Elegant Rose - Diagonal Resize 2 தௌஹீதும் ஷிர்க்கும்-Thowheed and Shirk ~ TAMIL ISLAM

வெள்ளி, 16 மார்ச், 2012

தௌஹீதும் ஷிர்க்கும்-Thowheed and Shirk


By: மௌலவி அஸ்ஸெய்யித் ஹாஃபிள் அப்துர் ரஹ்மான் பாகவி ஃபாளில் அஹ்ஸனி அவர்கள்.
'தவ்ஹீத்' என்ற வார்த்தையின் நேரடி பொருள் ஏகத்துவம், ஏகத்துவப் படுத்துல் ஆகும். படைப்புகளிலிருந்து படைத்தவனை தனித்தன்மையுடன் தூய்மைப் படுத்துவதாகும் இதன் நோக்கம். இஸ்லாமிய உலகில் தவ்ஹீத் என்பதின் உட்கருத்து இறைத்தன்மையிலும், அதன் பிரிவுகளான தனித்தன்மைகளிலும் அல்லாஹ்விற்கு இணையானவன் இல்லை என்று உறுதியாக நம்புவதாகும்.
இறைத் தன்மை என்றால், காலங்களுக்கும், இடங்களுக்கும் அப்பாற்பட்டு எப்போதும் இருப்பவன் என்ற கருத்தைக் கொண்ட 'வாஜிபுல் வுஜூத்' என்பதாகும்.
தனித் தன்மைகள் என்பது படைத்தல், காத்தல், வணங்குவதற்கு தகுதியாகுதல் போன்ற அடிப்படைத் தன்மைகளாகும். இறை தன்மையிலும், அதை அடிப்படையாக வைத்து வருகின்ற தனித் தன்மைகளிலும், அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்தி அவன் ஏகத்துவத்தை நம்பிக்கை கொள்ள, தவ்ஹீதை அறிவது கட்டாயமாகிறது.
ஏகத்துவத்தின் அடிப்படை:

அல்லாஹ்வின் தனித்தன்மையின் அஸ்திவாரம் செயல்பாட்டை கொடுக்கின்ற அத்துணை சக்திகளும், அல்லாஹ்விற்கு மட்டுமே சொந்தமாக்குதலாகும். அதில் எள்ளளவும், அணுவளவோ அதைவிட குறைவாகவோ, எந்தப் படைப்பினங்களுக்கும் சொந்தமாக்காமல் இருப்பதாகும். அல்லாஹ்வே தன் ஏகத்துவத்தைப் பற்றி நமக்கு இக்லாஸ் எனும் சிறு அத்தியாயத்தில் தெளிவுபடுத்துகிறான்.
நபியே! எடுத்துச் சொல்லுங்கள் 'அல்லாஹ் ஏகன்' என்று. –அல் இக்லாஸ் வசனம்1.
இந்த அஹது என்ற ஏகனின் விளக்கத்தை அடுத்த வசனமாகிய 'அல்லாஹ் தேவையற்றவன்' என்பது தெளிவுபடுத்துகிறது. இந்த இரு வசனங்களுமே தவ்ஹீதின் அடிப்படையாகத் திகழ்கிறது.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த வசனத்திற்கு விளக்கவுரை தருகின்ற போது தனித்தன்மை பெற்று எந்த விஷயத்திலும் யாரிடமும், தேவையாகாமலும், அனைத்து வஸ்துக்களும் எல்லா நிலையிலும் அவன் பக்கமே தேவையாகுதலுமாகும் ஸமதின் சுருக்கமான விளக்கம். தஃப்ஸீர் அபுஸ்ஸுஊத் சொல்கிறது: 'தான் தேவையற்றவனாக எல்லா நிலையிலும் இருப்பதே மற்றவைகள் அவனிடம் தேவையாகிறது என்பதை உணர்த்துகிறது.'
திருக்குர்ஆன் விரிவுரையாளரான இமாம் ராஸீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்: பொதுவாக 'தவ்ஹீத்' என்றால் உலகைப் படைத்து காத்து நிர்வாகம் செய்பவன் ஒருவன்தான் என்று விளங்குவதும், அடியானுக்கு எந்த செயலிலும் சுயசக்தி கொண்டு செயல்பட முடியாது என்று நம்புவதும் ஆகும். ஏகன் என்பதற்கு 'பொதுப் பொருள்' கொடுத்தால் ஒவ்வொரு மனிதனும் படைப்பாலும், குணநலன்களாலும், கைரேகைகளாலும் தனித்தவனாகத் திகழ்கிறான். ஒருவனுக்கு துல்லியமான இணை மற்றொருவனில் பார்க்க முடியாது என்பதை உலகமும், மார்க்கமும், தெளிவுபடுத்துகிறது. எனவே அல்லாஹ் ஏகன் என்றால் தேவையற்றவன், அனைத்தும் அவன் பக்கமே தேவையாகின்றன என்பது தெளிவாகிறது.
அல்லாஹ் பார்ப்பவன், கேட்பவன், சக்தியுள்ளவன் என்று நாம் விளங்கியதைப் போன்று மனிதனும் பார்ப்பவன், கேட்;பவன், சக்தியுள்ளவன் என்று தெளிவாக விளங்குகிறோம். ஆனால் அல்லாஹ் உறுப்புகளின் தேவையோ, சக்தியை கொடுப்பவனின் தேவையோ, மற்றவைகளின் தேவையோ அன்றி செயல்படுபவன். மனிதனோ, சக்தியைக் கொடுக்கும் அல்லாஹ்வின் பக்கம் பல வழிமுறைகளில் தேவையாகி செயல்படுகிறான்.
மனிதனுக்கும், விலங்குகளுக்கும் மற்ற படைப்புகளுக்கும் சக்தி இல்லையா? என்றால் அல்லாஹ் கொடுத்த அல்லாஹ்விடம் தேவையாகிற சக்தி இருக்கிறது. அல்லாஹ்வின் சக்தியோ, யாராலும் கொடுக்காத, கொடுக்க முடியாத சுய சக்தியாகும். இவ்வாறு வித்தியாசங்களை விளங்க முற்பட்டால் தவ்ஹீதும் தெளிவாகும். முரண்பாடுகளும் உருவாகாது. மாற்றுக் கருத்துக்கள், முரண்பாட்டினை உருவாக்கி அடிப்படையையே தகர்த்து விடுகிறது. தவ்ஹீதை உறுதிபடுத்த அதனுடைய எதிர்பதமாகிய 'ஷிர்க்'கை அறிவதும் அவசியமாகிறது.
'ஷிர்க்;' என்றால் தவ்ஹீதின் நேர் எதிர் கருத்தாகும். இறைத் தன்மையிலும் அதன் தனித்தன்மைகளிலும், அல்லாஹ்விற்கு இணையானவன் இருக்கிறான் என நம்பிக்கை கொள்வதாகும்.
தனித்தன்மையில் வணக்கத்திற்கு தகுதியானவனாக இருத்தலும், கட்டுப்படும். எனவே வணக்கத்தின் விளக்கத்தையும், தெளிவாக அறிகிறபோது தான் தவ்ஹீதின் பரிபூரண பொருள் விளங்கும்.
பரிபூரண கண்ணியத்துடன் செயல்களை கொண்டு வருவதைப் பற்றிய வாசகத்திற்கே வணக்கம் எனப்படும்.
பரிபூரண கண்ணியம் என்பது பணிவின் உச்சகட்ட நிலையின் மிக உயர்வான நிலையில்தான் வெளிப்படும். இந்த அடிப்படையில் அல்லாஹ் ஏவியவைகளை எடுப்பதும், தடுத்தவைகளை தவிர்ந்துக் கொள்வதும் வணக்கம் என்ற பொருள் கொடுத்தாலும் இவைகள் பணிவின் மிக உச்சநிலையில் வெளிப்பட்டால் மட்டுமே வணக்கங்களாகும்.
உபகாரம், அதிகாரம், இவைகளின் அடிப்படையில் தான் கண்ணியத்தின் தரம் மதிக்கப்படுகிறது. பரிபூரண அதிகாரமும், உயர்ந்த உபகாரமும் கொண்டவனுக்கே பரிபூரண கண்ணியமும் பணிவும் கிடைக்கிறது.
முஸ்லிம்களின் நம்பிக்கையில் அல்லாஹ்வே மிக உயர்ந்த அதிகாரத்திற்கும், உபகாரத்திற்கும் சொந்தக்காரன். எனவே அவனுக்கு கொடுக்கும் பணிவை, கண்ணியத்தை மற்ற யாருக்கும் முஸ்லிம்கள் கொடுக்கவே மாட்டார்கள். அல்லாஹ்விற்கே வணக்கம் என்பதை சொந்தமாக்குவார்கள்.
இப்பொருளில் அல்லாஹ்விற்கு கொடுக்கும் மிக உயர்ந்த பணிவுடனும் கண்ணியத்துடனும் யாருக்கு கட்டுப்பட்டாலும் அது வணக்கமாகவே மாறும். எல்லா பணிவுகளையும், மரியாதை செய்தல்களையும், கண்ணியப்படுத்துதலையும் வணக்கம் என்று சொல்லவோ, ஷிர்க் என்று கூறவோ அனுமதியில்லைஎன்பதை மனதில் நிறுத்த வேண்டும்.
இது போன்ற அல்லாஹ்வின் தனித்தன்மைகளின் பெயர்கள் நபிமார்களுக்;கும், மற்ற படைப்பினங்களுக்கும் புழங்கப்படுகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கருணையாளர், கிருபையாளர் என்று அல்லாஹ் புகழ்கிறான். இங்கு நாம் அல்லாஹ்வின் அன்பும், கருணையும் யாரிடமிருந்தும் பெற்றதாக இருக்காது என்றும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்பும் , கருணையும் அல்லாஹ்வால் கொடுக்கப்பட்டுள்ளது எனவும் விளங்குகிறோம். இதுபோன்றே அல்லாஹ்விடம் உதவி தேடும்போது அல்லாஹ்வின் உதவி புரியும் ஆற்றல் பிறரால் கொடுக்கப்பட்டது என்ற எண்ணத்துடனோ, குறைவை ஏற்றுக் கொள்வது என்ற அடிப்படையில் உதவி தேடினால் அல்லாஹ்வை விளங்காத நிலையில் அவனை படைப்புகளுடன் ஒப்பிடும் நிலை ஏற்படுகிறது.
அதே போன்று அவனது படைப்புகளிடம் உதவி தேடும் போது படைப்புகளின் உதவி புரியும் சக்தி அல்லாஹ்வால் கொடுக்கப்படாத 'சுய சக்தி' என்ற எண்ணத்துடன் உதவி தேடினால் அது அல்லாஹ்வின் தனித்தன்மையை படைப்புகளுக்கு கொடுத்து 'இணைவைத்தல்' உருவாகிவிடும். 'ஷிர்க்' உருவாவதற்கு எண்ணமே அடிப்படை. உதவி தேடப்படுபவை உயிருள்ளவையா, உயிரற்றவையா, மனிதனா, மற்ற படைப்புகளா என்பதல்ல.
படைப்புகளுக்கு சுய ஆற்றல் இல்லை என்ற நம்பிக்கையில் இறந்தவர்களிடமோ , உயிருள்ளவர்களிடமோ உதவி தேடுவதில் மார்க்கத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. மரணம் என்பது இறையச்சம் நிறைந்த மக்களுக்கு இல்லாமை, முற்றிலும் அழிந்து போகுதல் என்பது இல்லை. அல்லாஹ் குர்ஆனில் 'ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ் கோபம் கொண்ட கூட்டத்தினரை நண்பர்களாக ஆக்காதீர்கள். மண்ணறை வாசிகளிலிருந்து நிராகரிப்போர், நிராசையானதைப் போன்று மறுமையிலிருந்து இவர்கள் நிராசையாகி விட்டார்கள்.'
இதில் மண்ணறை வாசிகளில் நிராசை என்பது என்ன? என்ற விளக்கத்தில் திருக்குர்ஆன் விரிவுரையாளரான பைளாவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: அவர்கள் எழுப்பப்படுவதிலும், கூலிக் கொடுக்கப்படுவதிலும், மண்ணறை வாசிகளிலிருந்து நலவை அடைவதிலும் நிராசையாவார்கள் என்ற விளக்கத்தின்படி மரணித்தவர்களிடமிருந்து உதவி கிடைப்பதை மறுப்பது 'காபிர்கள்'; என்ற இறை மறுப்பாளர்களின் பண்பு என்பது விளங்குகிறது. அல்லாஹ் மரணித்த பின்னும் உதவி செய்யும் ஆற்றல் கொடுத்தால் அதை மறுப்பவர் யார்? என்பதை சிந்திப்போம்.
தௌஹீதிற்கு பங்குகளா?

தௌஹீதை நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, ஸஹாபாக்களோ, தாபிஈன்களோ, 'ரூபூபிய்யத் உலூஹிய்யத்'-'அஸ்மா வஸ்ஸிபாத்' எ ன பங்கு போடவில்லை. காரணம் இறைத் தன்மை என்று சொல்லுகிறபோது உலூஹிய்யத்தும் தனித்தன்மை என் வார்த்தையில் படைத்தல், காத்தல், மற்றும் அல்லாஹ்வின் திருநாம செயல்களும் கட்டுப்படும். ஏதாவது ஒன்றை இழந்தாலும் முழு தவ்ஹீதே பறிபோய் விடுகிறபோது பங்கு போடுவதில் பயன் இல்லை என்பது தெளிவாகிறது. இப்படி பங்கு போடுவது முஸ்லிம்களை இணை வைத்தவர்களாக மாற்றிக் காட்டுவதற்கான குதர்க்க முயற்சியாகும்.
மக்கா முஷ்ரிக்குகளின் நம்பிக்கை:
மக்கா முஷ்ரிக்குகள் பல தெய்வங்களை வணங்கினாலும், அல்லாஹ்வையும், ஏற்றுக் கொண்டார்கள் என்று கூறி முஸ்லிம்களின் நம்பிக்கையை முஷ்ரிக்குகளின் நம்பிக்கையோடு இணைத்து முஸ்லிம்களை முஷ்ரிக்குகளாக்கும் பெரும் முயற்சி நடப்பதால் மக்கா இணைவைப்பாளர்களின் நம்பிக்கையைப் பற்றி சுருக்கமாக விளங்க வேண்டியுள்ளது.
மக்கா முஷ்ரிக்குகள் அல்லாஹ்வையும், இறைவனாக நம்பி, மற்ற சிலைகளையும் இறைவனாக, இறைத்தன்மை பெற்றவர்களாக வேத நம்பிக்கை கொள்கிறார்கள். சிலைகளின் சக்திகளை அல்லாஹ் கொடுக்காத சுயசக்திகளாகவே நம்பிக்கை வைத்தார்கள் என்பதை பிரபல திருக்குர்ஆன் விரிவுரையாளர் ராஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மக்கா இணைவைப்பாளர்கள் தங்கள் சிலைகளுக்கு சொந்தமாக இடைஞ்சல் செய்யவும், உபகாரம்  செய்யவும், சிபாரிசு செய்யவும் சக்தி உண்டு என நம்பியிருந்தார்கள். இப்படி எந்த முஸ்லிமும் நம்பிக்கை வைப்பதில்லை. இந்த நம்பிக்கையே இணைவைத்தலாகும்.
மக்கா முஷ்ரிக்குகள் சிலைகளை இறைவனாகவே நம்பியிருந்தார்கள் என்பதை 'அல்லாஹ்வுடன் வேறு இறைவன் இருந்தால் அர்ஷின் அதிபதியாகிய அல்லாஹ்விடத்தில் அவர்கள் வழி தேடியிருப்பார்கள்' என்ற வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.
முஸ்லிம்கள் 'நபி', 'வலி' எல்லோரும் அல்லாஹ்வின் அடிமைகள். அல்லாஹ்வின் நேசர்கள், அல்லாஹ்வின் எந்த சக்தியும் அவர்களுக்கு இல்லை என்ற நம்பிக்கையில் வாழ்கிறார்கள். அல்லாஹ்வின் எந்த தன்மைகளையும், யாருக்கும் கொடுக்க மாட்டார்கள். அல்லாஹ்வால் சிறப்பிக்கப்பட்டவர்களின் சிறப்பை மறுக்கவும் மாட்டார்கள் என்பதை விளங்குவோம்! சத்திய தவ்ஹீதை விளங்கி நிலைத்திருப்போம்.!!!
முற்றும்.
நன்றி: அல் மின்ஹாஜ் 05
அல் ஜாமிஉல் அன்வர் அரபிக் கல்லூரி,
                                 திருவிதாங்கோடு, குமரி மாவட்டம்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates