Elegant Rose - Diagonal Resize 2 அன்றாட மனித உரிமை: அதிகாரத்தின் சூதாட்டம் ~ TAMIL ISLAM

சனி, 5 மே, 2012

அன்றாட மனித உரிமை: அதிகாரத்தின் சூதாட்டம்

மனித உரிமை பற்றிய சொல்லாடல் பொதுவாக இனப்படுகொலை, போர்க்காலக் குற்றங்கள், போலீசாரின் அத்துமீறல்கள், அரசின் அதிகார துஷ்பிரயோகம் போன்றன சார்ந்து அதிகமும் நடைபெற்றுவருகிறது. இலங்கையில் தொடர்ந்து தமிழ் மக்களின் மனித உரிமை துச்சமாக மதிக்கப்பட்டு வருவதை நாம் கொந்தளிப்புடன் கவனித்து எதிர்வினையாற்றிவருகிறோம். அதிர்ஷ்டவசமாக நம்மில் பெரும்பான்மையோரை இதுவரை மேற்படி வன்முறைகள் நேரடியாகத் தீண்டுவதில்லை. அதிர்ஷ்டவசமாகத்தான். அதிகாரத்தின் சூதாட்டத்தில் நம்முடைய தலை எப்போதுமே சிக்காது என்பதற்கு உத்திரவாதம் எதுவுமில்லை.
என்னுடைய தலை அவ்வாறு சிக்கிய ஒரு அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வது நமது மனித உரிமை பேணப்படுவதில் அல்லது மீறப்படுவதில் சட்டத்தின் பங்களிப்பைவிட அதிர்ஷ்டத்தின் பங்களிப்பு துலக்கமாக இருப்பதை விளங்கிக்கொள்ள உதவும்.
1998ஆம் ஆண்டு நெல்லையில் மதுரை ரோட்டில் இருக்கும் ஒரு விடுதி அறையில் நான்கைந்து நண்பர்கள் கூடினோம். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத/பிரசுரம் பெறாத படைப்புகளின் தொகுப்புஅன்னை இட்ட தீஅப்போதுதான் வெளிவந்திருந்தது. எனவே ஒரு கொண்டாட்ட மனநிலை அறையில் இருந்தது. அறை எடுத்திருந்த நண்பர் ரூம் பாயை அழைத்து இரண்டு பாட்டில் பீர் வாங்கிவரப் பணித்தார்.
அறை கிண்டலும் சிரிப்புமாக அதிர்ந்துகொண்டிருந்தது. திடீரென்று முன் கதவைக் காண்டாமிருகக் கூட்டம் வந்து முட்டுவது போலச் சத்தம். அறை அமைதியானது. கதவு திறக்கப்பட்டது. வெளியே போலீசார் கூட்டம் நின்றிருந்தது. இன்ஸ்பெக்டர் எல்லோரையும் கைதுசெய்யப்போகிறோம் என்று அறிவித்தார். விடுதி அறையில் மது அருந்துவது சட்டப்படிக் குற்றம் என்பது அன்றுதான் எனக்குத் தெரிந்தது.
இங்குக் கவனத்திற்குரிய விஷயம் நம்முடைய காலனியாதிக்கச் சட்ட அமைப்பில் நாம் சாதாரணமாக அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்லும்போதுகூடக் குற்றம் இழைத்துக்கொண்டே இருக்கிறோம். நமது அரசு பெருந்தன்மையாக நம்மை விட்டுப்பிடித்துக்கொண்டிருக்கிறது. எப்போது பிடிப்பார்கள், எப்போது விடுவார்கள் என்ற பதற்றத்தைத் தக்கவைத்துக்கொள்வதில் தான் அதிகாரத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இன்னொரு உதாரணம், சில மாதங்களுக்கு முன்னர் எங்கள் வீட்டின் முன்பாதையை ஒரு புல்டோசர் எந்த முனறிவிப்பும் இன்றித் திடீரென்று வந்து பிறாண்டத் தொடங்கியது. நான் பதறிச்சென்று சம்பந்தப்பட்ட அரசு அதிகாரியைச் சந்தித்தபோதுதான் வீட்டிலிருந்து மழைநீர் ரோட்டில் ஒழுகுவது குற்றம் என்பதைக் கண்டுபிடித்தேன். இப்படி என்னவெல்லாம் குற்றங்களை இழைத்துக்கொண்டிருக்கிறோம் என்பது தெரியாமலேயே நாம் வாழவேண்டியிருக்கிறது.
ரோட்டை விரிவுபடுத்துதல் அல்லது ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் என்ற பெயரில் அரச ரௌடித்தனம் இங்கு அடிக்கடி நடைபெறுகிறது. எந்தவித முன்னறிவிப்போ எச்சரிக்கையோ இன்றி புல்டோசர்கள் நீங்கள் அறியாத ஆக்கிரமிப்பிற்காக உங்கள் வீட்டையோ கடையையோ அலுவலகத்தையோ இடிக்க முடியும். வசிப்பிடத்தை அழிப்பது போன்ற மிக மோசமான மனித உரிமை மீறலை இங்கு அரசாங்கமே முன்னின்று நடத்துகிறது.
அரசின் துறைகள் இதுவரை இயற்றியிருக்கும் சட்டங்களையும் ஆண்டுதோறும் உருவாக்கும் புதிய சட்டங்களையும் நம்மிடம் தெரிவிக்க வேண்டிய அவசியம் அவற்றுக்கு இல்லை. அவர்கள் அறிவிக்காமலேயே அதைத் தெரிந்துகொள்வது நம் கடமை. நீங்கள் அறியாத சட்டத்தை அறியாமல் மீறும்போதுசட்டம் தெரியாதுஎன நீதிமன்றத்தில் சொல்வது ஒரு நியாயமான பதிலாக ஏற்கப்படமாட்டாது.
அறையிலிருந்த எங்களைப் போலீசு வண்டியில் ஏற்றிக்கொண்டு ஸ்டேஷன் சென்றார்கள். அது ஒரு வெள்ளி இரவு. ஸ்டேஷனில் இன்னும் சுமார் 50 நபர்கள் இருந்தார்கள். குடும்பத்திலிருந்து பிரிந்து பஸ் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த சரிவரக் கண் தெரியாத சுமார் எழுபது வயதுக் கிழவரைப் பிடித்துவைத்திருந்தார்கள். மும்பைக்கு ரயில் பிடிக்க வந்திருந்த தொழிலாளர்கள், பஸ் நிலையம் அருகில் சிறுநீர் கழித்த குற்றத்தை இழைத்திருந்தார்கள். அவர்களும் பிடிபட்டிருந்தார்கள். இப்படிப் பற்பலகுற்றவாளிகளால் ஸ்டேஷன் நிறைந்திருந்தது. தேடிவந்த குடும்பங்கள் வெளியில் கதறிக்கொண்டிருந்தன. அன்றிரவை ஸ்டேஷனில் கழித்தோம். பல முயற்சிகளுக்குப் பிறகு மறுநாள் நண்பகலில் விடுதலை அடைந்தோம். எங்களைத் திங்கள்வரை ஸ்டேஷனிலேயே வைத்திருந்தாலும் யாரும் போலீசாரைக் கேள்வி கேட்டிருக்க முடியாது.
இக்கைதின் பின்னணி என்ன என்பதைப் பின்னர் விசாரித்தபோது கோவையில் குண்டு வைத்ததாகத் தேடப்பட்டுவந்த அல் உம்மா குற்றவாளி ஒருவர் நெல்லை வந்திருப்பதாக உளவுத் துறைத் தகவல் போலீசுக்கு வந்திருக்கிறது. எனவே சுமார் 4000 சந்தேகக் கைதுகள் நெல்லையில் அன்றிரவு நடைபெற்றுள்ளன. போலீசார் துரித நடவடிக்கை எடுத்ததாக மேலிடத்தில் காட்ட வேண்டிய புள்ளி விபரங்கள் இந்த 4000 நபர்களும். எத்தனை தொழிலாளர்கள் வண்டியைத் தவறவிட்டிருப்பார்களோ, எத்தனை குடும்பங்கள் இவர்களைத் தேடி தெருவில் அலைந்திருப்பார்களோ, எத்தனை திட்டங்கள் உருக்குலைந்திருக்குமோ? எத்தனை அவமானங்கள், இழிவுகள், இழப்புகள்! ‘சந்தேகக் கேஸ்போன்றவை வெறும் சட்டப்பிரிவுகள் மட்டுமல்ல. காலனியாதிக்கம் என்னும் வரலாற்றுக் காயம் பொருக்காடாமல் இன்றும் அழுகித் துர்நாற்றம் வீசிக்கொண்டிருப்பதன் அறிகுறிகள் இவை. நம்முடைய சட்ட அமைப்பு முழுமையாக ஜனநாயகப்படுத்தப்படாமல் அதிகார வர்க்கத்தின் கெடுபிடியில் இருக்கும் காலகட்டம்வரை இந்தத் துர்நாற்றம் வீசிக்கொண்டேயிருக்கும்.
o
நமது சமூகத்தின் குடிமக்கள் அனைவருக்கும் சில அடிப்படையான மனித உரிமைகள் இருக்கின்றன. இருப்பினும் நம்முடைய தினசரி வாழ்க்கையில் நமது மனித உரிமைகள் பல கட்டங்களில் புறக்கணிக்கப்படுவதாக, மீறப்படுவதாக எனக்குத் தோன்றுகிறது. சுவாசிப்பதற்குச் சுத்தமான காற்று நமது அடிப்படை மனித உரிமை. ஏனெனில் சுவாசம் என்பது உயிர்நாடி. அதைவிட முக்கியமானது வாழ்விற்கு வேறொன்றும் இல்லை. இன்று சுத்தமான காற்றுக்கான உரிமை நம்மில் யாருக்கும் இல்லை. பெருமளவிற்கு மாசுபட்ட நோய்களை உருவாக்கும் காற்றையே சுவாசித்து வாழ்கிறோம். இதேபோல நல்ல நீர், விஷ ரசாயனங்கள் கலக்காத உணவு ஆகியவற்றிற்கான நமது மனித உரிமை இன்று மதிக்கப்படுவதில்லை. தெருக்களில் பாதுகாப்பாக நடைபாதையில் நடக்கவும் சாலையைக் கடக்கவும் நமக்கு உரிமை உண்டு. ஆனால் இன்று அந்த உரிமை இந்தியாவின் எந்த நகரத்திலும் மதிக்கப்படுவதில்லை. வாகனங்கள் நம்மீது மோதிவிடுமோ என்ற பயத்துடன், ஒரு வேண்டப்படாத ஜந்துவைப்போல, போக்குவரத்தின் பாதையில் ஒரு இடையூறாக உணர்ந்தபடி, நாம் சாலையில் நடக்க வேண்டியிருப்பதன் அவமானத்தை நம்மில் பலரும் உணருவதில்லை.
நமது மனித உரிமை மீறப்படும் போது நீதிக்காக நாம் செல்ல வேண்டிய இடங்கள் காவல் நிலையமும் நீதிமன்றங்களும். ஆனால் சராசரி குடிமகனை நீதிமன்றம்போல அவமதிக்கும் நிறுவனங்கள் குறைவு. எனவேதான்கோர்ட் வாசலை மிதிக்காதேஎன்ற நவீனப் புதுமொழி மக்களிடையே நிலவுகிறது. நமது நீதிமன்றங்களில் நீதிக்காகப் பல நாட்கள் காத்துக்கிடக்க வேண்டும். ஊழல் மண்டிப்போன நிறுவனம் அது. அமர்வதற்கு இருக்கைகள் இருக்காது. குடிக்க நீர் இருக்காது. பயன்படுத்த நாகரிகமான கழிப்பறைகள் இருக்காது. நம்மை மனிதர்களைப் போல நடத்தும் பண்பு அங்கு யாரிடமும் இருக்காது. நம்முடைய காவல் நிலையங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. மனித உரிமை மீறலுக்காக உருவாக்கப்பட்டுள்ள கேந்திரங்கள் அவை. பெண் காவல் நிலையங்களிலும் ஆண் காவல் நிலையங்களிலும் பால் வேறுபாடு இன்றி எல்லாப் பாலினங்களின் மனித உரிமைகளும் மீறப்படுகின்றன.
நம்முடைய அரசு அலுவலகங்களில் நுழையும் ஒரு குடிமகன் அவமானத்தில் சுருங்கிப்போகாமல் வெளியேற முடியாது. மக்கள் வரிப் பணத்தில் மிக உயர்ந்த ஊதியம் வாங்கும் அரச அதிகாரிகள் குடி மக்களை மனித உரிமையோடு நடத்துவதில்லை. எல்லாக் குடிமக்களும் ஏதேனும் ஒரு கட்டத்தில் அரச அலுவலகங்களுக்கு அவசியம் செல்ல வேண்டியுள்ளது. சாதிச் சான்றிதழ் பெற, ரேஷன் கார்டு வாங்க, வருமானச் சான்றிதழ் பெற, பாஸ்போர்ட் வாங்க என. ஒவ்வொரு குடிமகனையும் இயன்றவரை சீரழித்து, ஊழலுக்குக் கட்டாயப்படுத்தி அனுப்பும் பொறுப்பு அரசு அதிகாரிகளிடம் உள்ளது. அரசு அலுவலகத்தில் எல்லாக் குடிமக்களும் தீண்டப்படாதவர்களாகவே நடத்தப்படுகின்றனர்.
மாணவர்களுக்கு ஊழலுக்கான பயிற்சியும் நிறுவனங்களின் தடித்தனத்தை எதிர்கொள்ளும் திறனும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் வழங்கப்படுகிறது. கல்வி உதவித் தொகைக்காக, மறுகூட்டல் விண்ணப்பம் பூர்த்திசெய்ய எனத் துவங்கிப் பட்டச் சான்றிதழ்வரை மாணவர்கள் படும் சீரழிவு பெரியதொரு மனித உரிமை மீறல்.
அரசியல்வாதிகளும் சினிமாப் பண்பாடும் மத நிறுவனங்களும் ஒலிப் பெருக்கிகள் வழியாக நம்மீது அளவு கடந்த ஓசைகளை அன்றாடம் திணிக்கின்றனர். நம்முடைய கேட்கும் சக்தியைப் பாதிக்கும் அளவில் இருக்கும் இந்த ஒலித் திணிப்பு நம்மீது தினசரி நடத்தப்படும் இன்னொரு மனித உரிமை மீறல்.
நமது அரசியல்வாதிகளின் வருகைகளும் உலாக்களும் சராசரி மனிதனை உதாசீனம் செய்பவை. தலைவர் வரும்போதே வண்டிகளின் ஹாரனை அலற அடித்தவாறு போக்குவரத்தை ஒதுக்கிப் பல டஜன் வாகனங்களில் அபாயகரமான வேகத்தில் செல்வது நவீன மரபு. அதிகாரத்தின் வருகைக்கு முன்னர் போலீசாருக்கு ஏற்படும் வேகமும் உடல்மொழியும் பேச்சுகளும் நம் ஊரின் தெருக்களில் நம்மை அவமதிக்கின்றன. பெரும் தலைவர்கள் வருகையால் பெருநகரங்கள் ஸ்தம்பித்து லட்சக்கணக்கான மக்களின் மருத்துவமனைக்குச் செல்லுதல் போன்ற அன்றாட உரிமைகளை நசுக்குகின்றது.
காசிப் பல்கலைக்கழகத்தின் திறப்பு விழாவில் 1916இல் காந்தி உரையாற்றினார். அப்பல்கலைக் கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு வைஸ்ராய் லார்ட் ஹெர்டிங்கும் வருகை தந்திருந்தார். வைஸ்ராயின் வருகையை அடுத்து காசி நகரம் பாதுகாப்பு ஏற்பாட்டில் ஸ்தம்பித்தது. வழி நெடுக எல்லா வீடுகளிலும் போலீசார். இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் காந்தியைக் கடுமையாகப் பாதித்தன.
வைஸ்ராய் பனாரசின் தெருக்களின் வழியே செல்லும்போது நமக்கெல்லாம் பெரும் பதற்றம் ஏற்பட்டது. உளவுத் துறையினர் எல்லாப் பக்கமும் நின்றிருந்தனர். ஏன் இந்த அவநம்பிக்கை? வாழும் பிணமாக வாழ்வதைவிட இறந்துவிடுவது லார்ட் ஹெர்டிங்கிற்கு மேலானது அல்லவா?” என்று விழா மேடையிலேயே கேள்வி எழுப்பினார் காந்தி. ஒரு தனிமனிதரின் பாதுகாப்பைவிட ஒரு நகர மக்களின் தினசரி மனித உரிமைகள் மதிக்கப்படுதலை அதிக முக்கியத்துவம் கொண்டதாக காந்தி உணர்ந்திருக்கிறார். இன்று இந்தப் பார்வை பயங்கரவாதமாகப் பார்க்கப்படும்.
நம்முடைய பத்திரிகைகள் காட்சி ஊடகங்களின் வழி நமது சமூக யதார்த்தங்களையும் உண்மைச் செய்திகளையும் அறிந்துகொள்ளும் உரிமை நமக்கு உண்டு. ஆனால் அந்த உரிமையை நம்முடைய ஊடகங்கள் மதிப்பதில்லை. அதிகார அமைப்புகளைக் கேள்விக்குட்படுத்தும் நிலையிலிருந்து விலகி ஊடகங்கள் இன்று அதிகாரத்தின் பகுதியாக மாறிவிட்டன. மக்கள் அறிய வேண்டிய பல செய்திகளை ஊடகங்கள் தணிக்கை செய்கின்றன. பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் அதி காரிகளுடன் ஊழல் கலாச்சாரத்தில் இணைந்துவிட்டனர். இதனால் சமூகச் சூழலையும் உண்மைச் செய்திகளையும் அறிந்துகொள்ளும் நமது உரிமை பறிக்கப்பட்டு ஊடகங்களின் சுவாரசியமான கட்டுக்கதைகளின் வாசகர்களாக நாம் மாற்றப்பட்டுள்ளோம்.
நமது நகரத்தின் உள்ளே இடம் விட்டு இடம் செல்லும்போதும் சரி, பயணங்களில் ஊர்விட்டு ஊர் செல்லும்போதும் சரி, நமக்கு எளிமையான சுத்தமான கழிப்பிடத்திற்கான உரிமை இன்று இல்லை. பஸ் நிலையங்களில் இருக்கும் கழிப்பிடங்களை நோய் உற்பத்திக்கூடங்கள் என்று அழைப்பது பொருந்தும்.
ரயில்களில் குறைந்த கட்டண வகுப்புகளின் சுகாதார நிலை மிக மோசமானது. ஓடும் ரயிலில் கழிப்பறையைப் பயன்படுத்துவது சர்க்கஸ் வித்தை கற்றிருந்தால் மட்டுமே சாத்தியம். நிற்கும் ரயிலில் கழிப்பறையைப் பயன்படுத்தாதே என்கிறது ரயில்வே. சுத்தப்படுத்திக்கொள்ள ஒரு பாத்திரம், கொஞ்சம் சோப்பு போன்றவற்றை ஆடம்பரங்களாகக் கருதும் நமது ரயில் சேவை அவற்றை உயர் வகுப்புகளுக்கு மட்டும் வழங்குகின்றன. Health faucet போன்ற ஒரு எளிய, நீரைப் பீச்சியடிக்கும் சாதனம் நமது ரயில் சேவையின் உயர் வகுப்புகளை வந்தடைவது இந்தியா ராக்கெட் விட்டு சாதனை படைத்து அரை நூற்றாண்டு கடந்த பிறகு. இவற்றையெல்லாம் பொது இடங்களில் விவாதிக்காமல் ஏற்படும் அவமானங்களைத் தின்றுகொண்டே வாழ்க்கையைச் சமாளிக்கப் பழக்கப்பட்டுவிட்டோம்.
இத்தகைய பழக்கங்களிலிருந்து விலகி அன்றாட வாழ்வில் மறுக்கப்படும் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டியது மிக அவசியம். தினசரி வாழ்வைச் சுய மரியாதையோடு வாழும் குடிமக்களிடம்தான் மனித உரிமையின் பரந்த கோட்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும்.
o
(01.10.2009 அன்று தெ.தி. இந்துக் கல்லூரியில்மனித உரிமைகள்குறித்து நடைபெற்ற மாநில அளவிலான கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரையின் விரிவுபடுத்தப்பட்ட வடிவம்.
                                                              கண்ணன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates