசப் பிரியர்கள், இவர்களது உடல் பசியைத் தீர்க்கக் கூடியவர்களாக ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள். இதிலிருந்து பணம் என்ற ஒன்றே இந்த விபச்சாரத்தை ஒரு தொழிலாக மாற்றி வைத்திருக்கின்றது.
பண்டைய காலங்களில் விபச்சாரமானது பல்வேறு முகங்களில் பரவி இருந்தது. அது சமூக, பொருளாதார மற்றும் அந்த பகுதியின் அமைப்பைப் பொறுத்து மாறுபடக் கூடியதாக இருந்தது. இது மதச்சார்பற்ற அல்லது சில சமயங்களில் மதத்தின் அடிப்படையிலும் இந்த தொழில் கொடி கட்டிப் பறந்தது. சில சமூகங்களில் விபச்சாரத்தில் ஈடுபடுவது என்பது தங்களது குடும்பத்தின் இருப்பைத் தக்க வைப்பதற்கான காரணியாக இருந்தது. அதாவது, நம் நாடுகளில் ஆரம்ப காலங்களில் காணப்பட்ட தேவதாசி முறைகளைப் போல.
பெண்கள் வற்புறுத்தல் மூலமாக அல்லது பலவந்தமாக அல்லது பொருளாதாரத் தேவையின் பொருட்டே அநேகமாக இந்தத் தொழிலுக்குள் நுழையக் கூடியவர்களாக இருக்கின்றார்கள். சில சமூகங்களில் இந்தத் தொழிலை மக்கள் அவமானகரமானதாகக் கருதியதோடு, அவ்வாறான பெண்களுக்கு சமூக அந்தஸ்தை வழங்க மறுத்தார்கள், ஏனென்றால் அவர்கள் வாழக் கூடிய அந்த சமூகம் இதனை இழிதொழிலாகக் கருதியதே காரணமாக இருந்தது. இன்னும் சில இடங்களில், சில விபச்சாரிகள் செல்வ வளத்தையும் இன்னும் அதிகாரத்தையும் கூட தங்களது திருமண உறவுகளின் மூலம் பெற்றுக் கொண்டார்கள். உதாரணமாக, பைஸாந்தியப் பேரரசர் ஜஸ்டின்(1) என்பவரது மனைவி தியோடோரா என்பவள் ஒரு விபச்சாரி என்பது குறிப்பிடத்தக்கது. மன்னரை மணந்து கொண்டதன் மூலம் அவள் மகாராணியாகி விட்டாள்.
தொழில்வளம் இல்லாத சமூகங்களில் விபச்சாரம் 
தொழில் வளர்ச்சியடையாதிருந்த சமூகங்களில் விபச்சாரம் பரவி இருந்தது. தங்களது மனைவிமார்களைக் கூட மாற்றிக் கொள்வது இந்த சமூகங்களில் காணப்பட்டது. பண்டைய கால மத்திய கிழக்கு, இந்தியா, போன்ற நாடுகளில் கோயில்களில் ஏராளமான விபச்சாரிகள் இருந்தார்கள். இவர்கள் சில சமயங்களில் அதிகம் படித்தவர்களாகவும், திறமை மிக்க நாட்டிய மங்கைகளாகவும், பாடகிகளாகவும், பாடல்கள் இயற்றும் கவிஞர்களாகவும், புலவர்களாகவும், குறிப்பாக இவர்களிடம் மலிந்திருந்த கலைகள் மற்ற பெண்களுக்கு தடுக்கப்பட்டதாகவும் இருந்தது. இவர்களிடம் உடலுறவு வைத்துக் கொள்வது என்பது கடவுளிடம் ஐக்கியமாகி விடுவதற்குச் சமமாகக் கருதப்பட்டது.
பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில்...
பண்டைய கால கிரீஸ் நாகரீகத்தில், விபச்சாரம் என்பது சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் பரவி இருந்தது. விபச்சாரத்திலேயே கீழ் மட்டத்தில் இருப்பவர் அனுமதி பெற்றுக் கொண்ட சிவப்பு விளக்குப் பகுதிகளில் பணியாற்றினார்கள், இன்னும் அவர்கள் தாங்கள் அனுமதி பெற்ற விபச்சாரிகள் என்பதை அறிவிப்பதற்காக வேண்டிய அடையாள அட்டைகளையும் தொங்க விட்டிருந்தார்கள். விபச்சாரத்தில் உயர்மட்டத்தில் பணியாற்றக் கூடிய பெண்கள் நடன மங்கைகளாகவும், பாடகிகளாகவும் இருந்தார்கள். இந்த உயர் மட்டத்து விபச்சாரிகள் அரசியல் பிரமுகர்கள் கூடும் கிளப்புகளில் பணியாற்றினார்கள், அவர்களில் சிலர் அதிகார மட்டத்துத் தொடர்புகள் காரணமாக உயர் அந்தஸ்துகளையும் அதிகார மட்டத்தில் பெற்றுக் கொண்டார்கள்.
பண்டைய கால ரோமாபுரியில், விபச்சாரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் பொதுவாக காணப்பட்டன. இருப்பினும், வெளிதேசங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பெண்ணடிமைகள், கட்டாயப்படுத்தப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள், இன்னும் அவர்களது எஜமானர்களால் பாலியல் வன்முறைக்குப்படுத்தப்பட்டார்கள். இவ்வாறாக அடிமைகளை விபச்சாரத்தில் தள்ளப்படுவதை ரோமர்கள் தடுக்க முயற்சி செய்தார்கள். இதற்காக கடுமையான நடவடிக்கையையும் எடுத்தார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள அதற்கென உள்ள அடையாளமிடப்பட்ட அடையாள அட்டைகளை அணிந்து கொள்வது, தங்களது பெயர்களை அரசு பதிவகத்தில் பதிந்து கொள்வது என்ற நிலை இருந்தது, மற்றும் அவர்கள் மீது கடுமையான வரியும் விதிக்கப்பட்டது.

மத்திய காலங்களில், மக்களின் கற்பு நெறியைப் பாதுகாக்கும் பொருட்டு கிறிஸ்தவ சர்ச்சுகள், விபச்சாரத்தில் ஈடுபடுவோர்களை மதம் மாற்றினார்கள் அல்லது அவர்களுக்கென மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தினார்கள். ஆனால் இந்த தொழிலுக்கு எதிராக அவர்கள் போராடுவதற்கு முன்வரவில்லை. புனித அகஸ்தின் என்பவரது அறிவுரையின்படி, அவ்வாறு அந்தத் தொழிலைத் தடை செய்தால், அதன் காரணமாக முன்பைக் காட்டிலும் அதிகமான அளவில் ஒழுக்க வீழ்ச்சியை நோக்கி ஆண்கள் செல்வார்கள் அல்லது தவறான வழியில் திருமண உறவிற்கு அப்பால் தங்களது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்குக் கிளம்பி விடுவார்கள் என்று கூறப்பட்டது. மத்திய கால ஐரோப்பாவில் அரசால் அனுமதி வழங்கப்பட்ட விபச்சார மையங்கள் தேசமெங்கும் காணப்பட்டன, இந்த விபச்சார மையங்கள் மூலமாக அரசு அதிகாரிகளுக்கும், இன்னும் தவறான வழியில் செல்லும் தேவாலயப் பிரமுகர்களுக்கும் அதிக வருமானத்தைக் கொடுத்தன.
ஆசியாவைப் பொருத்தவரையில், பெண்களை கீழ்த்தரமான படைப்பாகக் கருதினார்கள், அவர்களுக்கு மத அடிப்படையில் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை; தடுக்கும் அச்சுறுத்தும் சட்டங்கள் இருக்கவில்லை, மாறாக விபச்சாரம் என்பது பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டதொன்றாகவே இருந்து வந்தது.
16-ம் நூற்றாண்டிலிருந்து புராட்டஸ்டண்டு மற்றும் கத்தோலிக்க திருச்சபைகளின் நடவடிக்கைகளின் மூலமாக இந்த விபச்சாரம் குறைய ஆரம்பித்தது. விபச்சாரம் என்பது ஒழுக்கக் கேடானது என்றும், அதில் ஈடுபடுபவர்கள் ஒழுக்கக் கேடானவர்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது, அவ்வாறானதொரு நடவடிக்கை எடுப்பதற்குக் காரணம் இருந்தது, அப்பொழுது மக்களிடையே அதிமான பால்வினை நோய்கள், அதாவது 'சிபிலிஸ்" போன்ற பால்வினை நோய்கள் வெகுவேகமாகப் பரவ ஆரம்பித்ததே இந்த நடவடிக்கைக்குக் காரணமாக அமைந்தது. நகரின் பல்வேறு விபச்சார மையங்களை அதிகாரிகள் மூடினார்கள்.
கி.பி.1635 ம் ஆண்டு பாரிஸ் இயற்றப்பட்ட சட்டத்தின்படி, விபச்சாரிகளுக்கு கசையடி கொடுக்கப்பட்டது, அவர்களது தலை மொட்டை அடிக்கப்பட்டது, முன் விசாரணை இன்றி அவர்கள் நாடு கடத்தவும்பட்டார்கள்.
தொழில்வளர்ச்சியடைந்த நாடுகளில் விபச்சாரம் தொழில் வளர்ச்சி குன்றிய நாடுகளில் தான் பொருளாதார நோக்கத்தை முன்னிட்டு பெண்கள் விபச்சாரத்தை நாடினார்கள் என்று முன்பு பார்த்தோம். ஆனால், தொழில் வளர்ச்சியடைந்த நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு இடையேயும் விபச்சாரம் என்பது வெளிப்படையானதொன்றாக மாறிப் போனது, வளர்ச்சியடைந்தது, அத்துடன் பாலியல் நோய்களும் கூட அதிகம் பரவ ஆரம்பித்தன. இன்னும் 18 மற்றும் 19 ம் நூற்றாண்டுகளில் மேற்குலகில் மக்கள் அதிகம் வாழ்ந்த பெருநகரங்களில் விபச்சாரம் கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது.
1700-ம் ஆண்டுகளில் ஐரோப்பா மற்றும் ரஷ்ய எல்லைப் பகுதிகளில் பரவி வந்த பால்வினை நோய்களைக் கட்டுப்படுத்தும் முகமாக விபச்சார மையங்களையும், விபச்சாரத்தில் ஈடுபடுவோர்களையும் அரசு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளும் நடைமுறையைக் கொண்டு வந்தார்கள். அவ்வாறு லைசன்ஸ் வழங்கப்பட்ட விப்பச்சார மையங்களுக்கு அடிக்கடி மருத்துவ பரிசோதகர்கள் சென்று பரிசோதித்தும் வந்தார்கள். ஆனால், பிரிட்டனில் லைசன்ஸ் வழங்கும் நடைமுறை இல்லையெனினும், 1860 ல் இயற்றப்பட்ட கொள்ளைநோய் தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் விபச்சாரிகளுக்கு மருத்துவ பரிசோதனை அளிக்கப்பட்டது, மற்றும் கப்பல்துறை மற்றும் இராணுவ மையங்களில் விபச்சாரம் அனுமதிக்கப்பட்டது.
பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் சிவப்பு விளக்குப் பகுதிகளில் இந்த விபச்சாரம் வெளிப்படையாகவே கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தது. நகர அதிகாரிகள் விபச்சாரத்தை ''தேவையானதொரு தீமை"" என்றே கருதினார்கள். இந்தப் பகுதியில் வாழக் கூடிய ஏதாவதொரு கண்ணியமிக்கதொரு மனிதர் தலையிடும் வரைக்கும், அதிகாரிகள் விபச்சாரத் தொழிலை அந்தப் பகுதிகளில் அனுமதித்தார்கள். அதுமட்டுமல்ல, பண்டங்கள் போல ஒருநாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு விபச்சாரிகள் கொண்டு போகப்பட்டார்கள், விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.
விபச்சாரத் தொழிலுக்கு வழங்கி வந்த லைசன்ஸ் முறைகளில் நடந்த முறைகேடுகள், பல்வேறு கிளர்ச்சிகளை பிரிட்டனிலும், ஐரோப்பிலும் உண்டாக்கியது.
பிரிட்டனில் கொண்டு வரப்பட்ட கொள்ளை நோய்களுக்கு எதிரான சட்டத்தினால் எந்தவிதமான சாதகங்களும் விளையவில்லை, மாறாக, தங்களது சொந்த வாழ்வில், சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அது அமைவதாக மக்கள் கருத ஆரம்பித்தார்கள். விபச்சாரத் தொழிலுக்காக பெண்களும், குழந்தைகளும் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு பல்வேறு தடுப்பு முறைகளை பல்வேறு நாடுகள் கொண்டு வந்தன. இவ்வாறு பெண்களையும், குழந்தைகளையும் விபச்சாரத்திற்காக கடத்துவதை கிரிமினல் குற்றம் என்று பிரிட்டன் அறிவித்தது, இதற்காக 1885 ல் கிரிமினல் சட்ட வரையறையை அறிவித்தது. இன்னும் 1904 ல் 13 வளர்ந்த நாடுகள் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த கடத்தலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளில் பரஸ்பரம் ஒத்துழைப்பு வழங்கிக் கொள்ளவும், தகவல் பரிமாற்றம் செய்து கொள்ளவும் தீர்மானித்தன.
1910-ல் அமெரிக்காவானது, வெள்ளை அடிமைகள் கடத்தல் தடுப்பு - ன் அடிப்படையில், பெண்களையும், சிறுமிகளையும் 'ஒழுங்கீன" நோக்கத்தின் அடிப்படையில் (விபச்சாரத்திற்காக கடத்துவதை) தடை செய்தது.
பல்வேறு பரிமாணங்களில் 20-ம் நூற்றாண்டில் விபச்சாரம்
20-ம் நூற்றாண்டில் விபச்சாரம் என்பது பல்வேறு பரிமாணங்களில் தலையெடுக்க ஆரம்பித்தது. சில விபச்சாரிகள் தங்களை ''கார்ல் கேர்ள்ஸ்"" என்றழைத்துக் கொண்டு, தங்களுக்கென்றதொரு முகவரியில் இருந்து கொண்டு, வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த ஆரம்பித்தனர். இன்னும் சிலர் மஸாஜ் பார்லர்களில், அதாவது விபச்சார விடுதி என்றில்லாமல் புதியவகை முகத்தோடு தொழில் செய்ய ஆரம்பித்தனர். அநேகமாக தெருவில் வசிக்கக் கூடியவர்கள் தான் இதுமாதியான விபச்சார விடுதிகளுக்கு வாடிக்கையாளர்களைக் கொண்டு சேர்க்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இன்னும் கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறம் நோக்கி வரக் கூடியவர்கள், தங்களது வாழ்க்கைத் தேவையை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு, இந்தத் தொழிலில் கால் பதிக்க ஆரம்பித்தனர்.
இவ்வாறு வீட்டை விட்டு ஓடி வந்த ஆண்களில் சிலர் வாடிக்கையாளர்களைக் கொண்டு வருபவர்களாக மாறினார்கள், பெண்கள் விபச்சார விடுதிகளில் பணியாற்ற ஆரம்பித்தார்கள். இவை யாவும் இவர்களை பொருளாதாரத் தேவையை நிறைவு செய்து கொள்ளுமுகமாகத் தான் இந்தத் தொழிலில் ஈடுபட வைத்தன.

பொதுவாக எல்லா சமூகங்களிலும் விபச்சாரத்தை அங்கீகரிக்கவில்லை எனினும், அரசாங்கங்கள் இதனைத்தடை செய்திருப்பினும், விபச்சாரத்திற்கு ஆதரவு தருவது, விபச்சாரிகளை வைத்திருப்பது அல்லது அது சார்ந்த தொழிலின் மூலம் வருமானம் பார்ப்பது ஆகியவையே சட்டங்களால் தடை செய்யப்பட்டது என்றாகியது. இன்னும் இந்தத் தொழிலில் ஈடுபடக் கூடிய விபச்சாரிகளின் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டதே ஒழிய, அவர்களது வாடிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இல்லை.
அநேகமாக விபச்சார மையங்களை ஆண்களே நடத்துபவர்களாக நிர்வகிப்பவர்களாக இருக்கின்றார்கள், பெண்கள் தங்களது உடம்பை விற்றுப் பெறுகிற கூலியில் இந்த ஆண்களே அதிக ஊதியத்தை எடுத்துக் கொண்டார்கள். சம்பாத்தியத்தில் ஓரளவு பணத்தையே அந்தப் பெண்களுக்கு வழங்கியதோடு, அரசின் நடவடிக்கைகளின் பொழுது தேவைப்பட்டால் அவர்களுக்காக பிணையாளர்களாகவும் செயல்பட்டு அவர்களை சிறையிலிருந்து வெளியே கொண்டு வர உதவினார்கள். விபச்சார மைய நிர்வாகிக்கும், விபச்சாரிக்கும் உறவு முறைகளில் நெருக்கம் இருந்தாலும், அநேகமான நேரங்களில் விபச்சாரியே பாதிப்புக்கு ஆளாகக் கூடியவளாக இருந்தாள் என்பது தெளிவு.
அமெரிக்கா : பாலியல் பலாத்காரங்கள்
பணியிடங்களில் நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் :
ஆண்களும் பெண்களும் கலந்து பணியாற்றும் இடங்கள் எதுவாக இருப்பினும் அவற்றில் 40-70 சதவீதப் பெண்களும், 10-20 சதவீத ஆண்களும் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுகின்றார்கள் என்று ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.

அமெரிக்காவில் அமைக்கப்பட்டுள்ள (Equal employment opportunity commission- (EEOC) கமிஷனிடம் ஒவ்வொரு ஆண்டும் 15 ஆயிரம் வழக்குகள் கொண்டு வரப்படுகின்றன. இதில் அதிசயம் என்னவென்றால் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று குற்றம் சாட்டும் ஆண்களின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் இப்பொழுது மும்மடங்கு அதிகரித்துள்ளது என்கிறது இந்த அமைப்பு. சமீபகாலமாக, பணியிடங்களில் தங்களின் மேலதிகாரிகளாக வேலைபார்க்கும் பெண்களினால் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றோம் என்று 11 சதவீத வழக்குகள் பதிவாகி இருக்கின்றன.
1999-ல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்படையில் 62 சதவீத கம்பெனிகள் தங்களது தொழிலாளர்களுக்கு பாலியல் பலாத்காரத்தினை எவ்வாறு தடுத்துக் கொள்வது என்பதற்கான பயிற்சியை வழங்கி இருக்கின்றன. இதில் 97 சதவீதக் கம்பெனிகள் பாலியல் பலாத்காரத்தினை எதிர்கொள்வது குறித்த கொள்கையை வகுத்து வைத்துள்ளன.
லூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது. அதில்,
o பணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.
o 7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,
o 62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்
o இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும்
o 59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்
o 41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்
பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :
o 43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
o 27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்

o 19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்
o 8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
கல்விக் கூடங்களில் :
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :
o 85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்

o 76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
o 31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்
o 18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்
o 13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்
o அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,
o 25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்
o 10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றது
அமெரிக்காவில் பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்
o 12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்
o 21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்
o 11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்
o 3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வு அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :
o பள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்
o இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்

o 50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.
இஸ்லாமியப்பார்வையில் விபச்சாரம்
விபச்சாரம் இஸ்லாமிய நோக்கில் மிகப் பெரிய பாவமும் குற்றச் செயலுமாகும். இஸ்லாம் விபசாரத்தை மட்டுமன்றி அதற்கு தூண்டுதல் வழங்குகின்ற அனைத்தையும் விலக்கியுள்ளது. இந்த வகையில் நாம் மேலே குறிப்பிட்டது போல, ஓர் ஆண் அந்நிய பெண்ணுடன் அல்லது ஒரு பெண் அந்நிய ஆணுடன் தனித்திருத்தல், ஆண்கள் - பெண்கள் சுதந்திரமாகப் பழகுதல் ஆகியவற்றுடன் நடனம், ஆபாசப் படங்கள், பாடல்கள், தரக்குறைவான இலக்கியப் படைப்புக்கள், கெட்ட பார்வை, காதல் போன்றவற்றையும் இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது.
விபச்சாரத்தை ஆகக் கூடிய தண்டனை வழங்கப்படவேண்டிய குற்றமாக இஸ்லாம் கருதுகின்றது. இஸ்லாமிய ஷரீஅத் அமுலில் உள்ள இடத்தில் ஓர் ஆணோ பெண்ணோ விபச்சாரம் புரிந்தால் அவருக்குக் கல்லெறிந்து கொல்லும் தண்டனை வழங்கப்பட வேண்டும். திருமணமாகாதவருக்கு தலா நூறு கசையடி வழங்கப்பட வேண்டும் என்பது இஸ்லாத்தின் தீர்ப்பாகும்.

விபசாரத்தினால் விளையும் ஆன்மீக, மறுமைப் பாதிப்புக்கள் பற்றி விளக்கும் நபிமொழிகளும் உண்டு. அவற்றுள் பின்வருவன குறிப்பிடத்தக்கவையாகும்:
''ஒருவர் விபச்சாரம் செய்யும் நிலையில் முஃமினாக இருக்க மாட்டார்' (புகாரி, முஸ்லிம்)
மோசமான நான்கு விளைவுகள்
''விபசாரத்தை விட்டு உங்களை எச்சரிக்கின்றேன். அதில் நான்கு விளைவுகள் இருக்கின்றன. அவையாவன:
முகத்தின் வசீகரத்தை நீக்கிவிடும்
வருமானத்தை அறுத்துவிடும்
ரஹ்மானின் கோபத்தைப் பெற்றுக் கொடுக்கும்
நரகில் நிலைத்திருக்க வழிவகுக்கும்' (ஆதாரம் : அத்தபராணி)
எனவே, தகாத பாலியல் தொடர்பு உடலாரோக்கியத்தைக் கெடுக்கின்றது. உள்ளத்தைக் கெடுக்கின்றது. அறிவையும், ஆன்மாவையும் பாதிக்கின்றது. தனிமனிதனை அழித்து, குடும்பவாழ்வை குட்டிச்சுவராக்கி விடுகின்றது. இறுதியில் முழுசமூக வாழ்வுக்கும் வேட்டு வைக்கிறது. இஸ்லாம் மனிதனது இயல்பான பாலுணர்ச்சியைத் தீர்த்துக்கொள்ளவே பண்பாடான திருமணம் என்ற ஒழுங்கைத் தந்துள்ளது. ஹராமானவற்றை நாடவேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு இந்த தீனுக்கூடாக அனைத்தையும் ஹலாலாக்கி தந்திருப்பது அல்லாஹ்வின் பேரருளாகும்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates