[ ஆலிம்களில் மிகச்சிறந்தவர்களும் உண்டு. மிகவும்
மோசமானவர்களும் உண்டு. சில ஆலிம்களின் பிற்போக்கான நடத்தைகள் பற்றி இமாம்
கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தெளிவாக விளக்குகிறார்கள். ஆலிம்கள்
தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள இந்த ஆக்கம் உதவும்.]
o ஆலிம்களில் சிலர் மார்க்க உபதேசங்களில் தன்னை
அர்ப்பணித்துக்கொள்கிறார்கள். உள்ளத்தூய்மை, நற்குணம், அச்சம், தவக்கல்,
பொறுமை, உறுதி, நம்பிக்கை, உலகப்பற்றின்மை, இக்லாஸ் ஆகியவை குறித்து
விளக்கமாகவும், உருக்கமாக வும் அழகான சொல்லடுக்குடன் பயான் செய்கிறார்கள்.
o மேலும் இஸ்லாமிய வாழ்க்கையின் பலன்கள் பற்றியும், உள்ளத்தை
சுத்தமாக்கிப் பக்குவப்படுத்தி நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்வதின்
அவசியம் பற்றியும் உள்ளத்தைத் தொடும் முறையில் உபதேசம் செய்வார்கள். ஆனால், கல்வியறிவே இல்லாத சாதரண மக்களிடம் இருக்கக்கூடிய நற்பண்புகளைக்கூட இவர்களிடம் காணமுடியாது.
o அல்லாஹ்வையும், அவன் ரஸூலையும் தாங்கள்தான் மிகவும் நேசிப்பவர்கள் என்று இந்த மார்க்க அறிஞர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
o ‘இக்லாஸ்’ பற்றி மிக நுண்ணிய விஷயங்களையெல்லாம் தெளிவாக
விளக்கி வைக்கும் இவர்கள். உண்மையில் கலப்பற்ற இக்லாஸ் தன்னிடம்
இருக்கப்போய்தான் அவ்வாறான விஷயங்களையெல்லாம் பேசமுடிகிறதென்றும், நஃஸின்
அணுப்போன்ற குற்றங்களைக்கூட படம் பிடித்தாற்போல் காட்டி விளக்கும் இவர்கள்,
அத்தகைய சக்தி பெற்றது அக்குறைகளைத் தன்னிடமிருந்து அகற்றியிருப்பதால்தான்
என்று எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.
o யதார்த்தத்தில் மற்ற மக்களைவிட இவர்கள்தான் இதய
மாசுடையவர்களாகவும், உலக ஆசை மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள். மண்ணுலகின்
மீது மட்டில்லா மோகங்கொண்ட இந்த மார்க்க அறிஞர்கள் மற்றவர்களைத் தன் பக்கம்
ஈர்ப்பதற்காக உலகப் பற்றற்றிருத்தல் பற்றி வார்த்தைகளை அள்ளிக்
கொட்டுவார்கள். ஆனல், இவர்களின் உள்ளமோ உலக இன்பங்களை அடையும் வேட்கையில் துள்ளிக் குதித்துக்கொண்டிருக்கும்.
o அல்லாஹ்விடம் மனமுருகி இறைஞ்சிக் கெஞ்சும் பாவனையில் அழுதும், கண்ணீர் வடித்தும் ‘துஆ’ கேட்பார்கள். ஆனல், யதாத்தத்தில் அல்லாஹ்வின் பொருத்தத்தை விட்டு அப்பால் ஓடும் இயல்புடையவர்களாய் இருப்பார்கள்.
o அல்லாஹ்வைக் கொண்டு மற்றவர்களைப் பயமுறுத்தி அச்சமூட்டுவார்கள். ஆனால், இந்த ஆலிம்கள் கொஞ்சம்கூட அச்சமில்லாமல் அலட்சியமாய் இருப்பார்கள்.
o இவர்கள் திக்ரில் (தியானம்) எப்போதும் திளைத்திருக்குமாறு மற்றவர்களைத் தூண்டுவார்கள். ஆனால், தங்களை அடியோடு மறந்திருப்பார்கள்.
o மற்றவர்களை அல்லாஹ்வின் பக்கம் நெருங்க வேண்டும் எனக் கூறுவார்கள். அவர்களோ அல்லாஹ்வின் திருச்சமூகத்தை விட்டும் மிகத் தொலைவில் இருப்பார்கள்.
o தீய குணங்களை வெறுத்துப் பேசுவார்கள். ஆனால், அத்தனை தீய குணங்களும் அவர்களிடம்தான் குடிகொண்டிருக்கும்.
o உலக வஸ்த்துக்கள் மீது பற்று கொள்ளாமல் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை கொண்டு அவனிடமே சரணடைய வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த உலமாக்கள் உலகப் பொருட்களையே முழுதும் நம்பியிருப்பார்கள்.
o மேலும், மக்களைச் சீர்திருத்துவதே தங்களின் நோக்கமெனச்
சொல்லிக்கொள்ளும் இந்த ஆலிம்கள், புகழையும் செல்வாக்கையுமே நோக்கமாகக்
கொண்டு பயான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
o மக்களிடம் தங்களின் அலங்காரமான உபதேசங்களை நிகழ்த்தி அவற்றின் மூலம் வருவாய்க்கு வழி செய்து கொள்கிறார்கள்.
o இவர்களின் உபதேசங்களுக்கு தடை ஏற்பட்டுவிட்டால் அல்லது வாய்ப்பு இல்லாமல் போனால் இவர்களின் வாழ்க்கை நெருக்கடியானதாக ஆகிவிடும். ஆனால்,
இந்த மார்க்க அறிஞர்கள் 'சுயநலமே எங்களிடமில்லை! மக்களை நேர்வழியில்
கொண்டு செல்வதுதான் எங்களின் நோக்கம்' என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
o இப்படிக் கூறிக்கொள்ளும் இவர்களின் மார்க்கச்
சொற்பொழிவிற்குப் பதிலாக வேறு ஒரு நபர் நியமிக்கப்பட்டால் உடனே பொறாமையும்,
வெறுப்பும் கொண்டு அதனாலேயே நோய் வந்துமிடுமளவிற்கு எரிச்சலடைவார்கள். அவ்வளவு ஏன், இவர்களிடம்
சென்று இன்னருடைய பயான் சிறப்பாய் இருந்தது என்று புகழ்ந்து கூறினால்
ஆத்திரமும், எரிச்சலும் கொண்டு தங்களின் மனப்புழுக்கத்தை
வெளிக்கொட்டுவார்கள்.
o மேலும் உபதேசம் செய்யும் ஆலிம்களில் சிலர் மிக
முக்கியமான பயன் செய்யப்படவேண்டிய விஷயங்கைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதே
இல்லை. எதுகை, மோனை அலங்காரத்துடனும், அடுக்கு மொழிகளுடனும் சொற்களைக்
கவர்ச்சிகரமாக அமைத்துப் பேசுவதிலேயே இவர்களின் சிந்தனை சென்று
கொண்டிருக்கும்.
o இன்னிசை கேட்கும் இன்பத்தில் எப்படித் தம்மை மறந்து
பரவசத்துடன் கூச்சலிடுகிறார்களோ அது போன்று தங்களின் பயானைக் கேட்டு
உணர்ச்சி வெள்ளத்தில் மக்கள் மூழ்க வேண்டும் என்ற நோக்கில் தங்களின்
சொற்பொழிவை அமைப்பதில் முயற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இவ்வாறு
உலகத்தாரின் பாராட்டையும், புகழையும் எதிர்பார்த்து பயான் செய்யும் இவர்கள்
மனித ஷைத்தான்களாவர்.
o இவர்களின் உபதேசத்தால் எந்தச் சீர்திருத்தத்தையும் சமுதாயம் பெறமுடியாது.
o ஆலிம்களில் சிலர் கல்வியில் நன்கு தேர்ச்சி பெற்றும்
வெளிப்படையான அமல்கள் செய்தும் பாவங்களைச் செய்வதை விட்டும் பேணுதலாய்
இருப்பார்கள் என்றாலும் அல்லாஹ்வால்
வெறுக்கப்பட்ட மமதை, முகஸ்துதி, பொறாமை, தலைமைப்பதவி ஆசை, பொருளாசை,
மற்றவருக்குக் கேடு நினைத்தல், தன்புகழ் எங்கும் பரவ வேண்டும் என்ற புகழாசை
போன்ற துர் குணங்கள் இவர்களிடம் குடி கொண்டிருக்கும்.
o 'முகஸ்துதி (ரியாஉ) சிறிய ஷிர்க் ஆகும். விறகை
நெருப்பு தின்பது போல் நன்மைகளைப் பொறாமை தின்றுவிடும். கீரையை (மள
மளவென்று) தண்ணீர் வளரச்செய்வது போல பொருளாசையும், புகழாசையும் இதயத்தில்
நயவஞ்சகத்தை வளரச் செய்கிகின்றது' போன்ற நபிமொழிகளை மேடைதோறும் முழங்கும்
இவர்கள் தம்மை மறந்தே போனார்கள்.
'இறுதி தீர்ர்ப்பு நாளில் பொருளும் மக்களும் யாதொரு
பயனுமளிக்காது, ஆயினும் பரிசுத்த இதயத்துடன் அல்லாஹ்விடம் வருபவன் தான்
(ஈடேற்றமடைபவன்)’ (அல்குர்ஆன் 26: 88,89) என்ற வசனத்தை இந்த மார்க்க
அறிஞர்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்.
ஈஸா அலை ஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்: 'மடைவாயின் முகப்பில்
அடைத்துக் கொண்டிருக்கும் பாராங்கல் தானும் தண்ணீர் அருந்தாது,
வயல்களுக்கும் நீரை ஓடவிடாது'. தீய ஆலிமிற்கு இதுவே உதாரணமாகும்.
- மவ்லவி, அப்துர் ரஷீத் சிராஜி
சிந்தனை சரம், ஜனவரி 2002
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக