இஸ்லாமுக்கு முந்திய அரேபிய நாகரீகங்கள்
உலகில்
எந்தவொரு மதமும் இராணுவ பலமின்றி பரவவில்லை. இஸ்லாமும் அதற்கு
விதிவிலக்கல்ல. இஸ்லாமியப் படையெடுப்புகள் பற்றிய சரித்திரக் குறிப்புகள்
எழுதி வைக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலும் அனைத்துப் போர்களிலும்
வெற்றிவாகை சூடிய இஸ்லாமியப் படையணியின் பக்கம் நின்றவர்களால்
எழுதப்பட்டுள்ளன. அவர்களை எதிர்த்து தோல்வியுற்ற கிறிஸ்தவ கிரேக்கர்களும் சில குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். அதே போல பெர்சியப் பேரரசின் இறுதிக் காலத்தைப் பாடும் செய்யுள்கள் சில காலத்தால் அழியாமல் நிலைத்து நின்றுள்ளன.
இவற்றைத் தவிர்ந்த பிற தரவுகளைக் காண்பதரிது. ஆகையினால் மத்திய கிழக்கில் இஸ்லாம் பரவுவதற்கு முன்பிருந்த நிலைமை குறித்து மட்டுப்படுத்தப் பட்ட தகவல்களே காணக் கிடைக்கின்றன.
மேற்கே ரோமப் பேரரசும், கிழக்கே பெர்சியப் பேரரசும்
மத்திய கிழக்கை பங்கு போட்டுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது.
அரேபியாவின் அரைவாசிப் பகுதி ரோமர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. ஈஸா
அலைஹிஸ்ஸலாம் அரேமிய மொழி பேசும் இனத்தை சேர்ந்தவர். அவர் பேசிய அரேமிய
மொழி, கிட்டத்தட்ட அரபு போன்றிருக்கும். (இப்போதும் அந்த மொழி வழக்கில்
உள்ளது.) அன்றிருந்த அரேபிய தீபகற்ப மக்கள் அனைவரும் ஒரே அரபு மொழி
பேசியிருக்க வாய்ப்பில்லை. ஒன்றுக்கொன்று தொடர்புள்ள மொழி(களைப்)
பேசியிருப்பார்கள். நமது காலத்தில் அவற்றை வட்டார மொழிகள் என
அழைக்கின்றனர்.
அரேபிய தேசிய இனம் என்ற அரசியல்
அறிவு தோன்றியிராத காலத்தில், இஸ்லாம் என்ற மதக் கலாச்சாரம் அவர்களை
ஒன்றினைத்தது. ரோமப் பேரரசின் மாகாணமாக கருதப்பட்ட அரேபியாவைச் சேர்ந்த
வீரர்கள், அரபு சாம்ராஜ்யம் ஒன்றை ஸ்தாபிப்பார்கள் என்று அன்று யாரும் கனவு
கண்டிருக்க மாட்டார்கள். அரபு பாலைவனத்தில் வாழ்ந்த, தமக்குள்ளே
ஒற்றுமையற்ற நாடோடிக் குழுக்கள், ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவமாக
மாறுவார்கள் என்று யாரும் கற்பனை செய்திருக்கவில்லை. அதனால் ரோமர்களும்
அவர்களை அடக்கி ஆள வேண்டுமென்று நினைக்கவில்லை.
இற்றைக்கு
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யேமன் நாட்டில் நாகரீகமடைந்த அரபு
ராஜ்ஜியம் இருந்தது. ரோமர்களின் காலத்திலேயே யேமன் நாகரீகம் அதன் அழிவில்
இருந்தது. பிற்காலத்தில் இஸ்லாம் பரவிய போது, பண்டைய அரபு நாகரீகம்
முழுமையாக மறைந்து விட்டிருந்தது. யேமன் நாகரீகம் பற்றி பைபிளில் கூட சில
குறிப்புகள் உள்ளன. அந்த நாட்டை சேர்ந்த இராணி ஷீபா, (ஆங்கிலத்தில் : Sheba, அரபியில்: Saba) இஸ்ரேலை ஆண்ட மன்னரை (சுலைமான் அலைஹிஸ்ஸலாம்) சந்திக்க வந்திருக்கிறாள். ஷீபா ராணி ஆப்பிரிக்க இனத்தவராக இருக்க வேண்டும். நவீன காலத்து நிறவாத கருத்துக்கு மாறாக, "ஷீபா உலகப் பேரழகி, புத்திக்கூர்மையுடைய பெண்." என்றெல்லாம் இறைவேதம் புகழ்கின்றது. அது மட்டுமல்ல, ஷீபாவின் வருகையின் போது கொண்டு வந்த பரிசுப் பொருட்களை வைத்து, அவளது ராஜ்ஜியத்தின் செல்வத்தை வியக்கின்றது.
ஆமாம், இன்று ஏழை நாடாக உள்ள யேமன், மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர் பணக்கார நாடாக இருந்தது. அன்று "ஹிம்யர்" (Himyar) என அழைக்கப்பட்ட நாட்டின் முக்கிய ஏற்றுமதி, சாம்பிராணித் துகள்கள். சாம்பிராணி, விஷேசமாக யேமன், ஓமான் போன்ற நாடுகளில் மட்டும் வளரும் மரங்களில் இருந்து கிடைக்கின்றது. அங்கிருந்து தான் உலகம் முழுவதும் ஏற்றுமதியாகிறது.
தினசரி ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள் சாம்பிராணி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு அரபி பாலைவனத்தை கடந்து செல்லும். ஆயிரக்கணக்கான மைல்களைக் கடந்து காஸா போன்ற துறைமுகங்களை அடையும். அங்கிருந்து கப்பல்கள் மூலம் ஐரோப்பாவிற்கு விநியோகிக்கப்படும். உலகம் முழுவதும் ஹிம்யர் சாம்பிராணிக்கு கிராக்கி இருந்தது. இன்றும் கூட கிரேக்க கிறிஸ்தவ தேவாலயங்களில் சாம்பிராணிப் புகை போட்டு தான் வழிபாடு நடக்கின்றது.
பிற்காலத்தில் கத்தோலிக்க திருச்சபை, அரேபியரின் வர்த்தக மேலாண்மையை உடைப்பதற்காக, மெழுகுதிரி பயன்படுத்த தொடங்கியது. இன்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பிரிக்க முடியாத அம்சமான மெழுகுதிரியின் பயன்பாட்டுக்கு காரணம் வெறும் வர்த்தகப் போட்டி தான்.
இன்று
எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால், சில வளைகுடா அரபு நாடுகள் பணக்கார
நாடுகளாகின. அதேபோல அன்றைய யேமன் (ஹிம்யர்) ஒரு பணக்கார நாடாக திகழ்ந்தது.
யேமன் அரசு, சாம்பிராணி ஏற்றுமதியால் கிடைத்த லாபத்தை அபிவிருத்திப்
பணிகளில் செலவிட்டது. யேமன் நாடு மலைகளையும், வளமான விவசாய நிலங்களையும்,
பருவகால மழை வீழ்ச்சியையும் கொண்டது.
அந் நாட்டு
பொறியியல் நிபுணர்கள், "மாரிப்" என்ற பெயரைக் கொண்ட ராட்சத அணைக்கட்டு
ஒன்றை நிர்மாணித்தார்கள். அணை கட்டி சேமித்த தண்ணீர், வயல்களுக்கு பாசனம்
செய்யப்பட்டது. மக்களுக்கான குடிநீர் தேவையையும் 'மாரிப்' அணை பூர்த்தி
செய்தது. கி.பி. ஆறாம் நூற்றாண்டில், அதாவது இஸ்லாம் தோன்றிய காலத்தில்,
'மாரிப்' அணை கைவிடப்பட்டது. அதனால் விவசாயமும் பாழானது. மக்கள் குடிபெயர
ஆரம்பித்து விட்டனர்.
தென் அரேபியாவில் (யேமன்) இருந்த
தொன்மையான நாகரீகம் தானாக மறைந்தது. ஆனால் சிரியாவில் இருந்த அரபு
நாகரீகம், அந்நிய சக்திகளால் வெற்றி கொள்ளப்பட்டது. கி.பி. 3 ஆம்
நூற்றாண்டில், செனோபியா என்ற அரசி தலைமையில் ஒரு அரபு ராஜ்ஜியம்
நிறுவப்பட்டது. அனேகமாக எழுதப்பட்ட அரபுக்களின் வரலாற்றில் முதலாவது
அரசாட்சி அதுவாகத் தானிருக்கும். சிரியாவில் உள்ள பால்மிரா (Palmyra என்ற சொல் அதிலிருந்து வந்தது) நகரை சுற்றி அமைந்திருந்தது. கேந்திர
முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்திருந்ததால், சர்வதேச வர்த்தகத்தின்
மையப்புள்ளியாக இருந்தது. பால்மிரா அரபு இராசதானி சிறிது காலமே நீடித்தது.
இறுதியில் ரோமப் பேரரசின் படைகளால் வெற்றி கொள்ளப்பட்டது.
இஸ்லாமிய-அரேபியப் படையெடுப்புகள் வரையில், அந்தப் பகுதியில் ரோமர்களின்
காவல் அரண் மட்டுமே இருந்தது. அந்தக் காவலரண் பாலைவனத்தில் இருந்த நாடோடி
அரேபியரைக் கண்காணித்துக் கொண்டிருந்தது.
இதற்கிடையே
ரோமப் பேரரசில் மாபெரும் மாற்றம் ஏற்பட்டது. அதிகார மையம் ரோமாபுரியில்
இருந்து கொன்ஸ்டான்டிநோபில் (இன்று இஸ்தான்புல்) நகருக்கு மாறியது.
கொன்ஸ்டான்டிநோபில் நகரில் வீற்றிருந்த சக்கரவர்த்தியும்,
மேட்டுக்குடியினரும் கிரேக்க மொழி பேசினார்கள். கிறிஸ்தவ மதத்தை
பின்பற்றினார்கள். அவர்களின் ஆட்சி எல்லைக்குள் அடங்கிய, மத்திய
கிழக்கிலும், வட ஆப்பிரிக்காவிலும் கிரேக்க மொழி உத்தியோகபூர்வ
மொழியாகியது. ஆயினும் அவர்கள் தம்மை ரோமர்கள் என்று அழைத்துக் கொண்டனர்.
மத்திய
கிழக்கின் நகரங்களில் கிரேக்கர்கள் மட்டுமல்ல, அரேபியர்களும் வாழ்ந்தனர்.
கல்வி கற்ற, அரச பதவிகளை வகித்த அரேபியர்கள் கிரேக்க மொழி பேசினார்கள்.
(எமது நாடுகளில் ஆங்கிலம் பேசும் நடுத்தர வர்க்கத்தினருடன் ஒப்பிடத்
தக்கது.) அன்று பாலஸ்தீனம், லெபனான், சிரியா, ஈராக்கின் ஒரு பகுதி
(கிரேக்க) ரோமப் பேரரசால் ஆளப்பட்டன. அந்தப் பகுதிகளில் வாழ்ந்த
பெரும்பான்மை மக்கள் அரபு இனத்தவர்கள். (அன்று பலர் தம்மை கிரேக்கர்களாக
இனங்காட்டிக் கொள்ள விரும்பினர்.)
இன்று சிரியா, லெபனான், ஜோர்டான், பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் வாழும் அரபு கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் ஒரு காலத்தில் காசானிய (Ghassanid) நாட்டுப்
பிரஜைகளாக இருந்தவர்கள். காசானிய அரச பரம்பரையும், பிரஜைகளும் யேமனில்
இருந்து வந்து குடியேறி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. காசானிய நாட்டை
ஆண்ட அரசர்களின் பெயர்கள் எல்லாம் அரபு மொழிப் பெயர்களாக உள்ளன. அரபியில்
"இன்னாரின் மகன்" எனக் குறிப்பிடும் "இபுன்" என்ற விகுதியைக்
கொண்டிருப்பதும் கவனத்திற்குரியது.
இருப்பினும்
காசானிய அரச பரம்பரையினர் தம்மை கிரேக்கர்களாக காட்டிக் கொண்டனர்.
கிரேக்கர்களுடனான திருமண பந்தம் அதற்கு காரணமாக இருக்கலாம். காசானிய
இராசதானி, ரோமப் பேரரசிற்கு கப்பம் கட்டும் சிற்றரசாக இருந்தது. அரேபியப்
பாலைவனத்தில் தொல்லை கொடுக்கும் நாடோடிக் கும்பலை அடக்குவதற்காக, ரோமர்கள்
கசானிய பொம்மை அரசை பயன்படுத்திக் கொண்டார்கள். சுருக்கமாக சொன்னால்,
அரபுக்களை அரபுக்களை கொண்டே அடக்கினார்கள்.
தெற்கு ஈராக்கில் "லக்மிடியா" (Lakhmid) என்ற
இன்னொரு அரபு சிற்றரசு இருந்தது. லக்மிடியர்களின் மூதாதையரும் யேமனில்
இருந்து குடிபெயர்ந்தவர்கள். லக்மிடிய பிரஜைகள் கிறிஸ்தவ சமயத்தை
சேர்ந்தவர்களாக இருந்தனர். அக்காலத்தில் இரு பெரும் உலக வல்லரசுகளாக இருந்த
பெர்சியப் பேரரசும், ரோமப் பேரரசும் லக்மிடிய நாட்டை யுத்த சூனியப்
பிரதேசமாக்கினார்கள். காசானிய
தேசமும் அது போன்றே இரு வல்லரசுகளுக்கு இடையிலான சூனியப் பிரதேசமாக
இருந்தது. லக்மிடிய அரசவம்சமும் அரபிப் பெயர்களைக் கொண்டிருந்தது. சமுதாயம் உங்களிடம் "ஹிரா" (Al Hira) வை
தலைநகராகக் கொண்ட லக்மிடிய தேசம் அரபி இலக்கியங்களை வளர்த்தது. அனேகமாக
அரபி மொழி எழுத்துகள், இலக்கணம் என்பன லக்மிடியர்களின் பெருமைக்குரிய
கண்டுபிடிப்புகள். பல அரபுப் புலவர்கள் லக்மிடிய அரசவைக்கு சென்று
இலக்கியம் படைத்தனர். லக்மிடிய தேசத்தின் வீழ்ச்சிக்கு அயலில் இருந்த
பெர்சிய பேரரசு முதல் காரணம். முஸ்லீம்களின் படையெடுப்புகளின் போது,
லக்மிடியா ஏற்கனவே பெர்சியாவின் மாகாணமாக இருந்தது.
அரேபிய
தீபகற்பத்தின் மேற்குப் பகுதியில், "நாகரிக உலகின்" தொடர்பால் நகரங்கள்
உருவாகின. குறிப்பாக சிரியாவுடன் (காசானிய நாடு) கொண்டிருந்த வர்த்தக
தொடர்பால், ஹிஜாஸ், யமானா, மெக்கா, மெதீனா போன்ற நகரங்கள் வளர்ச்சியடைந்தன.
அங்கிருந்த வணிகர்கள் கம்பளி, பதனிடப்பட்ட தோல் போன்ற பண்டங்களை
சிரியாவில் விற்று வருவார்கள். சிரியாவில் இருந்து ஒலிவ் எண்ணை, தானியம்,
வைன் போன்ற பண்டங்களை வாங்கி வந்து தமது நகரங்களில் விற்பார்கள்.
வெளிநாட்டு
வர்த்தகத்தால் வளர்ந்த நகர-தேசங்களில் மெக்கா பிரசித்தமானது. எப்போதோ
அங்கு விண்வெளியில் இருந்து விழுந்த வால்வெள்ளிப் பாறை ஒன்றுக்கு தெய்வீக
சக்தி இருப்பதாக மக்கள் நம்பினார்கள். அதை சுற்றி ஓர் ஆலயம் தோன்றியது.
பகைமை கொண்ட அரபு இனக்குழுக்கள் அங்கே வந்து சமாதானமாக உரையாடுவது, அந்த
ஆலயத்தின் சிறப்பம்சம். அரேபிய தீபகற்பத்தின் பல்வேறு பிரதேசங்களில்
இருந்தும் யாத்திரீகர்கள் மக்கா ஆலயத்தின் மகிமையை கேள்விப்பட்டு வரத்
தொடங்கினார்கள். பக்தர்கள் பெருகவே, ஆலயத்தின் அயலில் ஒரு வருடச் சந்தை
தோன்றியது. ஆன்மீகமும், வியாபாரமும் ஒன்றுடன் ஒன்று கை கோர்த்துக் கொண்டு
வளர்ந்தன.
மக்கா ஆலயத்தை பராமரிப்பதும், அதை
ஒட்டிய வணிக நடவடிக்கைகளும் "குறைஷி" என்ற அரபு இனக்குழுவின் பொறுப்பில்
இருந்தன. குறைஷி குலத்தை சேர்ந்த பலர் ஏற்கனவே சிரியாவுடனான வணிகத்
தொடர்புகளால் செல்வந்தர்களாக இருந்தனர். சிலருக்கு மெக்காவில்
மட்டுமல்லாது, சிரியாவிலும் சொந்தமாக வீடு, காணி, சொத்துக்கள் இருந்தன.
வடக்கே
சிரியாவுக்கும், தெற்கே யேமனுக்கும் இடையே மக்கா நகரம் அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. மக்காவின் பூகோள அமைவிடம், மெக்கா நகரவாசிகளான
குறைஷிகளின் ஆதிக்கம், அவர்களின் சிரியாவுடனான வர்த்தக தொடர்பு போன்ற
காரணிகள், இஸ்லாம் என்ற புதிய மதத்தின் வளர்ச்சிக்கு பெரும்
பங்காற்றியுள்ளன. இறைதூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 570 ம்
ஆண்டு, ஒரு செல்வந்த குறைஷி குடும்பத்தில் பிறந்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக