Elegant Rose - Diagonal Resize 2 மாமனிதர் ~ TAMIL ISLAM

திங்கள், 4 ஜூன், 2012

மாமனிதர்


ஜாபிர் பின் அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்:
நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு போரிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம். எனது ஒட்டகம் சண்டித்தனம் செய்து (மற்றவர்களை விட) என்னைப் பின் தள்ளியது.

அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்து 'ஜாபிரா' என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். '(பின் தங்கி வருவதற்கு) என்ன காரணம்?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர்.
என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின் தள்ளி விட்டது. அதனால் பின் தங்கி விட்டேன் என்று நான் கூறினேன். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தம் ஒட்டகத்திலிருந்து) இறங்கினார்கள்.
தமது வளைந்த குச்சியால் என் ஒட்டகத்தைக் குத்தி விட்டு 'ஏறுவீராக' என்றனர். நான் ஏறிக் கொண்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட முந்தி விடாதவாறு அதை இழுத்துப் பிடிக்க ஆரம்பித்தேன்.
''மணமுடித்து விட்டீரா?'' என்று கேட்டனர். நான் 'ஆம்' என்றேன். 'கன்னியா? விதவையா?' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டனர். விதவையைத்தான் என்று நான் கூறினேன். 'கன்னியை மணந்திருக்கக் கூடாதா? நீர் அவளுடனும் அவள் உம்முடனும் இன்பமாக இருக்கலாமே' என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.
எனக்குச் (சிறிய வயதுடைய) சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரித்துத் தலைவாரி, நிர்வகிக்கும் ஒரு பெண்ணை மணக்க விரும்பினேன் எனக் கூறினேன். 'நீர் இப்போது ஊர் திரும்பப் போகிறீர்! ஊர் சென்றால் ஒரே இன்பம் தான்' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிவிட்டு, 'உமது ஒட்டகத்தை எனக்கு விற்கிறீரா?' என்று கேட்டார்கள். நான் சரி எனக் கூறியதும் என்னிடமிருந்து ஒரு ஊகியா (தங்க நாணயத்தில் சிறிதள)வுக்கு விலைக்கு வாங்கிக் கொண்டனர். பின்னர் எனக்கு முன் அவர்கள் சென்று விட்டனர்.
நான் காலை நேரத்தில் (மதீனாவை) அடைந்தேன். நாங்கள் பள்ளிக்கு வந்ததும் பள்ளியில் வாசலில் நின்று கொண்டிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இப்போது தான் வருகிறீரா' என்று கேட்டனர். ஆம் என்றேன். 'உமது ஒட்டகத்தை விட்டுவிட்டுப் பள்ளிக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதும் உள்ளே சென்று தொழுதேன். எனக்குறிய ஊகியாவை எடைபோட்டுத் தருமாறு பிலாலிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.
பிலால் (ரளியல்லாஹு அன்ஹு) எனக்கு எடை போட்டுத் தந்ததுடன் சற்று அதிகமாக தந்தார். நான் திரும்பிய போது 'ஜாபிரைக் கூப்பிடுங்கள்' என்றனர். அதற்குள் என் ஒட்டகத்தைத் திருப்பித் தரப் போகிறார்களோ! என்று நினைத்தேன். அவ்வாறு அவர்கள் திருப்பித் தந்தால் அதைவிட எனக்குப் பிடிக்காதது வேறெதுவும் இராது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உமது ஒட்டகத்தைப் பிடித்துக் கொள்வீராக! இதன் விலையும் உமக்குரியதே என்றார்கள்''. (நூல்: புஹாரி 2097, அத்தியாயம்: வியாபாரம், பாடம்: வாகனங்களை வாங்குதல்.)
விளக்கம்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா சென்று ஆட்சித் தலைவரான பின் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கின்றது. 'போரிலிருந்து திரும்பி வரும்போது' என்ற வாசகத்திலிருந்து இதை நாம் விளங்க முடியும்.
போர் செய்து விட்டு நபித்தோழர்கள் திரும்பி வரும்போது அனைவரையும் விடக் கடைசியாக ஜாபிர் (ரளியல்லாஹு அன்ஹு) வருகிறார். அவருக்கும் பின்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வருகின்றனர். அதனால் கடைசியாகப் பின் தங்கி வந்த ஜாபிரை அவர்களால் சந்திக்க முடிந்தது.
உலக வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் மன்னர்கள் - போரில் வெற்றி பெற்ற மன்னர்கள் - களத்திலிருந்து எப்படித் திரும்பினார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். யானை மேல் ஆரோகணித்து, படைவீரர்கள் பராக் கூற, வழியெங்கும் அட்டகாசங்கள் செய்து ஆணவத்துடனும் திமிருடனும் செருக்குடனும் திரும்பியதை அறிந்திருக்கிறோம்.
ஆட்சித்தலைவரான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - படை நடத்திச் சென்று வெற்றி வீரராகத் திரும்பிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் - அனைவரையும் அனுப்பி விட்டுத் தன்னந்தனியாக அனைவரையும் கண்காணித்துக் கொண்டு கடைசியாக வருகிறார்கள்.
ஆட்சித்தலைவர் என்ற மமதையில்லை! போரில் வென்று விட்டோம் என்ற செருக்கு இல்லை! மதத்தலைவர் என்ற ஆணவம் இல்லை! எதிரிகள் பின்தொடர்ந்து வந்து தாக்கி விடுவார்களோ என்ற அச்சம் இல்லை!
கருப்புப் பூனைகளின் பாதுகாப்புடன் - சிறுநீர் கழிக்கக்கூட பாதுகாவலர்கள் துணையுடன் - உலாவரும் வீரர்களையும் வீராங்கணைகளையும் பார்த்துப் பழகியவர்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்.
உலகவரலாற்றில் இப்படி ஒரே ஒரு தலைவர், இவர் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்று கூறத்தக்க அளவில் அந்த மாமனிதரின் அற்புத வாழ்க்கை அமைந்திருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனா வந்து ஆட்சிப் பொறுப்பேற்ற நேரத்தில் ஆயிரக்கணக்கான தோழர்களைப் பெற்றார்கள். உலகில் ஆயிரக்கணக்கான தொண்டர்களைப் பெற்றவர்கள் தமக்கு மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்திருப்பார்கள். சாதாரணமானவர்களை அறிந்திருக்க மாட்டார்கள். அறிந்திருந்தாலும் அதைக் காட்டி கொள்வது தம் கௌரவத்துக்கு இழுக்கு என்று நடந்து கொள்வார்கள்.
பல்லாயிரக்கணக்கான தோழர்களைப் பெற்றிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு சாதாரண நபித்தோழரைப் பெயர் கூறி அழைக்கும் அளவுக்கு அறிந்து வைத்திருந்ததால் - அவருடனும் நெருக்கமாகப் பழகியதால் ஜாபிரா? என்று கேட்கிறார்கள்.
இந்த ஜாபிர் (ரளியல்லாஹு அன்ஹு) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சமவயதினரோ, நீண்ட காலம் அவர்களுடன் பழகியவரோ அல்லர். உமக்குத் திருமணமாகி விட்டதா என்று அவரிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டதிலிருந்து திருமணம் செய்யக்கூடிய இளவயதுப் பருவத்தில் அவர் இருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஐம்பது வயதுக்கு மேல். ஐம்பது வயதைக் கடந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுமார் இருபது வயதுடையவரைப் பெயர் சொல்லி அழைத்தது மக்களுடன் அவர்கள் எந்த அளவுக்கு நெருக்கமாக இருந்தனர் என்பதற்குச் சான்று.
மந்திரிகள்கூட சந்திக்க முடியாத தலைவர்களைப் பார்த்துப் பழகிய மக்கள் இந்த அற்புத வரலாற்றை அறிந்து கொள்ளட்டும்!
பதவியும் அந்தஸ்தும் வந்த பின், நன்கு பழகியவர்களையே யாரெனக் கேட்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம். அவர்களைச் சந்திக்க நேர்ந்தால் கண்டும் காணாதது போல் நடக்கும் தலைவர்களைப் பார்த்திருக்கிறோம்.
தம்மைவிட வயதில் குறைந்த நெடுநாள் பழக்கமில்லாத ஒரு தொண்டரைக் கண்டு அக்கறையுடன் அவரை விசாரித்து, அவருக்காகத் தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி, சண்டித்தனம் செய்த அவரது ஒட்டகத்தை எழுப்பி, அவரை ஒட்டகத்தில் ஏற்றிவிட்டு .. இப்படி ஒரு தலைவரை உலகம் இன்றுவரை கண்டதில்லை, இனியும் காணப்போவதில்லை.
உமக்குத் திருமணம் ஆகிவிட்டதா? கன்னியை மணந்தீரா? விதவையையா? இளைஞரான நீர் கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே என்றெல்லாம் அக்கறையுடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விசாரித்ததையும் ஊர் சென்றால் ஜாலிதான் என்று அவர்கள் கூறியதையும் சிந்தித்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமக்கென எந்த ஒரு தனிப்பட்ட மதிப்பையும் விரும்பவில்லை, ஆட்சியாளர் என்ற முறையிலும் தனிமரியாதையைத் தேடவில்லை, மதத்தலைவர் என்ற முறையிலும் தனி மதிப்பை நாடவில்லை என்பதை ஐயமற அறிந்து கொள்ளலாம்.
சண்டித்தனம் செய்த ஒட்டகத்தை விலை பேசி வாங்கியதும் வாங்கிய பின் விற்றவரை அதில் ஏறிவர அனுமதித்ததும் முடிவில் அவரிடமே ஒட்டகத்தை இலவசமாக வழங்கியதும் அவர்களின் வள்ளல் தன்மைக்குச் சான்று.
இறைவனின் தூதராக மட்டுமே தம்மை அவர்கள் கருதியதால் - தாம் உட்பட அனைவரும் இறைவனின் அடிமைகள் தாம் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்கு இருந்ததால் - எந்த அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு அவர்கள் போதித்தார்களோ அந்த இறைவனை அதிகமதிகம் அஞ்சிய காரணத்தால் தான் அவர்களால் இப்படி நடந்து கொள்ள முடிந்தது.
நான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். கரைப்பகுதி கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள்.
அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார்.
இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள்.
அவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது.
பிறகு கிராமவாசி, 'முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக!' என்று கூறினார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.
பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள். (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி 6088, முஸ்லிம் 2296.)
விளக்கம்:
மதத் தலைவராகவும் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பணியாளரான அனஸ் எனும் சிறுவருடன் தனியாக வீதியில் நடந்து சென்றதாக இந்த வரலாற்றுக் குறிப்பு கூறுகின்றது.
சாதாரண மனிதர்கள் சர்வ சாதாரணமாக நடந்து செல்வதை நாம் பார்த்திருக்கிறோம். ஒரு மதத்தின் மாபெரும் தலைவராக இருப்பவர் முன்னறிவிப்பின்றி - பக்தகோடிகள் புடை சூழாமல் - பந்தாக்கள் செய்யாமல் - சர்வசாதாரணமாக நடந்து செல்வதை உலக வரலாற்றில் நீங்கள் கண்டதுண்டா? அவரையும் அவரது மார்க்கத்தையும் அழித்தொழிக்க எதிரிகள் சமயம் பார்த்துக் கொண்டிருந்த அச்சம் சூழ்ந்த நேரத்தில் இப்படி நடந்து செல்வதைக் கற்பனையாவது செய்ய முடியுமா?
சட்டமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சியின் பொறுப்பாளர்கள் நடத்தும் பந்தாக்களைப் பார்த்துவரும் மக்களே! நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு நடந்து சென்றபோது அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபர் என்பதைக் கவனத்தில் வையுங்கள்.
இப்படி இருவிதமான தலைமையையும் பெற்றிருந்த நேரத்தில் சிறுவயது பணியாளர் ஒருவரை மட்டும் அழைத்துக் கொண்டு மிகச் சாதாரணமாக நடந்து சென்ற வரலாற்றை அறியும் போது அந்த மாமனிதரின் அடக்கம் துணிச்சல் நம் கண்களைக் கலங்கச் செய்து விடுகின்றன.
இந்த மாமனிதர் அணிந்திருந்த ஆடை என்ன?
அரசுக் கருவூலத்தில் ஆபரணங்களும் ஆடைகளும் குவிந்து கிடக்கும் போது - மக்களெல்லாம் அவர்களிடம் வந்து அதைப் பெற்றுச் செல்லுமளவுக்கு அரசுக் கருவூலம் நிரம்பியிருந்த போது - ஒரு மேல் துண்டை மட்டுமே போர்த்திக் கொண்டு வீதியில் நடந்து செல்கிறார்கள்.
அலங்காரம் இல்லை!
உயர்ரக ஆடைகள் அணியவில்லை!
தைக்கப்பட்ட சட்டை போன்ற ஆடைகூட அணியவில்லை!
அணிந்திருந்த மேல் துண்டு கூட மேனியை உறுத்தாத வகையில் உயர்தரமாக, மென்மையாக இருந்ததா என்றால் அதுவுமில்லை!
முரட்டுத்துணியை - மேனியை உறுத்தக் கூடிய துணியைச் சுற்றிக் கொண்டு வாழ்ந்த அதிசய வாழ்க்கை அந்த மாமனிதருடையது.
நம்மைப் போல சாதாரணமானவர்கள் கூட அணிந்து வெளியே செல்ல வெட்கப்படும் ஆடையை அணிந்து வெளியே செல்வதற்கு அசாத்தியமான மனவுறுதி வேண்டும்.
நேர்மையாக வாழ்வதில் எவரைப் பற்றியும் எதைப்பற்றியும் கவலைப்படாத - மற்றவர்களிடம் தமது இமேஜ் - மதிப்பு - பாதிக்குமே என்பதைப் பற்றிப் பொருட்படுத்தாமல் வாழ்ந்த அந்த மாமனிதரிடம் இந்த உலகம் படிக்க வேண்டிய பாடங்கள் ஏராளம் உள்ளன.
முன்பின் தெரியாதவர் - நாட்டுப்புறத்தைச் சார்ந்தவர் - ஆட்சித் தலைவரை நேரடியாக நெருங்க முடிகின்றது, சட்டையைப் பிடித்து, கீழே விழும் அளவுக்குப் படுவேகமாக இழுக்க முடிகின்றது. அந்த நிலையிலும் அவர்களால் சிரிக்க முடிகின்றது! என்னே அற்புத வாழ்க்கை!
எம்.ஜி.ஆர் அணிந்திருந்த தொப்பியைத் தவறுதலாகத் தட்டிவிட்ட தொண்டரை எம்.ஜி.ஆர் மக்கள் மத்தியில் அறைந்ததையும், அதற்காக போலீஸ் தொண்டரை சித்திரவதை செய்ததையும் இந்த இடத்தில் நினைத்துப் பாருங்கள். ஒரு மாநில முதல்வரின் நிலை இதுதான்.
மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தின் சட்டையைப் பிடித்து முன்பின் அறிமுகமில்லாதவர் இழுத்ததும் அந்த நேரத்தில் கடுகளவு அதிருப்தியைக்கூட வெளிப்படுத்தாமல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்ததும் அவர் மாமனிதர் என்பதற்கு மகத்தான சான்று.
அந்தக் கிராமவாசி, சட்டையைப் பிடித்து இழுத்து ஏதேனும் நியாயம் கேட்க வந்தாரா? நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த தவறைச் சுட்டிக்காட்டுவதற்காக இப்படி இழுத்தாரா? இல்லை. நபிகள் நாயகத்திடம் உதவி கேட்டுத்தான் இழுத்திருக்கிறார்.
உதவி கேட்டு வருபவரிடம் அடக்கம் இருக்க வேண்டும், பணிந்து, குழைந்து கோரிக்கையை முன் வைக்க வேண்டும். பொதுப்பணத்தைக் கேட்பதென்றாலும் கொடுப்பவரைப் புகழ்ந்து தள்ள வேண்டும், இல்லை என்றால் பெற முடியாது என்பது பொதுவான உலகியல் நடப்பு.
இந்தக் கிராமவாசியின் அணுகுமுறையைப் பாருங்கள்! நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடம் அவர் இப்படி நடந்து கொண்டால் கூட ஒங்கி அறைந்து விடுவோம்.
சட்டையைப் பிடித்துத் தோள்பட்டை கன்றிப் போகும் அளவுக்கு இழுத்ததும் முஹம்மதே! என்று பெயர் சொல்லி அழைத்ததும் அல்லாஹ் உம்மிடம் தந்தவற்றிலிருந்து எனக்குத் தருவீராக! என்று அதிகாரத் தோரணையில் கேட்டதும் அதன் பிறகும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிரித்தது மட்டுமின்றி அவருக்குக் கொடுத்து அனுப்பியதும்; உலக வரலாற்றில் வேறு எவரிடமும் காண முடியாத அற்புத நிகழ்ச்சியாகும்.
கிராமவாசியின் துணிச்சல் என்று இதைக் கருதக் கூடாது. இவரிடம் சகஜமாக நடந்து கொண்டாலும் நம் இயல்புக்கு ஏற்ப நடந்து கொண்டாலும் இந்த மாமனிதர் ஆத்திரப்பட மாட்டார் என்பது கிராமவாசிக்குத் தெரியும். மக்களுக்கே தெரியும் அளவுக்கு அவர்களின் எளிமை பிரசித்தமாக இருந்துள்ளது. இதன் காரணமாகவே அவரால் இப்படி நடந்து கொள்ள முடிந்திருக்கிறது.
இந்த மாமனிதரைத் தலைவராகக் கொண்ட சமுதாயம் தரங்கெட்ட அரசியல்வாதிகளைத் தலைவர்களாக ஏற்று அவர்களின் பின்னே சென்று கொண்டிருக்கும் அவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.
 அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு மதீனாவில் முஸ்லிம்களின் மிகப்பெரும் செல்வந்தராக இருந்தார். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாசலுக்கு எதிரில் இருந்த 'பீருஹா' எனும் தோட்டம் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது. அவரது சொத்துக்களில் அவருக்கு மிக விருப்பமானதாக அது இருந்தது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்தத் தோட்டத்திற்குச் சென்று அதிலுள்ள சுவையான தண்ணீரை அருந்தும் வழக்கமுடையவர்களாக இருந்தனர்.
''நீங்கள் விரும்பக்கூடியதை செலவிடாத வரை நீங்கள் நன்மையை அடைய முடியாது'' என்ற (3:92) திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டவுடன் அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றார். ''அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பக் கூடியதை செலவிடாத வரை நன்மையை அடைய முடியாது'' என்று அல்லாஹ் கூறுகிறான். என் சொத்துக்களில் எனக்கு மிகவும் விருப்பமானது பீருஹா எனும் இந்தத் தோட்டமாகும். இனிமேல் அது அல்லாஹ்வுக்காக அளித்தத் தர்மமாகும். இதன் நன்மையை அல்லாஹ்விடம் நான் எதிர்பார்க்கிறேன். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் விரும்பும் விதமாக இதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்! எனக் கூறினார்.
அவர்கள் ''நிறுத்து! அது இலாபம் தரும் செல்வமாயிற்றே! இலாபம் தரும் செல்வமாயிற்றே! நீ கூறியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அதை உனது நெருங்கிய உறவினர்களுக்கு நீ வழங்குவதையே நான் விரும்புகிறேன்'' எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவ்வாறே செய்கிறேன் என அவர் கூறி விட்டுத் தமது உறவினர்களுக்கும் தமது தந்தையின் உடன் பிறந்தார் மக்களுக்கும் பிரித்துக் கொடுத்தார் (அறிவிப்பாளர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 2318, அத்தியாயம்: வக்காலத்)
விளக்கம்:
மனிதனிடம் சொத்து சேர்க்கும் ஆசை எந்த அளவுக்கு உள்ளது என்பதை நாம் அறிவோம். மதிப்புமிக்க சொத்து - தான் குடியிருக்கும் வீட்டுக்கருகில் உள்ள சொத்து என்றால் எப்படியேனும் அதை அடைந்துவிட முயல்கிறான். ஆட்சியும் அதிகாரமும் ஒரு மனிதனிடம் குவிந்து விட்டால் நீதி நியாயங்களைப் பாராமல் ஊரையே வளைத்து உடமையாக்கிட முயல்கிறான். நகரத்தின் இதயம் போன்ற பகுதியில் யாருக்கேனும் மதிப்பு மிக்க சொத்து இருந்தால் அதை அடிமாட்டு விலைக்கு வாங்குவதற்காக ஆட்சியாளர்கள் செய்யும் அக்கிரமத்தையும் நாம் பார்த்து வருகிறோம். ஆட்சியாளர் மட்டுமின்றி ஆட்சியாளருக்கு உடன் பிறவா சகோதரிகள் யாரேனும் இருந்தால் அவர்கள் கூட அடித்து உதைத்து மிரட்டிப் பிறரது சொத்தை அபகரிக்க முயல்வதையும் உலகில் நாம் பார்த்து வருகிறோம்.
அரசுக்குச் சொந்தமான சொத்துக்களைக்கூட ஆட்சியாளர்கள் தமதாக்கிக் கொள்ளும் காலமிது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த வரலாற்றுக் குறிப்பில் ஆட்சியாளர்கள் படித்துக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்! ஏராளம்!
மதீனா நகரம் அன்றைய முஸலிம் உலகின் ஒரே தலைநகரம். அங்கிருந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளிவாசல்தான் தலைமைச் செயலகம். அந்தப் பள்ளி வாசலை ஒட்டிய பகுதியில் குடிசைகள் போட்டு அதில்தான் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குடும்பத்தினர் தங்கியிருந்தனர்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழும்போது நான் குறுக்கு வாட்டமாகப் படுத்திருப்பேன். அவர்கள் தொழுகையில் ஸஜ்தா (தலையைத் தரையில் வைத்து வணங்குதல்) செய்யும் போது என் கால்களை மடக்கிக் கொள்வேன் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வீடு எவ்வளவு குறுகியதாக இருந்தது என்பதற்கு இது சான்று.
அந்தக் குறுகிய வீட்டில் வசித்து வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விசாலமான வீடு தேவையாக இருந்தது. பள்ளிவாசலுக்கு எதிரிலேயே விசாலமான தோட்டம் அவர்களுக்குக் கிடைத்தால் அவர்களின் இட நெருக்கடி குறையும்.
மதிப்புமிக்க இடத்தில் விசாலமான ஒரு சொத்து - நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு எதிரிலேயே அமைந்த ஒரு சொத்து - நபிகள் நாயகத்துக்குத் தேவைப்படக் கூடிய ஒரு சொத்து - கிரயமாகக்கூட இன்றி இலவசமாகக் கிடைக்கின்றது. நீங்கள் விரும்பியவாறு பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று செல்வந்தரான தோழர் வந்து கூறுகிறார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சாதாரண - சராசரி மனிதராக இருந்தால் நானே எடுத்துக் கொள்கிறேன் என்று கூறியிருப்பார்கள். அல்லது இதை எனக்கு விற்றுவிட்டு அதன் கிரயத்தை தர்மம் செய் என்று சொல்லி இருப்பார்கள். அவர்களுக்கு இருந்த இடநெருக்கடி காரணமாக அந்த இடம் அவர்களுக்குத் தேவையாக இருந்தது.
ஆனால் அவர்களுக்கு இந்தப் பொருட்களிலெல்லாம் நாட்டம் இல்லை! அடிக்கடி அந்தத் தோட்டத்திற்குச் சென்று சுவையான நீரருந்தும் வழக்கம் நபி 
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இருந்துள்ளது. பாலைவனத்தில் சுவையான நீர் என்பது பெரும் பாக்கியமாகும். அடிக்கடி அவர்கள் சென்று வந்ததால் அந்தத் தோட்டத்தின் மதிப்பையும் அதில் கிடைக்கும் அபரிமிதமான வருவாயைப் பற்றியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்திருந்தார்கள். இலாபம் தரும் செல்வமாயிற்றே என்று அவர்கள் கூறியதிலிருந்து இதை அறியலாம்.
தேவையான நேரத்தில் - தேவையான இடத்தில் நல்ல இலாபம் தரும் சொத்து இலவசமாக கிடைத்தும் மறுத்த ஒரே தலைவர் மாமனிதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தான்!.
தர்மம் செய்பவர்கள் முதலில் தம் உறவினர்களுக்குச் செய்ய வேண்டும் என்று நபி
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அடிக்கடி மக்களுக்குப் போதித்து வந்தனர். தாம் சொல்லுகின்ற அனைத்தையும் செயல்படுத்தி வந்த மாமனிதர் இந்த அவசியமான நேரத்திலும் அதை மறக்க வில்லை. தமக்குச் சாதகம் என்றால் தனிச் சட்டம் கூறவில்லை. இலாபம் தரக்கூடிய இந்த உயர்ந்த செல்வத்தைப் பெறக்கூடிய முதல் தகுதி உமது உறவினருக்கே உண்டு என்று கூறி இருக்கிறார்கள். ஆட்சித்தலைவர் என்பதற்காகவோ அல்லாஹ்வின் தூதர் என்பதற்காகவோ தமது எந்தப் போதனையையும் அந்த மாமனிதர் வளைக்கவில்லை.
சொல்வது யாருக்கும் எளிதானதுதான். சொல்லியவாறு அனைத்தையும் செய்வது எளிதானதன்று. உலக வரலாற்றில் தாம் சொன்ன எந்த ஒரு விஷயத்திலும் முரண்படாது அனைத்தையும் அப்படியே நடைமுறைப்படுத்திய ஒரே தலைவர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) என்ற இந்த மாமனிதர்தாம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (தமது ஹஜ்ஜின் போது) தண்ணீர்ப்பந்தலுக்கு வந்து தண்ணீர் கேட்டார்கள். அப்போது (தண்ணீர்ப்பந்தலின் பொறுப்பாளர்) அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு (தமது மகனிடம்) 'ஃபழ்லே! உனது தாயாரிடம் சென்று நல்ல குடிநீர் வாங்கி வந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கொடு!' என்றார்.

அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்' என்றார்கள். 'அல்லாஹ்வின் தூதரே! மக்கள் தங்கள் கைகளை இதில் விடுகின்றனரே' என்று அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் '(பரவாயில்லை) இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்' எனக் கூறிவிட்டு அதை அருந்தினார்கள். பின்னர் ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தனர்.
அங்கே மக்கள் தண்ணீர் புகட்டிக் கொண்டும் அது சம்பந்தமான வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டும் இருந்தனர். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'இந்தப் பணிகளில் ஈடுபட்டிருங்கள்! நீங்கள் நல்ல பணியையே செய்கிறீர்கள்' என்றார்கள்.
பின்னர் அவர்களிடம் 'உங்களுக்கு (இந்தப்பணி செய்வதில்) பாதிப்பு ஏற்பட்டு விடும் என்றில்லா விட்டால்' நானும் கிணற்றில் இறங்கி எனது தோள் புஜத்தில் தண்ணீர் துருத்தியைச் சுமந்திருப்பேன்' என்றார்கள். (அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1635)
விளக்கம்:
தகுதி, செல்வம், செல்வாக்கு அதிகமாகும் போது மற்றவர்களை விடத் தன்னைத் தனித்துக் காட்ட மனிதன் விரும்புகிறான். மிகப்பெரும் பதவியையும் செல்வாக்கையும் பெற்றவர்கள் சாதாரண மனிதர்களுடன் கலந்து அவர்களைப் போலவே நடந்து கொள்வதை விரும்புவதில்லை. இதனால் தங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படும் என்று எண்ணுகின்றனர்.
தலைவர்கள் தமது இல்லத் திருமணங்களுக்குத் தொண்டர்களை அழைப்பார்கள். அங்கே பரிமாறப்படும் விருந்தில் பிரமுகர்களுக்குத் தனியாகவும், சாதாரண மக்களுக்குத் தனியாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதை நாம் காண்கிறோம். பொதுவான நிகழ்ச்சியில் பரிமாறப்படும் உணவில்கூட இப்படிப் பேதம் பார்க்கப்படுகின்றது.
சாதாரண நிலையிலுள்ளோரின் வீடுகளில் நடைபெறும் மங்கல நிகழ்ச்சிகளுக்கு வரக்கூடிய மதகுருமார்கள், பிரபல்யங்கள் தனியாகக் கவனிக்கப்படுவதையும் நாம் காண்கிறோம்.
இந்த நாட்டின் முன்னாள் பிரதமர் ஒருவர் வெளிநாடு அல்லது வெளிமாநிலங்களுக்குச் சென்றபோது அவருக்கான உணவுகள் விசேஷமாகத் தயாரிக்கப்பட்டுத் தனிவிமானத்தில் கொண்டு செல்லப்பட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
தலைவர்கள் பயன்படுத்தும் படுக்கைகள், பயன்படுத்தும் பாத்திரங்கள், அமரும் ஆசனங்கள் கூட அவர்களுடன் பயணம் செய்யும் காட்சியை நாம் கண்டு வருகிறோம்.
எல்லா வகையிலும் மக்களைவிட்டு விலகி, எல்லா வகையிலும் தங்களைத் தனியாகக் காட்டிக் கொள்ளும் தலைவர்களைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு நபிகள் நாயகத்தின் இந்த அற்புத வாழ்க்கையில் ஆறுதல் கிடைக்கின்றது.
இந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் மரணிப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னால் நடந்ததாகும். அப்போதுதான் அவர்கள் ஹஜ்ஜு எனும் புனிதப் பயணமாக மக்காவுக்குச் சென்றிருந்தனர்.
இந்தக் காலகட்டத்தில் அவர்களின் மதிப்பும் அந்தஸ்தும் செல்வாக்கும் உலக அரங்கில் உச்சத்தில் இருந்தன. ஏராளமான நாடுகள் வெற்றி கொள்ளப்பட்;டு அவர்களின் ஆட்சியின் கீழ் வந்திருந்தன. அவர்களின் பெயரைக் கேட்டால் உலகத்துக்கு பயங்கலந்த மரியாதை ஏற்பட்டிருந்தது. இன்றைய உலகில் எந்த ஆட்சியாளரும் பெற்றிருக்காத செல்வாக்கு அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் போது இருந்தது.
ஒரு மதத்தின் நிறுவனராகவும், வழிகாட்டியாகவும், ஆத்மீகத் தலைவராகவும் - அதே சமயத்தில் மாபெரும் வல்லரசின் அதிபராகவும் இருந்த போதுதான் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதைக் கவனத்தில் கொண்டு இந்த வரலாற்றுத் துணுக்கை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
'ஹஜ்' எனும் கடமையை நிறைவேற்ற மக்கா நகரில் மக்கள குழுமியுள்ளனர். அவர்களுக்குத் தாகம் தீர்பபதற்காக தண்ணீர்ப்பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் வரிசையாக நின்று அங்கே நீரருந்திச் செல்கின்றனர். அந்த இடத்திற்குத்தான் மாமன்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தண்ணீர் அருந்த வருகின்றனர்.
நபிகள் நாயகத்தின் உறவினர்கள் அந்த ஊரில் நிறைந்துள்ளனர். அந்த ஊர் மக்கள் அனைவருமே நபிகள் நாயகத்தை ஆன்மீகத் தலைவராக ஏற்றிருந்தனர். அவர்களில் யாருடைய வீட்டுக்காவது சென்று தண்ணீர் கேட்டிருக்கலாம். அங்கேகூட செல்லத் தேவையில்லை. தமது தோழர்களில் யாரையேனும் அனுப்பித் தண்ணீர் எடுத்து வரச் செய்திருக்கலாம். அவ்வாறு செய்யாமல் எல்லா மக்களும் எங்கே தண்ணீர் அருந்தச் செல்கிறார்களோ அங்கேயே செல்கிறார்கள்.
அந்தத் தண்ணீரை அருந்துவதற்காகக் கூட நெரிசலில் இடிபட்டு அவர்கள் சென்றிருக்கத் தேவையில்லை. யாரையேனும் அனுப்பித் தண்ணீர்ப் பந்தலில் நீர் எடுத்துவரச் சொல்லியிருக்கலாம். அவ்வாறுகூட செய்யாமல் தாமே நேரடியாக அங்கே செல்கிறார்கள்.
தண்ணீர்ப் பந்தலை நபிகள் நாயகத்தின் சிறிய தந்தை அப்பாஸ்
ரளியல்லாஹு அன்ஹு தாம் நிர்வகிக்கிறார். அவர் தமது வீட்டிலிருந்து நல்ல தண்ணீர் எடுத்து வருமாறு தம் மகனிடம் கூறுகிறார்.
இந்தத் தண்ணீர் நம்மைப் போன்றவர்கள் குடிக்கத்தக்கதாக இருக்காது என்று இந்த நேரத்திலும நபிகள் நாயகத்துக்குத் தோன்றவில்லை. பரவாயில்லை இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள்! என்று கூறுகிறார்கள்.
நபிகள் நாயகம்
ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் வாழ்ந்த மக்கள் நாகரீகம் தெரியாதவர்களாக இருந்தனர். தண்ணீhப்பந்தலில் வைக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தில் தம் கைகளைப் போட்டு அருந்திக் கொண்டிருந்தனர். இதையும் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தெரிவிக்கிறார். பரவாயில்லை, இந்தத் தண்ணீரையே எனக்குக் கொடுங்கள் என்பதே நபிகள் நாயகத்தின் பதிலாக இருந்தது.
மிகப் பெரிய தகுதியில் உள்ளவர்களைவிட்டு விடுவோம். சாதாரண மனிதன்கூட மற்றவர்கள் கைகளைப் போடும் தண்ணீரை அருந்தத் தயங்குவான். இந்த நிலையில் எல்லா மனிதர்களும் எந்தத் தண்ணிரை அருந்துகின்றார்களோ அந்தத் தண்ணீரையே தாமும் அருந்தி, தாம் மன்னர் என்பதாலோ, ஆத்மீகத் தலைவர் என்பதாலோ மற்றவர்களைவிட கூடுதலான உபசரிப்புத் தேவையில்லை என்று அந்த மாமனிதர் நிராகரித்து விடுகிறார்.
எவரும் அடைய முடியாத உயர்வை அடைந்தும், இவ்வளவு எளிமையாகவும் சாதாரணமாகவும் நடந்து கொண்ட தலைவரை உலக வரலாறு இன்று வரை கண்டதில்லை.
ஸம்ஸம் என்பது இஸ்லாமிய நம்பிக்கைப்படி புனிதமான கிணறாகும். அந்தத் தண்ணீரை அருந்துவதற்காக அங்கே நபிகள் நாயகம் (ஸல்) செல்கிறார்கள். மக்களில் சிலர் கிணற்றில் இறங்கித் தண்ணீரை மேலே கொண்டு வந்து மக்களுக்கு விநியோகம் செய்து கொண்டிருப்பதைப் பார்க்கிறார்;கள். தாமும் கிணற்றில் இறங்கித் தண்ணீர் சுமந்து வந்தால் ஆர்வத்துடன் அந்த மக்கள் செய்யும் சேவை பாதிக்கப்படும் என்று கருதுகிறார்கள். இவ்வாறு பாதிப்பு ஏற்பாடது என்றால் நானும் உங்களைப் போல் கிணற்றில் இறங்கித் தண்ணீரை என் தோள் மீது சுமந்து மேலே கொண்டு வந்து மக்களுக்கு விநியோகித்திருப்பேன் என்று கூறுகிறார்கள்.
கிணற்றில் இறங்குவதோ, தண்ணீரைத்தம் தோளில் சுமப்பதோ, அதை மக்களுக்கு விநியோகம் செய்வதோ அந்த மாமனிதருக்குக் கௌரவக் குறைவானதாகத் தோன்றவில்லை. தாமும் விநியோகிக்க ஆரம்பித்தால் மக்கள் தம்மிடம் வந்து குழுமி விடுவார்கள். மற்றவர்கள் விநியோகிக்கும் தண்ணீரை யாரும் வாங்க மாட்டார்கள். இதனால் ஆர்வத்துடன் பணிபுரிந்த மக்களுக்கு மனக் கவலை ஏற்படும் என்பதால் இதைத் தவிர்த்துக் கொள்வதாகக் கூறிவிடுகின்றனர்.
அவர்களின் எளிமைக்கு மட்டும் எடுத்துக் காட்டாக இதை நாம் கருதக்கூடாது. மக்கள் கூடுமிடங்களில் - மத நிகழ்ச்சிகளில் - கலந்து கொள்ளும் தலைவர்களால் மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதையும் தெளிவு படுத்துகிறார்கள்.
எத்தனையோ மதநிகழ்ச்சிகளில் முதல்வரிலிருந்து பிரதமர் வரை கலந்து கொள்கின்றனர் அதனால் சாதாரண மக்கள் சொல்லொணாத் துன்பத்துக்கு ஆளாகிறார்கள். காரணம் அவர்களுக்காக செய்யப்படும் கெடுபிடிகள், விசேஷ ஏற்பாடுகள் தாம். இதனால் பல நூறு பேர் செத்து மடிந்ததையும் நாம் மறக்க முடியாது.
இந்த மாமனிதரும் தமது மார்க்கக் கடமைகளில் ஒன்றை நிறைவேற்றச் செல்கிறார். அவர் அதில் கலந்து கொண்டதால் கடை நிலையில் உள்ள ஒரு தொண்டனுக்குக் கூட எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. ஏற்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்திருக்கிறார்கள்.
இந்த மாமனிதர் தம்மைக் கடவுள் என்று கூறினாலும் மக்கள் நம்பக் கூடிய அளவுக்கு அந்தஸ்து அவருக்கு இருந்தது. இந்த மாமனிதர் தமக்கென விசேஷச் சலுகைகளை உருவாக்கிக் கொண்டாலும் முகம் சுளிக்காமல் அதை ஏற்கக் கூடிய - அதில் மகிழ்ச்சியடையக் கூடிய மக்கள் கூட்டம் அவருக்குப் பின்னே இருந்தது. அவரை அழிப்பதற்காக பகீரதப் பிரயத்தனம் செய்து வந்த எதிரிகள் உலகம் முழுவதும் இருந்ததால் எந்நேரமும் ஆபத்து அவர்களைச் சூழ்ந்திருந்தது. அவருக்கோ எதைப் பற்றியும் கவலையில்லை. எந்தக் காரணத்துக்காகவும் மக்களை விட்டு விலகிட அவர் எண்ணவில்லை.
ஆட்சியாளரும், ஆன்மீகத் தலைவரும் எப்படி நடக்க வேண்டும் என்று அவர் வழிகாட்ட வந்தவர் என்பதால் - அதில் மட்டும் தான் அவரது கவனம் இருந்தது.
அதனால் தான் உலகில் தோன்றிய மனிதர்களில் எல்லாம் அவர் மாமனிதராகத் திகழ்ந்தார் என்று நடுநிலையாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர்.

[ உலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது 'பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள், வேண்டியவர்களுக்கு முறைகேடாக வழங்கி விட்டார்கள்' என்பது தான்.
மனைவி, மக்கள், பேரன், பேத்திகள் என்ற உறவு முறைகள் தாம் தவறான வழியில் பொருளீட்டுவதைத் தூண்டுகின்றன. இந்தப் பாசத்தின் காரணமாகவே இளமையில் இலட்சியம் பேசுவோரெல்லாம் முதுமையில் இலட்சியத்தைத் தொலைத்து விடுகின்றனர்.
ஊர்ப்பணத்தை அடித்து உலையில் போடும் அயோக்கியர்களைத் தலைவர்களாகக் கருதும் மக்கள் இந்த மாமனிதரின் வாழ்க்கையைப் பார்க்கட்டும்! அப்பழுக்கற்ற பரிசுத்தமான வரலாற்று நாயகரைப் பார்க்கட்டும்! தாம் கொண்ட மார்க்கம் உண்மையானது என்பதற்குச் சான்றாக தமது வாழ்வைத் திறந்த புத்தகமாக வைத்து விட்டுச் சென்ற அந்த மாமனிதரின் வழிகாட்டுதல் மட்டுமே உலகை உய்விக்கச் செய்ய முடியும் என்பதை உணரட்டும்!]
''பேரீத்தம் பழம் காய்க்கும் பருவத்தில் (ஸகாத் எனும் பொது நிதியாக) ஒவ்வொருவரும் பேரீத்தம் பழங்ககை; கொண்டு வருவார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னே பெரும் குவியலாகப் பேரீத்தம் பழங்கள் சேர்ந்து விடும்.
நபிகள் நாயகத்தின் பேரர்களான ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு, ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர் அப்பேரீத்தம் பழங்களை எடுத்து விளையாடுவார்கள்.
அவர்களில் ஒருவர் ஒரு நாள் ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.
அவரது வாயிலிருந்து அதை வெளியேற்றி விட்டு 'முஹம்மதின் குடும்பத்தினர் ஸகாத் எனும் பொது நிதியில் எதையும் சாப்பிடக் கூடாது என்பது உனக்குத் தெரியாதா?' என்று கேட்டார்கள்''. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புஹாரி 3072, அத்தியாயம்: ஜிஹாத்)
விளக்கம்:
உலகத்தில் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் குற்றச் சாட்டுகளில் முதன்மையானது 'பொதுப் பணத்தைச் சுருட்டி விட்டார்கள், வேண்டியவர்களுக்கு முறைகேடாக வழங்கி விட்டார்கள்' என்பது தான்.இத்தகைய முறைகேடுகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடுவதை சாதாரண மக்கள் விரும்பாவிட்டாலும் இதிலிருந்து விடுபட்ட ஒரே ஒரு ஆட்சியாளரைக் கூட இன்றைய உலகில் காண முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.மாதம் ஒன்றுக்கு சில ஆயிரம் ரூபாய்கள் மட்டும் சம்பளம் வாங்கும் பிரதமர்கள், ஜனாதிபதிகள், முதல்வர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இப்பதவிகளைப் பெற்ற பின் பல ஆயிரம் மடங்கு வளர்ந்துள்ளனர் என்பதற்கு ஆதாரம் எதுவும் தேவையில்லை. பொதுப்பணத்தில் குறைவாகச் சுருட்டியவர்கள் தாம் நேர்மையானவர்கள் என்று கருதப்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளதை இன்று நாம் காண்கிறோம்.இந்த மாமனிதரின் அற்புத வரலாற்றைப் பாருங்கள், படிக்கும் போதே கண்கலங்குகிறது! நம்மையறியாமல் ஊர்ப்பணத்தில் கொழுத்தவர்கள் மேல் ஆத்திரம ஏற்படுகின்றது!
இந்த மாமனிதர் போன்ற ஒரு ஆட்சியாளர் இந்த உலகத்தை ஆளக் கூடாதா என்று ஏக்கம் மேலிடுகிறது!
இந்த வரலாற்றுத் துணுக்கை இன்னும் ஆழமாகச் சிந்தித்தால் அந்த மாமனிதரைப் பற்றிய மதிப்பு பல்லாயிரம் மடங்கு அதிகமாகின்றது.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு மதீனா நகரை அடைந்து அங்கே ஒரு ஆட்சியையும் நிறுவினார்கள். அந்த ஆட்சியை செவ்வனே நிறைவேற்றுவதற்காக - ஏழைகளுக்கும் கடனாளிகளுக்கும் அடிமைகளுக்கும் திக்கற்றவர்களுக்கும் அறப்போரில் பங்கெடுப்போருக்கும் உதவுவதற்காக ஸகாத் எனும் வரியைச் செல்வந்தர்கள் மீது விதித்தார்கள். இப்பணத்தின் மூலம்தான் இந்தப் பணிகளை அவர்கள் செய்து வந்தனர்.ஆட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவர்களிடம் 'ஸகாத் நிதி' வந்து குவியும். ஆடுகள், மாடுகள், ஒட்டகங்கள், தங்கம், வெள்ளி மற்றும் தானியங்கள் அரசுக் கருவூலத்தில் சேரும்.இந்த நிதியைப் பயன்படுத்திக் கொள்ளும் பல தகுதிகள் நபிகள் நாயகத்திற்கு இருந்தன. அவர்கள் ஏழையாக இருந்தார்கள். கடனாளியாக இருந்தார்கள். அறப்போரில் பங்கெடுப்பவராக இருந்தார்கள். இந்த நிதியை நிர்வாகம் செய்பவர்களாகவும் இருந்தார்கள். இந்த நிதியில் தமக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துக் கொண்டால் மன சாட்சிப் படியும், அவர்கள் போதித்த கொள்கைப்படியும் அதில் எந்தத் தவறுமில்லை. மக்களில் யாரும் அதைத் தவறாக விமர்சிக்கப் போவதுமில்லை.இந்த மாமனிதர் ஸகாத் நிதியைத் தமக்கும் தம் குடும்பத்தினருக்கும் உலக முடிவுநாள் வரை வரக்கூடிய தமது வழித்தோன்றல்களுக்கும் ஹராம் (பயன்படுத்தக் கூடாது) என்று பிரகடனம் செய்கிறார்கள். ஆட்சியாளர் என்ற அடிப்படையில் சம்பளமாகக் கூட அதை எடுக்கக் கூடாது என்று தமக்குத் தாமே தடை விதித்துக் கொள்கிறார்கள்.தமது பேரர்களில் ஒருவர் பொது நிதியைச் சேர்ந்த ஒரே ஒரு பேரீத்தம் பழத்தை எடுத்ததைக் கூட அந்த மாமனிதர் பொறுத்துக் கொள்ளவில்லை. ஹஸன் ஹிஜ்ரி மூன்றாம் ஆண்டிலும் ஹுஸைன் நான்காம் ஆண்டிலும் பிறந்தனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்த வருடத்தில் இந்த நிகழ்ச்சி நடந்திருந்தால் பேரர்களின் வயது ஏழு அல்லது எட்டுத்தான் இருக்கும்.ஏழு அல்லது எட்டு வயதிற்கும் குறைந்த சிறு குழந்தைகள் செய்யும் தவறுகளை யாரும் தவறாக எடுத்துக் கொள்வதில்லை. இஸ்லாத்திலும் கூட இது தவறாகக் கருதப்படுவதில்லை. இந்த மாமனிதரோ தம் குடும்பத்தில் உள்ள சிறுவர்களும் கூட பொதுநிதியைப் பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்து விட்டார்கள்.மனைவி, மக்கள், பேரன், பேத்திகள் என்ற உறவு முறைகள் தாம் தவறான வழியில் பொருளீட்டுவதைத் தூண்டுகின்றன. இந்தப் பாசத்தின் காரணமாகவே இளமையில் இலட்சியம் பேசுவோரெல்லாம் முதுமையில் இலட்சியத்தைத் தொலைத்து விடுகின்றனர்.நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு
இதுபோன்ற பாசம் இருந்ததில்லையா? நிச்சயமாக இருந்தது. மற்றவர்களை விட அதிகமாகவே இருந்தது. நபிகள் நாயகம் தொழும் போது கூட அவர்கள் மேல் இந்தப் பேரக் குழந்தைகள் சவாரி செய்ததுண்டு. குடும்பத்தின் மீது அவர்கள் வைத்திருந்த பாசம் அவர்களின் இலட்சியத்தையோ கொள்கையையோ பாதிக்காதவாறு பார்த்துக் கொண்டார்கள். இதன் காரணமாகத்தான் பச்சிளம் பாலைகள் தானே என்றும் பார்க்கவில்லை. ஒரேயொரு பேரீத்தம் பழம் தானே என்று போலிச் சமாதனமும் கூறவில்லை. வாயில் போடுவதை வெளியில் எடுத்து வீசுவதால் யாருக்குப் பயன்படப் போகிறது என்று நினைத்து அதை அனுமதிக்கவுமில்லை. பொது நிதியை என் குடும்பத்து உறுப்பினர்கள் தொடக்கூடாது என்றால் தொடக் கூடாது தான். அதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதில் மிக உறுதியாக இருந்தார்கள்.வருங்காலத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரம்பரையினர் என்று கூறிக் கொண்டு தம் குடும்பத்தினர் பொது நிதியில் உரிமை கொண்டாடக் கூடாது என்பதற்காக அன்றும் இன்றும் என்றும் அவர்களின் வழித்தோன்றல்கள் ஸகாத் எனும் பொது நிதியிலிருந்து ஒரு பைஸாவும் பெறக் கூடாது என்ற கடுமையான தடையையும் விதித்து விட்டார்கள்.ஒவ்வொருவனும் தனது வழித் தோன்றல்கள் இவ்வுலகில் வசதியுடன் வாழ வேண்டும் என்பதற்காகப் பாடுபடுகிறான். அந்த மாமனிதரோ உலகம் உள்ளளவும் மற்ற ஏழைகளுக்கும் வறியோருக்கும் அனுமதித்ததைத் தமது வழித் தோன்றல்களுக்கு மட்டும் ஹராமாக்கி (தடுத்து) விட்டார்கள்.நபிகள் நாயகம் ஒரு முறை தொழுது முடிந்ததும் வேகமாக வீட்டுக்குச் சென்று விட்டு வேகமாகத் திரும்பி வந்தார்கள். வந்ததும் 'ஒரு வெள்ளிக் கட்டி ஸகாத் நிதியாக வந்தது. அது ஒரு இரவுப் பொழுதுகூட என் வீட்டில் இருப்பதை நான் விரும்பவில்லை. எனவே இதை விநியோகிக்குமாறு கூறவே விரைந்து சென்றேன்' என்றார்கள். (நூல்: புகாரி)பொது நிதியை தம் வீட்டில் வைத்த நிலையில் இறந்து விட்டால் குடும்பத்தினர் எடுத்துக் கொள்ளக் கூடுமோ? தேவைப்பட்டவர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் விநியோகம் செய்யாத குற்றம் வந்து சேருமோ? என்றெல்லாம் அஞ்சி, தொழுதவுடன் வேகமாகச் சென்று விநியோகம் செய்யச் சொல்கிறார்கள். ஒரு இரவு கூடத் தம் வீட்டில் இது இருக்கக் கூடாது என்று கூறியதை மிகவும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும்.
ஊர்ப்பணத்தை அடித்து உலையில் போடும் அயோக்கியர்களைத் தலைவர்களாகக் கருதும் மக்கள் இந்த மாமனிதரின் வாழ்க்கையைப் பார்க்கட்டும்! அப்பழுக்கற்ற பரிசுத்தமான வரலாற்று நாயகரைப் பார்க்கட்டும்! தாம் கொண்ட மார்க்கம் உண்மையானது என்பதற்குச் சான்றாக தமது வாழ்வைத் திறந்த புத்தகமாக வைத்து விட்டுச் சென்ற அந்த மாமனிதரின் வழிகாட்டுதல் மட்டுமே உலகை உய்விக்கச் செய்ய முடியும் என்பதை உணரட்டும்!



பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates