ஹிஜ்ரி 6-ஆம் ஆண்டு வாக்கில் அபூஸுஃப்யான் உட்பட பல குறைஷிகள் வியாபார நிமித்தமாக சிரியா நாட்டிற்கு சென்றிருந்தார்கள். அப்போது ஜெருசலம் அரண்மனைக்கு வந்திருந்த ரோமப் பேரரசர் கைஸர் என்ற ஹிர்கல், அந்த அரபு வியாபார கூட்டத்தை தன்னிடம் அழைத்துவரும்படி உத்திரவிட்டார்.
அங்கு மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரை நியமித்துக்கொண்டு, குறைஷிகளே உங்கள் பகுதியில் இறைத்தூதர் என்று சொல்லிக்கொள்ளும் அந்த மனிதரின் நெருங்கிய உறவினர் யாரேனும் உண்டா என்று கேட்கிறார். அதற்கு அபூஸுஃப்யான் நானே அவருக்கு நெருங்கிய உறவினர் என்கிறார். (அபூஸுஃப்யான் அவர்கள் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தையின் மகனாவார்). அபூஸுஃப்யான் அவர்களையும் அவருடன் வந்திருப்பவர்களையும் தனக்கு முன்னால் நிறுத்துமாறு கட்டளையிட்ட மன்னர், தனது மொழிப்பெயர்ப்பாளரை நோக்கி, "நான் அந்த மனிதரைப்பற்றி (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) இவரிடம் (அபூஸுஃப்யான்) கேட்பேன். இவர் என்னிடம் பொய்யாக ஏதேனும் சொன்னால் மற்றவர்கள் உண்மை கூறிடவேண்டும். இதை அவர்களிடம் சொல்" என்றார். நான் பொய்யான தகவல்களை கூறியதாக என் வியாபாரக் குழுவினர்கள் கூறிவிடுவார்களோ என்ற வெட்கம் மட்டும் அப்போது எனக்கு இல்லாதிருந்தால் இறைவன் மீது ஆணையாக! முஹம்மது நபியைப்பற்றி பொய்யான தகவல்களையே கூறியிருப்பேன்" என்று அபூஸுஃப்யான் கூறுகிறார். அதற்கு காரணம் அந்த காலக் கட்டத்தில் அபூஸுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அவரிடம் ஹிர்கல் மன்னர் கேட்ட கேள்விகளும் அபூஸுஃப்யான் அவர்களின் பதில்களும் புகாரி ஹதீஸ் தொகுப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மன்னரின் கேள்வி: உங்களில் அவர்களுடைய பாரம்பரியம் எத்தகையது?
அபூஸுஃப்யான் அவர்களின் பதில்: அவர் எங்களில் சிறந்த பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்.
கேள்வி: இவருக்கு முன்னால் உங்களில் யாரேனும் எப்போதாவது (நான் இறைத்தூதர் என்ற) இந்த வாதத்தை செய்ததுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: இவரைப்பின்பற்றி செல்பவர்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றவர்களாக இருக்கிறார்களா?, அல்லது சாமானியர்களாக இருக்கிறார்களா?
பதில்: சாமானியர்கள்தான் அவரை பின்பற்றிச் செல்கின்றார்கள்.
கேள்வி: அவரை பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா?, அல்லது குறைகின்றனரா?
பதில்: அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.
கேள்வி: அவர் காட்டுகின்ற மார்க்கத்தில் நுழைந்த பின்னர் அதன் மீது அதிருப்தி கொண்டு யாரேனும் அந்த மார்க்கத்திலிருந்து விலகியதுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: அவர் இப்போது வாதிக்கின்ற (நபித்துவ) வாதத்தை சொல்வதற்கு முன்பு அவர் பொய் சொல்வதாக எப்போதாவது அவரை சந்தேகித்ததுண்டா?
பதில்: இல்லை
கேள்வி: அவர் (எப்போதாவது) வாக்குறுதிக்கு மாற்றமாக நடந்திருக்கிறாரா?
பதில்: இதுவரை இல்லை. நாங்கள் இப்போது அவருடன் (ஹுதைபியா என்னும் இடத்தில்) ஒரு உடன்படிக்கை செய்துள்ளோம். அதில் அவர் எப்படி நடந்து கொள்ளப்போகிறார் என்பது எங்களுக்கு தெரியாது.
(இந்த பதிலைக் குறிப்பிடுகின்ற அபூஸுஃப்யான் அவர்கள் அப்போதைக்கு முஹம்மது நபி மீது குறை கற்பிக்க அந்த வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையையும் எனது பதிலில் நுழைக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்று கூறினார்).
கேள்வி: அவருடன் நீங்கள் போர் புரிந்திருக்கின்றீர்களா?
பதில்: ஆம்
கேள்வி: அவருடன் நீங்கள் புரிந்த போர்களின் முடிவுகள் எவ்வாறிருந்தன?
பதில்: எங்களுக்கும் அவருக்குமிடையே வெற்றி தோல்வி மாறி மாறி வந்திருக்கின்றன.
கேள்வி: அவர் உங்களுக்கு என்ன போதிக்கின்றார்?
பதில்: அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், அவனுக்கு எதனையும் இணையாக்காதீர்கள், உங்கள் முன்னோர்கள் கூறிவந்த தவறான கொள்கைகளை விட்டுவிடுங்கள் என்று போதிக்கிறார். தொழுகை, உண்மை பேசல், கற்பு நெறியுடன் வாழுதல், உறவினர்களுடன் ஒட்டி உறவாடி வாழுதல் போன்ற அறப்பண்புகளை எங்களுக்கு ஏவுகிறார்.
பதில்களை பெற்றுக்கொண்ட ஹிர்கல் மன்னர் பின்வருமாறு கூறினார்:
"நான் உம்மிடம் அவரைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு நீர் அளித்த பதில்களை கவனிக்கினற போது ஒரு உண்மை புரிகின்றது.
எந்த இறைத்தூதருமே இவரைப்போன்றே அவரவரின் சமூகத்திலுள்ள உயர்ந்த பாரம்பரியத்திலிருந்து தான் அனுப்பப்பட்டுள்ளனர்.
இவருக்கு முன்னர் (இவருடைய பாரம்பரியத்தில்) யாரேனும் இந்த வாதத்தை செய்திருந்தால் "முன்னர் செய்யப்பட்டு வந்த வாதத்தைப் பின்பற்றித்தான் இவரும் செய்கிறார்" என்று எண்ணியிருப்பேன்.
இவரது முன்னோர்களில் யாராவது மன்னராக இருந்திருந்தால் தமது முன்னோரின் மன்னராட்சியை இவர் அடைய விரும்புகின்றார் என்று எண்ணியிருப்பேன்.
இந்த (தூதுத்துவ) வாதத்தை இவர் செய்வதற்கு முன்பு பொய் சொல்லக்கூடியவர் என்று அவரை நீங்கள் சந்தேகித்ததும்கூட இல்லை என்கின்றபோது "மக்களிடம் பொய் சொல்லத் துணியாதவர் இறைவன் மீது பொய்யுரைக்க துணியமாட்டார் என்றே உறுதியாக நம்புகிறேன்.
ஆரம்பத்தில் சாமானியர்கள்தான் அவரை பின்பற்றுகின்றனர் என்பது முற்றிலும் உண்மையே. அப்படிப்பட்டவர்கள்தான் இறைத்தூதர்களை பின்பற்றுபவர்களாக இருந்துள்ளார்கள்.
அவரை பின்பற்றுபவர்கள் அதிகரித்துச்செல்ல காரணம் என்னவென்றால், இறைநம்பிக்கையைப் பொறுத்தவரை அது நிறைவுறும் வரை அப்படித்தான் வளர்ந்துக்கொண்டே இருக்கும்.
அவரது மார்க்கத்தில் நுழைந்த பின்னர் யாரும் அதிருப்தி கொண்டு அதிலிருந்து விலகவில்லை என்பதற்கு காரணம், விசுவாசத்தின் தெளிவு இதயங்களுக்குள் புகுந்து பதிந்து விடுகின்றது.
இறைத்தூதர்களில் யாரும் மோசடி செய்ய மாட்டார்கள் என்பதற்கேற்ப இவரும் அவ்வாறு திகழ்கிறார்.
எனவே நீர் அவரைப் பற்றி குறிப்பிட்ட புதில்கள் யாவும் உண்மையானால் (ஒரு காலத்தில்) எனது இரு பாதங்களுக்குக் கீழ் உள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார்.
அதே தொடரில் அபூ சுஃப்யானின் இந்த வாசக அமைப்பு இஸ்லாத்தின் பால் அவரின் உள்ளம் ஏற்கெனவே ஈர்க்கப்பட்டிருக்கிறது என்பதை எடுத்தியம்புகிறது
(நாங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டோம். அப்போது என்னுடன் வந்தவர்களிடம், ''ரோமர்களின் மன்னன் அவரைக் கண்டு அஞ்சும் அளவுக்கு முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) காரியம் இப்போது மோலோங்கி விட்டது'' என்று கூறினேன். (அப்போதிருந்தே) அவர்கள் தாம் வெற்றியடைவார்கள் என்ற நம்பிக்கையில் திளைத்தவனாகவே நான் இருந்து வந்தேன். முடிவில் அல்லாஹ் எனக்குள்ளேயும் இஸ்லாத்தை நுழைத்து விட்டான்.)
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) எவரையும் வாள்முனையில் இஸ்லாத்தை நோக்கி அழைத்தது இல்லை. இதற்கு விளக்கமாக பின்வரும் சம்பவத்தை கூறலாம்:நபியவர்கள் தங்களின் படையுடன் திரும்பிக்கொண்டிருக்கும் போது ஒரு மரத்தடியில் இளைப்பாரினர். அம்மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்த முஹம்மது நபியின் வாளை எடுத்துக்கொண்டு ஒருவர், முஹம்மதே (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), இப்பொழுது யார் என்னிடத்தில் இருந்து காப்பாற்றுவார் என்றார். அதற்கு (முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) "அல்லாஹ்தான்" (காப்பாற்றுவான்) என்று மிகுந்த நம்பிக்கையுடன் சொன்னார்கள். இவ்வார்த்தையின் அழுத்தத்தை கேட்டு எதிரியின் கையிலிருந்த வாள் நழுவியது. அதனை எடுத்துக்கொண்ட முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "இப்பொழுது யார் என்னிடமிருந்து காப்பாற்றுவார் என்றும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றார்". ஆனால் அவர் மறுக்கவே முஸ்லிம்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யக்கூடாது என்ற வாக்குறுதியை வாங்கிக்கொண்டு தண்டிக்காமல் பத்திரமாக அனுப்பிவிட்டார். ஒரு அரசரை கொலை செய்ய எத்தனித்தவனை பத்திரமாக அனுப்பிவைத்தவர்தான் முஹம்மது நபி.ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தவிர, இஸ்லாத்தை ஏற்காத ஒருவரை வாளினால் மிரட்டி கட்டாயப்படுத்தவில்லை.
காரணம் "இம் மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர் வழி தெளிவாக உள்ளது" என்பது திருக்குர்ஆனின் கட்டளை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக