நான் படித்த விசையத்தை உங்களுடன் பகிர்கிறேன் .இந்த சேது கால்வை திட்டமும் ராமேஸ்வர தீவு மக்களும் என்ற புத்தகத்தில் ரெம்ப தெள்ள தெளிவாக இதை பற்றிய பதிவுகள் பதிய பட்டு உள்ளது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன் . இந்த பதிவை நீங்கள் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுகள் படித்து விட்டு உங்களுடைய கருத்துகளை நீங்கள் கம்மேன்ட்டில் பதியலாம்
இந்திய வரைபடத்தின் ஒரு மூலையில் சிறு புள்ளியாகத் தெரியும் ராமேஸ்வரம் தீவை செயற்கைக்கோள் வழியே இணையத்தில் உற்று நோக்க-அதன் பரப்பளவும், சூழ்ந்திருக்கும் கடலும் கண்களுக்குள் விரிகிறது. அது போலவே 92 பக்கங்களை உள்ளடக்கிய "சேதுக் கால்வாய் திட்ட மும் ராமேஸ்வரத் தீவு மக்களும்' நூலை வாசிக்க வாசிக்க-ராமேஸ்வரம் தீவின் மக்கள், அம்மக்களிடையே நிலவும் சாதி அடுக்குகள், சேது சமுத்திரத் திட்டம், மீனவர்கள், ஆதம் பாலம் எனப் பல்வேறு கோணங்களில் அத்தீவு நம் கண்முன் நிற்கிறது.
சேதுக் கால்வாய் திட்டத்தின் ஆதரவு இயக்கங்கள், தேர்தல் அறிக்கையில் மட்டுமே "சேதுக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றுவோம்' என சூளுரைப்பவையாக உள்ளன. அதிகபட்சம் துண்டறிக்கைகள் கொடுத்து பிரச்சாரப் பயணம் மேற்கொள்ளும் அளவிற்குதான் இத்திட்டத்திற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்து இத்திட்டத்தை எதிர்க்கும் இயக்கங்கள் பெரும்பாலும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களாகவே இருக்கின்றன. மீனவர்களின் நலன் சார்ந்து திட்டத்தை எதிர்க்கும் இயக்கங்கள் சொற்பமே! ஆனால் இல்லாத ராமன் பெயரைச் சொல்லி, இல்லாத பாலத்தைச் சொல்லி, அரசியலும் ஆன்மீகமும் நடத்தும் இந்து மதவாதிகள் இத்திட்டத்தை நிறுத்தி வைக்கும் அளவிற்கு செல்வாக்குப் பெற்றிருக்கின்றனர்.
சர்வ வல்லமை பொருந்திய மத்திய அரசையே நீதிமன்றத்தில் தலைகீழாகப் பேச வைத்தது பார்ப்பனியம். சமூகத்தின் கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையிலும் பார்ப்பன அதிகாரம் கோலோச்சுவதன் அடையாளமே இது. பாவலர் ஓம்முத்து மாரி கூறுவது போல, கண்ணுக்குத் தெரிந்த பாபர் மசூதியை இடித்த கும்பல், கண்ணுக்குத் தெரியாத பாலத்தை இடிக்கக்கூடாதென்கிறது! பார்ப்பனியம் வெல்லுமா, சேதுக் கால்வாய் திட்டம் வெல்லுமா என்ற கேள்வி ஒருபுறம், மீனவர் நலன் முக்கியமா, சேது திட்டம் முக்கியமா என்ற கேள்வி மறுபுறம். இவ்விரண்டையும் மிக நுணுக்கமாக அலசுகிறது "கருப்புப் பிரதிகள்' வெளியீடாக வந்துள்ள குமரன்தாசின் நூல்.
ராமேஸ்வரத் தீவு பார்ப்பனர்கள் கோயிலை மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பது; இடைநிலை சாதிகள் பார்ப்பனரை அண்டிப் பிழைப்பு நடத்துவது; தாழ்த்தப்பட்ட சாதிகளின் தொழில்கள் என எல்லாவற்றையும் விவரிக்கிறது இந்நூல். சாதியாய் பிரிந்து கிடக்கும் ராமேஸ்வர தீவை விழித்திரை முன் விரிய விடுகிறார் நூலாசிரியர். ஒவ்வொரு ஊருக்கும் இப்படி ஒரு நூல் வெளிவந்தால், பார்ப்பனியம் எப்படி நம் நாட்டின் அனைத்துப் பகுதிகளையும் அடிமைப்படுத்தி, கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது என்பது அம்பலமாகிப் போகும்.
சிறுவயது முதல் பார்க்க விரும்பிய ராமேஸ்வரம் தீவினையும், தனுஷ்கோடியையும் சுற்றுலா பயணியாக சென்று பார்த்த போது கண்முன் விரிந்த ராமேஸ்வரம் வேறு. அப்போது பார்த்த மக்கள் வேறு. குமரன் தாசுடன் பயணித்து அவர் அழைத்துச் சென்று காட்டும் போது விரியும் ராமேஸ்வரம் வேறு. ஓர் அழகிய தீவின் வரலாற்றையும் சமூக நிலையையும் எடுத்துரைக்கிறார் ஆசிரியர். அங்கேயே வாழ்ந்து வருபவர் என்பதால் சொந்த அனுபவங்களில் இருந்தும் அவ்வப் போது செய்திகளை விவரிக்க முடிகிறது.
"சேது பந்தன்' என்ற ராமன் பாலக் கதையை கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் கூறி பிழைப்பு நடத்தும் சிலரையும், அவர்கள் விடும் கதைக்கு துணை போகும் வணிகர்களையும் தோலுரிக்கிறது இந்நூல். இந்நூலில் உள்ள கட்டுரைகளுக்காக திரட்டப்பட்டுள்ள புள்ளி விவரங்களும், அவை ஆங்காங்கே கட்டுரைகளுக்கிடையே வாசகனை தொல்லை செய்யாமல், அயர்ச்சியுற விடாமல் தெளிக்கப்பட்டுள்ள விதமும்-வழக்கமாக கட்டம் கட்டி அட்டவணை போடும் புள்ளிவிவரங்களைப் பார்த்து சலித்த கண்களுக்கு வேறுபட்டு நிற்கின்றன.
ஒவ்வொரு ஊருக்கும் "தல வரலாறு' என்று ஒன்று இருக்கும். ராமேஸ்வரம் சென்று பார்த்தால் "ராமேஸ்வரத்தின் தல புராணம்' என்ற பெயரில் கதை விட்டிருப்பார்கள். ராமன் இங்கேதான் வந்தான், குளித்தான், சாப்பிட்டான், தூங்கினான், குறட்டை விட்டன்; அனுமன் இங்கேதான் "பைலட் ட்ரெயினிங்' எடுத்து பறக்க கற்றுக் கொண்டான் என்றெல்லாம் கதை கதையாக அளப்பார்கள். இந்த கட்டுக்கதைகளே இன்று உச்ச நீதிமன்றம் வரை எதிரொலித்து இருக்கின்றன என்றால், அவற்றுக்கு உள்ள ஆற்றல் எப்பேர்ப்பட்டது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். உண்மையில் ராமேஸ்வரத்தின் "தல வரலாறு' என்று இந்த நூலை இனிமேல் சொல்லலாம். அந்த அளவிற்கு ராமேஸ்வரம் குறித்த வரலாறு மற்றும் தகவல்கள் இந்நூலில் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையின் நிகழ்வுகள் இங்கேயும் எதிரொலிப்பது எப்போதும் நடப்பதுதான். ஈழத்தின் போரோடு ராமேஸ்வரம் மீனவர்களின் வாழ்வும் பின்னிப் பிணைந்திருக்கிறது. சிங்களப்படையினரால் அவர்களுடைய வாழ்வும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்
குமரன்தாசின் நூல் ராமேஸ்வரம் மீனவர்களின் கையறு நிலை குறித்தும், அவர்களின் வாழ்நிலை குறித்தும் விரிவாகப் பேசுகிறது. அவர்களுடைய துயரங்கள், சேது திட்டத்தின் விளைவுகள் என அனைத்தையும் விளக்குகிறது. உலக வரலாற்றில், மண்ணின் மைந்தர்கள் என்று கூறப்படும் பூர்வக்குடிகள், வந்தேறிகளால் அடக்குமுறைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டு, அவர்களுடைய வாழ்வாதாரங்கள் சிதைக்கப்பட்டு, சுரண்டப்பட்டு, தங்கள் மண்ணையும் வாழ்வையும் இழந்து நிற்பது என்பது, பல பகுதிகளிலும் பல்வேறு காலகட்டங்களிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ராமேஸ்வரம் தீவிலும் இதுவே நடந்திருக்கிறது. தீவின் பூர்வகுடிகளான பரதவர் என்ற மீனவ இனம், வந்தேறிய சாதிகளிடம் தங்களுடைய உரிமைகளை இழந்து நிற்கும் வரலாறை இந்நூல் பதிவு செய்கிறது.
குமரன்தாஸ் கூறுவது போல, ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் சேரியை வைத்திருப்பது போன்று ஒட்டுமொத்த தமிழகத்தின் சேரியாக மீனவ கிராமங்கள் உள்ளன. நாகரிக உலகின் நவீனங்களை உள்வாங்கிக் கொண்டாலும், இன்னும் பழங்குடிகளாகவே இருப்பவர்கள் மீனவர்கள். நாகப்பட்டினம் நம்பியார் நகர் மீனவர்கள் "வடக்கே போயிட்டு வந்தேன்' என்று சொன்னால், அவர்கள் அதிகம் கொள்வினை கொடுப்பினை வைத்துக் கொள்ளும் தரங்கம் பாடி, பூம்புகார், சந்திரப்பாடி அல்லது சாமந்தாங்குப்பத்தைக் குறிக்கும். "தெற்கே போயிட்டு வந்தேன்' என்றால் தென்திசையில் உள்ள அக்கரைப்பேட்டை, செருதூர் அல்லது விழுந்தமாவடியை குறிக்கும். இடம் பொருள் ஏவலுக்கேற்ப திசை சுட்டும் இடம் மாறும். ஆனால் இதை கேட்கும் நகர மனிதனுக்கு எந்த ஊரைப் பற்றி சொல்கிறார்கள் என்பது விளங்காது. "கிழக்கே' என்றால் "கடலுக்கு' என்று பொருள். "மேற்கே' என்றால் "நகருக்கு' என்று பொருள். இப்படி திசைகளை வைத்தே அவர்கள் இடங்களைக் குறிக்கிறார்கள். ஆனால் கடலோர நகர்ப்புறங்களில் மக்கள் திசைகளைக் குறிப்பதில்லை. இயற்கையோடு இயைந்து வாழும் தொல்குடியினராக மீனவர்கள் இருப்பதற்கான சான்று இது.
தமிழகத்தை சுனாமி எனப்படும் ஆழிப்பேரலை தாக்கியபோது, வீடிழந்து, உடைமை இழந்தவர்களில் பெரும்பாலானோர் மீனவர்கள். கடலில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்கு மீனவர்களின் குடியிருப்புகள் இருந்தால் ஆபத்து எனக் கூறி அவர்களை அப்புறப்படுத்த எத்தனித்தது அப்போதைய அ.தி.மு.க. அரசு. கடலும் கடல் சார்ந்த பகுதிகளும் ஆதியிலிருந்தே மீனவர்களின் சொத்தாக இருந்திருக்கின்றன. இந்த சொத்தை அவர்களிடமிருந்து அபகரிக்க முயன்ற அ.தி.மு.க. அரசு, அவ்விடங்களை "ரிசார்ட்டு' களாக மாற்றும் திட்டத்தை முன்வைத்தது. இதே அரசு 500 மீட்டர் தொலைவை காரணம் காட்டி, ராமேஸ்வரம் கோயில் மீது கை வைக்க முடி யுமா? அங்கிருக்கும் ஆதிக்க சாதியினர் விட்டு விடுவார்களா? கோயில் அவர்களுக்கு எந்தெந்த வழிகளில் அமுதசுரபியாய் இருக்கிறதென இந்நூல் மிகத் தெளிவாக விளக்குகிறது.
அழிந்துபோன தனுஷ்கோடிக்கு சென்றபோது அங்கேயே இருக்கும் மூதாட்டி, தனுஷ்கோடியை கடல் கொள்ளை கொண்ட நாளில், தான் உயிர் தப்பிய விதத்தை எங்களிடம் கூறியதைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனோம். தாங்கள் ஏர்வாடியில் இருந்து தனுஷ்கோடிக்கு பஞ்சம் பிழைக்க வந்ததாகக் கூறிய அந்தக் கிழவி, ஏர்வாடி தர்கா இருக்கும் திசையை நோக்கி, தான் தினமும் வழிபட்டு வருவதாகக் கூறினார். தனது மகன் மாரியம்மன் கோவில் பூசாரி என்கிறார். "தினமும் என் மருமகளும் மகனும் மாரியம்மனுக்கு விளக்கேத்துவாங்க' என்று கூறிய அந்தக் கிழவியின் மாசுமருவற்ற மனம், கேடுகெட்ட ராமனின் பெயரால் பிழைப்பு நடத்துபவர்களுக்கு இல்லாமல் போனதே என்கிற ஆதங்கம், இந்த நூலை வாசிக்க வாசிக்க எழுந்து கொண்டே இருப்பதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாகவும், பார்ப்பன அடக்குமுறைக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்கிறது, குமரன்தாசின் "சேதுக் கால்வாய் திட்டமும் ராமேஸ்வர தீவு மக்களும்” நூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக