|
|
எமது இளம் சந்ததியினர் மூதாதையர் பற்றிய வரலாறுகளைப் படிப்பதில் ஆர்வம் குன்றியவர்களாக காணப்படுவது எதிர்காலத்தில் எமது வரலாற்றை நாம் சூன்யமாக்கிக் கொள்ளக் கூடிய ஒரு பயங்கர நிலையை உருவாக்கிவிடலாம். எமது வரலாற்றை மீட்டிப் பார்ப்பதற்கு வரலாற்றில் வந்துபோன நாயகர்களை நாம் நினைவுபடுத்திப் பார்ப்பதும், அவர்களின் பணிகளை நினைவு கூர்வதும் அவற்றை எமது சந்ததியினருக்கு எத்தி வைப்பதும் எமது கடமையாகும். எமது சமூகத்திற்காகப் பாடுபட்டு பணிகள் புரிந்த எமது முன்னோர் எமக்காக விட்டச் சென்றவைகள் பற்றிய தெளிவை நம் எதிர்காலச் சந்ததியினருக்கு நினைவுபடுத்தி வைக்கப்பட வேண்டும். உலகில் முன்னுதாரணமாகத் திகழப்பட வேண்டிய பலரது வாழ்க்கை வரலாறுகள் அவ்வப்போது எமது இளைய தலைமுறையினரால் மீட்டிப் பார்க்கப்பட வேண்டும். அந்த வகையில் அலி இப்னு ஸீனா அவர்களைப் பற்றி சுருக்கமானதொரு விளக்கத்தை இங்கே தருகின்றோம். இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஜாஹிலியக் காலப்பகுதி மருத்துவத்துறை இல்லாதிருந்த காலப் பகுதியாகும். நோய் சுகமாக்கும் துறைகளாக மாந்திரீகம், சூனியம் போன்ற துறைகள் கையாளப்பட்ட காலம், சுகாதாரம், உடல் நலம் பேணுவதில் அக்கால சமூகம் அவ்வவு அக்கறை காட்டியதாக இல்லை. இஸ்லாத்தின் வருகையின் பின் மனித சிருஷ்டியின் தோற்றம், உடலமைப்பு பற்றியெல்லாம் அல்குர்ஆன் முஸ்லிம்களைச் சிந்திக்கத் தூண்டியமையும் பெருமானார். ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவ்வப்போது நோய் நிவாரணிகள் பற்றி விளக்கியமையுமே மருத்துவத்துறையில் எண்ணற்ற முஸ்லிம் மேதைகள் உருவாகி ஆயிரக்கணக்கான ஆக்கங்களை வெளிப்படுத்தக் காரணமாக இருந்ததெனலாம். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நோய் நிவாரணிகள் பற்றிய ஹதீஸ்கள் திப்பு நவவியா என்னும் தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களின் அறிவியற் பொற்காலமாக கி.பி. 750- 850 கொள்ளப்படுகின்றது. இது அப்பாஸியக் காலப் பிரிவாகும். இக்காலப் பிரிவிலேயே பைத்துல் ஹிக்மா என்னும் மொழிப்பெயர்ப்பு நிலையம் நிறுவப்பட்டு விஞ்ஞானம், மருத்துவம், தத்துவம் சார்ந்த கிரேக்க நூற்கள் அரபியில் மொழிபெயர்க்கப்பட்டன. ஆரம்ப கால முஸ்லிம் அறிஞர்கள் கிரேக்க நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களாக மாத்திரம் அல்லாமல் அந்த நூல்களிலுள்ள தவறுகளை ஆராய்ந்து திருத்தியும் பல புதிய மருத்துவ, அறிவியல், கருத்துக்களைப் புகுத்தியும் மருத்துவ, அறிவியல் துறைகளுக்குத் தமது பங்களிப்பை செய்துள்ளனர். மருத்துவ விஞ்ஞானம் இன்றைய உன்னத நிலையை அடைவதற்குக் காரணமாக இருந்த அன்றைய அறிஞர்களுள் அலி இப்னு ஸீனா முக்கியமானவராவார். இவர் கி.பி. 980 ஆம் ஆண்டு மத்திய ஆசியாவில் இன்று உஸ்பெகிஸ்தான் என்றழைக்கப்படும் அன்றைய புகாரா என்ற இடத்தில் பிறந்தார், இவரது இயற்பெயர் அபூ அலி அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸீனா என்பதாகும். ஐரோப்பியர் இவரை அவிஸென்னா (Avicenna) என்றழைப்பர். அலி இப்னு ஸீனா என்ற அரபுப் பதம் ஹிப்ரூ மொழியில் அவென்ஸீனா என்று குறிப்பிடப்படுகின்றது. அவிஸென்னா என்பது இலத்தீன் மொழி வழக்காகும். பத்து வயதாகும்போதே அலி இப்னு ஸீனா அவர்கள் அல்குர்ஆனை கற்றுத் தேர்ந்து, அரபு இலக்கணம், இலக்கியம் ஆகியவற்றில் தேர்சியும் பெற்றார். இருபதாம் வயதாகும்போது மருத்துவத்துறையில் மிகுந்த ஆற்றல் கொண்டிருந்தார். அதனால் அப்பிரதேச ஆட்சியாளரின் நோயைக் குணமாக்கும் சந்தர்ப்பம் அலி இப்னு ஸீனா அவர்களுக்குக் கிட்டியது. அதுவே ஆட்சியாளரது குடும்ப நூலகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பை இவருக்களித்ததோடு கிரேக்கத்தின் தத்துவம், கணிதம் போன்றவற்றில் அறிவையும் அரிஸ்டோட்டலின் பௌதீகவியலையும் வாசித்தறியும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியது. முஸ்லிம் மருத்துவ வரலாற்றில் இப்னு ஸீனாவுக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு. அவரது `அல் கானூன் பீல் தீப்' என்ற மருத்துவக் கலைக் களஞ்சியமானது, மருத்துவத்துறையின் வேத நூலாகக் கொள்ளப்படுவதாக ஒஸ்லெர் என்னும் மேற்கத்திய அறிஞர் குறிப்பிடுகின்றார். ஐந்து பெரும் பாகங்களைக் கொண்ட கானூனின் முதற் பாகத்தில் வரை விலக்கணங்களும், மனித உடல், ஆன்மா, நோய்கள் பற்றியும் இரண்டாம் பாகத்தில் அகர வரிசையில் நோய்களுக்கான அறிகுறிகளும் மூன்றாம் பாகத்தில் கால்முதல் தலைவரை உள்ள உறுப்புக்களை பாதிக்கும் நோய்கள் பற்றிய விளக்கங்களும் பொது நோய்கள் பற்றிய குறிப்புகளும் ஐந்தாம் பாகத்தில் கலவை முறையான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் அடக்கப்பட்டுள்ளன. மருத்துவம் பற்றிய கோட்பாடுகளே இந்நூலின் அடிப்படையாக இருந்தன. கெலனின் நூலில் இடம்பெறாத பல விடயங்கள் இதில் இடம் பெற்றிருந்தன. அதனாலேயே `அல் கானூன் பீல் தீப்' 17 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை தலைசிறந்த மருத்துவக் கலைக் களஞ்சியமாக ஐரோப்பியர்களால் போற்றப்பட்டு வந்துள்ளது. அலி இப்னு ஸீனா அவர்களின் மற்றுமொரு மருத்துவ நூல் `கிதாப் அஷ்ஷிஃபா' வாகும். அக்காலம் வரை உலகில் விருத்தியடைந்திருந்த அத்தனை அறிவையும் கிதாப் அஷ்ஷிபாவில் தொகுத்துத் தந்துள்ளார். இந் நூலின் முதற்பகுதியில் தர்க்கவியல், பௌதீகவியல், கணிதம், அதீத பௌதீகம் என்ற நான்கு பிரிவுகளும் இரண்டாம் பகுதியில் உளவியல், தாவரவியல், விலங்கியல் என்பனவும் அடக்கப்பட்டுள்ளன. பௌதீகவியல் பிரிவில் அண்டவியல்வளி மண்டலவியல், விண்வெளி நேரம், வெற்றிடம், இயக்கம் என்பன பற்றிய கோட்பாடுகளும் விளக்கப்பட்டுள்ளன. அலி இப்னு ஸீனா அவர்களின் `உர்ஜுதா பித் திப்' என்பது மருத்துவ கலை வளர்ச்சி பற்றி விளக்கும் கவிதை நூலாகும். இதுவும் ஐரோப்பியர்களால் மதிக்கப்பட்ட ஒரு நூலாகக் கொள்ளப்படுகின்றது. மருத்துவக் கலை பற்றி இவர் 19 நூற்களையும் ஏனைய துறைகள் பற்றி 90 நூல்களையும் ஆக்கி உலகிற்கு அளித்துவிட்டு கி.பி. 1037 இல் தனது 57 ஆவது வயதில் ஹமதான் என்ற இடத்தில் காலமானார். ஐ.ஏ.ஸத்தார் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக