Elegant Rose - Diagonal Resize 2 உமர் (ரலி)-ன் மரணமும்? படிப்பினையும் ~ TAMIL ISLAM

வியாழன், 31 மே, 2012

உமர் (ரலி)-ன் மரணமும்? படிப்பினையும்

உமர் (ரலி) அவர்களது வாழ்க்கை எந்தளவு இறையச்சம் மிகுந்ததாக இருந்தது என்பது பற்றி கீழ்க்கண்ட சம்பவம் நமக்கு மிகுந்த படிப்பினையாக உள்ளது. ஸூபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள், என்னுடைய சுற்றுப்புறங்களின் மீதும், அவற்றின் தாக்குதல்கள் என்னைப் பாதித்து விடாத அளவுக்கு, நான் மிகவும் கவனமுள்ளவனாக இருப்பேன், அப்படி இருக்கக் கூடிய நிலையில், உமர் (ரலி) அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் அளித்த துன்பத்தைப் போல வேறு எந்தத் துன்பமும் எங்களைப் பாதித்ததில்லை.

உமர் (ரலி) அவர்கள் லுஹர், அஸர், மக்ரிப், இஷh ஆகிய நேரத் தொழுகைகளை முன்னின்று நடத்தியது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியையும், மன அமைதியையும் அளித்துக் கொண்டிருந்த நிலையில், அன்று அதிகாலை பஜ்ர் நேரம், ஒரு மனிதர் வித்தியாசமான முறையில் அந்த பஜ்ர் நேரத் தொழுகைக்கான தக்பீர் கூறினார். (ஆனால் அவர் உமர் இல்லை என்பதை அவரது குரல் மூலமாக உணர்ந்து கொண்டோம்.). எங்களுக்குத் தொழுகை வைத்தவர் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் என்பதை அறிந்து கொண்டோம். பின் மக்கள் தொழுது முடித்ததும், மூஃமின்களின் தலைவர் உமர்(ரலி) அவர்கள் தாக்கப்பட்டு விட்டார்கள் என்ற செய்தி எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் தொழுகையை முடித்திருந்த நிலையில், உமர் (ரலி) அவர்கள் இன்னும் தொழுகையை நிறைவேற்றியிருக்காத நிலையில், இரத்தம் அவர்களது உடம்பிலிருந்து வழிந்து கொண்டிருந்தது. அந்த நிலையில், ஓ! மூமின்களின் தலைவர் அவர்களே! தொழுகை! தொழுகை! (நீங்கள் இன்னும் தொழவில்லையே!) என்று மக்கள் கூறவும், ஆம்! இறைவன் மீது சத்தியமாக! தொழுகையை மறந்தவனுக்கு இஸ்லாத்தில் எந்தவிதப் பங்கும் கிடையாது என்று கூறி விட்டு, தொழுகைக்காக எழுந்திருக்க முயற்சி செய்தார்கள், ஆனால் இரத்தம் அதிகமாக வழிந்து கொண்டிருந்தது.

அங்கு குழுமியிருந்த மக்களைப் பார்த்து, நீங்கள் அறிந்திருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ததா? என்று கேட்டார்கள். அலி பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள், நாங்கள் அறிந்திருந்தாத நிலையில் தான் நடந்தது, இறைவன் மீது சத்தியமாக! இறைவனுடைய படைப்பினங்களில் உங்களைத் தாக்கியவர் யார் எனபதை நாங்கள் அறிய மாட்டோம் என்று பதில் உரைத்தார்கள்.

உங்களுக்காக நாங்கள் எதையும் செய்யத் தாயாராக இருக்கின்றோம். உங்களது இரத்தம் எங்களது இரத்தமாகும். (அதாவது உங்களைத் தாக்கியவர், உங்களை மட்டும் தாக்கவில்லை எங்களையும் தாக்கியுள்ளார். உங்கள் உடம்பிலிருந்த வழிந்து கொண்டிருப்பது உங்களது இரத்தம் மட்டுமல்ல, எங்களது இரத்தமும் இணைந்தே வழிகின்றது என்ற பொருள்படி அலி (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்).

பின் உமர் (ரலி) அவர்கள் அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்களைப் பார்த்து, வெளியில் சென்று மக்களுக்கு (நடந்திருப்பவைகள் பற்றிய) உண்மையைச் சொல்லுங்கள் என்று கூறினார்கள். வெளியில் சென்று விட்டுத் திரும்பிய அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள்: அமீருல் முஃமினீன் அவர்களே! இந்த நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்! என்று கூறி, சொர்க்கத்திற்கான நன்மாராயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்ற நற்செய்தியை உமர் (ரலி) அவர்ளுக்கு அறிவித்தார்கள். இறைவன் மீது சத்தியமாக! ஆணோ அல்லது பெண்ணுக்குரியதேர்! அசைகின்ற ஒவ்வொரு கண்களும் உங்களுக்காக கண்ணீரைச் சொறிந்து அழுது கொண்டிருக்கின்றன. கண்ணீரைச் சிந்தாத, அழாத கண்களை என்னால் காண முடியவில்லை.

ஒவ்வொருவரும் உங்களுக்காக தங்களது தாய்மார்களையும், தந்தைமார்களையும் அர்ப்பணம் செய்வதற்குத் தயாராக இருக்கின்றார்கள். நெருப்பு வணங்கியான முகீரா பின் சுப்பாவினுடைய அடிமை தான் உங்களைத் தாக்கியது என்பதை அறிந்து கொண்டோம், அவனும் இன்னும் பன்னிரண்டு நபர்களும் இப்பொழுது இரத்தம் வழிந்து கொண்டிருக்கக் கூடிய நிலையில் இருக்கின்றார்கள், அவர்களது நிலை  எவ்வாறு இருக்கப் போகின்றது என்பதை இறைவன் திர்மானித்துக் கொள்வான் என்று அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் தெரிவித்து விட்டு, ஓ! அமீருல் முஃமினீன் அவர்களே! சொர்க்கம் உங்களுக்கு! என்று நாங்கள் வாழ்த்துகின்றோம் என்று கூறியவுடன், இத்தகைய வார்த்தைகள் மூலம் யார் உங்களை வழிகெடுத்தது ஓ! இப்னு அப்பாஸ்! அவர்களே! இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள், ஏன்? நான் அவ்வாறு கூறக் கூடாது, இறைவன் மீது சத்தியமாக! நீங்கள் இஸ்லாத்தைத் தழுவியது எங்களுக்கு பலத்தைத் தந்தது, உங்களது ஹிஜ்ரத் வெற்றியைத் தந்தது, உங்களது ஆட்சி நீதி வழுவாத ஆட்சியாக இருந்தது, ஆனால் நீங்கள் அநீதியான முறையில் தாக்கப்பட்டிருக்கின்றீர்கள்.

இப்னு அப்பாஸ் அவர்களே! சற்று முன் என்னிடம் கூறியவைகளை, நாளை மறுமை நாளில் இறைவன் முன்னிலையில் எனக்காக நீங்கள் சாட்சி சொல்வீர்களா?! அலி பின் அபூதாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள், நிச்சயமாக! ஆம்! அமீருல் முஃமினீன் அவர்களே! இந்த வார்த்தைகளை நாளை மறுமை நாளிலே இறைவன் முன்னிலையில் உங்களுக்காக நாங்கள் சாட்சி சொல்வோம் என்று கூறினார்கள். பின் உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய மகன் அப்துல்லாவைப் பார்த்து, என்னுடைய மகனே! என்னுடைய நெற்றியை இந்த நிலத்தில் வைப்பீராக! என்று கூறினார்கள்.

இந்த சம்பவம் நடந்து முடிந்து, பின்பு ஒரு நாள் அப்துல்லா பின் உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறினார்கள். என்னுடைய தந்தையார் தாக்கப்பட்டுக் கிடந்த அந்த வேளையில், முதலில் அவர்கள் அவர்களுடைய நெற்றியைத் தரையில் வைக்குமாறு என்னை நோக்கிக் கூறினார்கள். அந்த பரபரப்பான அந்த நிலமையில், என் தந்தையார் என்னை நோக்கிக் கூறியவற்றை நான் கவனிக்கவில்லை.

எனவே மீண்டும் அவர்கள் என்னை நோக்கி, அவர்களது நெற்றியைப் நிலத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார்கள். அப்பொழுதும் நான் அதைச் செய்யவில்லை. மீண்டும் மூன்றாம் முறையாக அவர்கள் என்னை நோக்கி, உன்னுடைய தாயார் உன்னை இழப்பாளாக! என்னுடைய நெற்றியை நிலத்தில் வை! என்று எனக்கு உத்தரவிடவும், சுயநினைவற்று நான் நின்றிருந்ததை விட்டும் உணர்வு பெற்றவனாக, என்னுடைய தந்தையின் நெற்றியை நிலத்தில் வைத்தேன். இறைவன் என்னை மன்னிக்கா விட்டால், உமருக்குக் கைசேதமே! உமருடைய தாயுக்கும் கைசேதமே! என்று கூறியவர்களாக, அவர்களது கண்களை மண் மறைக்கும் அளவுக்கு உமர் (ரலி) அழுதார்கள்.

அடுத்து அமீருல் முஃமினீன் என்று நம்மால் மிகவும் கண்ணியமாக அழைக்கப்படும் உமர் (ரலி) அவர்களது சம்பவம் அனைத்து மக்களுக்கும் நல்லதொரு படிப்பினையாகும். உமர் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டு மரணதருவாயில் இருந்து கொண்டிருக்கும் பொழுது, அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கச் செல்கின்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இருந்த நிலையைப் பார்த்த அப்துல்லா பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள், நம்பிக்கையாளர்களின் தலைவரே! யா அமீருல் முஃமின் அவர்களே!! நீங்கள் நன்மாராயத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்! மக்கள் நிராகரிப்பாளர்களாக இருந்த பொழுது நீங்கள் நாயகம் ரசூலே கரீம் முஹம்மது (ஸல்) அவர்களது திருக்கரங்களில் நம்பிக்கை தெரிவித்து இஸ்லாத்தில் நுழைந்தீர்கள், அந்த முஹம்மது (ஸல்) அவர்களை அந்த நிரகாரிப்பாளர்கள் தாக்கிய பொழுது, முஹம்மது (ஸல்) அவர்களுடன் தோளோடு தோள் நின்று போர் புரிந்தீர்கள், அந்த முஹம்மது (ஸல்) அவர்கள் தங்களுடன் நல்லமுறையில் இருந்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் தங்களது மரணத்தைச் சந்தித்துக் கொண்டார்கள், நீங்கள் கலீபாவாக நியமிக்கபட்ட பொழுது எந்த மனிதரும் உங்களுக்கெதிராக எழுந்ததில்லை.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த உமர் (ரலி) அவர்கள், நீங்கள் கூறியவற்றைத் திருப்பிக் கூறுங்கள் என்று கூறி விட்டு, உங்களை யார் இந்த தப்பெண்ணம் கொள்ளச் செய்தானோ அவனே வழிகேடன் என்று கூறி விட்டு, இந்த பூமி முழுவதும் தங்கமும் வெள்ளியும் எனக்குச் சொந்தமாக இருப்பின், வரவிருக்கின்ற வேதனைக்கெதிராக நான் அவற்றைக் கைமாறாகக் கொடுக்கத்து விடுவேன் என்று பதில் கூறினார்களாம்.

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates