Elegant Rose - Diagonal Resize 2 'அடித்தாலும் உதைத்தாலும் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்!'' ~ TAMIL ISLAM

திங்கள், 4 ஜூன், 2012

'அடித்தாலும் உதைத்தாலும் அதற்கெல்லாம் பயப்பட மாட்டேன்!''

'அவருடைய பெயரும் அப்துல்லாஹ்தான்! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு. ஆடுகளை மேய்ப்பது அவருடைய தொழில். இறைவனைப் பற்றியும் இறைத்தூதரைப் பற்றியும் தெரிந்து கொண்டவுடன் இஸ்லாமை ஏற்றுக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் இஸ்லாமை ஏற்றுக் கொள்வதும் முஸ்லிமாக வாழ்வதும் இலேசான செயல்களாக இருக்கவில்லை. அடி, உதை, சித்திரவதை என்றுக் எல்லாவகையான தொல்லைகளுக்கும் ஆளாக வேண்டியிருந்தது. அல்குர்ஆனை ஓதவும் முடியாது; யாரிடமும் சொல்லவும் முடியாது.

இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர யாரும் மக்கா நகர மக்களுக்கு முன்னால் தைரியமாக குர்ஆனை ஓத முடியாத நிலை!

ஒருநாள் ஸஹாபாக்கள் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.ஷஷகஅபத்துல்லாஹ்வில் நின்று கொண்டு குர்ஆனை ஓத யாரேனும் தயாரா? என்றார் ஒருவர்.

''நான் தயார்!'' என்று உடனே ஒருவர் கையைத் தூக்கினார்.

யாரென்று பார்த்தால் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு. ''நீங்கள் வேண்டாம் வேறு யாராவது முன்வரட்டும்!'' என்று தோழர்கள் மறுத்து விட்டார்கள். ''ஏன்? என்ன காரணம்?'' அப்துல்லாஹ் விடவில்லை.

''மக்களுக்கு முன்னால் நின்று குர்ஆனை ஓதினால் கண்டிப்பாக அவர்கள் அடிப்பார்கள். அப்போது அவர்களிடம் இருந்து காப்பாற்ற சொந்தக்காரர்கள் இருக்க வேண்டும். உங்களுக்கு அப்படிப்பட்ட சொந்தக்காரர்கள் யாரும் கிடையாது என்பதால் நீங்கள் வேண்டாம்!'' என்று காரணத்தைத் தோழர்கள் கூறினார்கள்.

ஆனாலும் தன்னுடைய முடிவை விட்டும் நகரவில்லை அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு. அடுத்தநாள் முற்பகலில் கஅபத்துல்லாஹ்வுக்கு சென்றார். மக்காவின் முக்கிய பெருந்தலைகள் குறைஷித் தலைவர் என்று எல்லோருமே அங்கு உட்கார்ந்து இருந்தார்கள்.

கஅபத்துல்லாஹ்வில் மகாமே இப்றாஹீம் என்ற ஒரு இடம் இருந்தது. இறைத்தூதர் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நின்று தொழுத இடம் அது! அங்கே போய் அப்துல்லாஹ் நின்றுகொண்டார். ''அர்ரஹ்மான்! அல்லமல் குர்ஆன்.ஃகலக்கல் இன்ஸான அல்லமஹுல் பயான்...'' என்று அத்தியாயம் அர்ரஹ்மானை ஓதத் தொடங்கினார். தீனிக்காக காத்திருந்த கழுதைப் புலிகளைப் போன்று அவர்மீது பாய்ந்தார்கள். காஃபிர்கள். அடி அடியென்று அவரை அடித்துத் துவைத்தார்கள்.

அவருடைய உடல் முழுக்க இரத்தக் களரியாக ஆகிப்போனது. மயக்கம் அடைந்து அவர் கீழே விழுந்துவிட்டார். ஸஹாபாக்கள் வந்து அவரைத் தூக்கிக் கொண்டு போனார்கள். ''வேண்டாம் வேண்டாம் என்று நாங்கள் எவ்வளவு தூரம் சொன்னோம். எங்கள் பேச்சைக் கேட்டீர்களா? இப்படி உடம்பு முழுக்க புண்ணாக்கிகொண்டு வந்து நிற்கிறீர்களே!'' என்று மிகவும் வருத்தப்பட்டார்கள்.

தைரியத்தையும் இறைநம்பிக்கை-ஈமானையும் எக்கச்சக்கமாய் மனதில் தேக்கி வைத்திருந்த அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்:

''இறைவனுடைய வார்த்தையைச் சொல்லும் விஷயத்தில் யாருக்கும் நான் பயப்பட மாட்டேன்; நீங்கள் சரி என்று சொன்னால் நாளைக்கும் நான் போய் இறைவனுடைய வேதத்தை ஓதிக்காட்ட தயாராக உள்ளேன். அவர்கள் என்னை அடித்தாலும் உதைத்தாலும் அதற்கு எல்லாம் பயப்பட மாட்டேன்!''

ஈமான் என்றால் இறைநம்பிக்கை என்றால் இப்படி இருக்க வேண்டும்!! அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைத்து, நற்செயல்களைச் செய்து, (மக்களுக்கு நடுவில் நின்று பகிரங்கமாக) அழைப்பவரின் சொல்லைவிட சிறந்ததாக யாருடைய சொல் இருக்கமுடியும்? (அல்குர்ஆன் 41:33)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates