Elegant Rose - Diagonal Resize 2 சுவனத்தின் தாரகை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா ~ TAMIL ISLAM

திங்கள், 4 ஜூன், 2012

சுவனத்தின் தாரகை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா

 டாக்டர் மீ. அஹ்மது இப்ராஹீம்

அகிலத்தின் அருட்கொடை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், ‘ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி’. (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர, வேறு யாரும் ஃபாத்திமாவை விட அதிகமாக உண்மை பேச நான் பார்த்ததில்லை.’ (நூல்: ரஜீன்)
‘இம்ரானின் மகள் மரியத்தைத் தவிர்த்து சுவனத்துப் பெண்களில் ஃபாத்திமாவே மிக்க மேன்மையானவராக இருப்பார்.’ (நூல்: அஹ்மத்)சுவனத்தின் தாரகை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா

  சுவனத்தின் தாரகை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலம் பிறந்த ஐந்தாவது குழந்தை ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 36 ஆவது வயதில் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் பிறந்தார்கள். (நூல்: ஃபத்ஹுல் பாரீ)
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு 20 வயது நிரம்பியபோது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் அலீ ரளியல்லாஹு அன்ஹு தான் தன் மகளுக்குகந்த கணவராயிருப்பார் என பேசினார்கள். எனினும், முறைப்படியான ஒப்பந்தங்கள் ஏதும் செய்யப்படவில்லை. அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோர், ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணந்துகொள்ளவெனக் கேட்டதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புறக்கணித்தார்கள். ஏற்கனவே ஒருவருக்காக முடிவு செய்யப்பட்டது எனக் கூறாமல், தக்க நேரம் வரும் வரை காத்திருப்பதாக மட்டுமே கூறி வந்தார்கள்.
திருமணத்திற்கான காலம் வந்துவிட்டதை உணர்ந்து முறைப்படி தம்மை வேண்டி நிற்பார் என்ற எண்ணத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் திருமணம் சம்பந்தமாக உற்சாகமூட்டும் வார்த்தைகளைப் பேசினார்கள். தனது ஏழ்மையின் காரணமாக அலீ ரளியல்லாஹு அன்ஹு ஆரம்பத்தில் தயக்கம் காட்டினாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விருப்பத்திற்கிணங்க தன் சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.
முறையான ஒப்பந்தம் (திருமணம்) முடிந்ததும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமண விருந்தொன்று நடத்தப்பட வேண்டுமென கூறினார்கள். ஒரு செம்மறியாடு அறுக்கப்பட்டது. சில அன்சாரிகள் தானியங்களைக் கொடுத்தனர். திருமண ஏற்பாடுகளை கவனிப்பதில் தீவிர ஆர்வம் காட்டியவர் அபூஸலாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்.
இத்திருமணம் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் நடந்தது. அபூஸலாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உம்மு ஸலாமா ரளியல்லாஹு அன்ஹா மற்றும் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா ஆகியோருடன் சேர்ந்து, புதுமணத்தம்பதியருக்கான வீட்டை ஒழுங்குபடுத்தவும் உணவு தயாரிக்கவும் எனச் சென்றார்கள். வீட்டின் மண் தரையின் மேலாக ஆற்றோரத்திலிருந்து கொண்டுவரப்பட்ட மெல்லிய மணல் தூவப்பட்டு, படுக்கையாக பதனிடப்பட்ட ஆட்டுத்தோல் விரிக்கப்பட்டது. அதன்மேல் கோடிட்ட, நிறம் மங்கிப்போன ஒரு எமன் நாட்டு துணி (புடவை) விரிப்பாகப் போடப்பட்டது.
பேரிச்ச மரத் தும்பினால் நிரப்பப்பட்ட தோல் திண்டொன்று தலையணையாக வைக்கப்பட்டது. முக்கிய உணவுக்கு மேலதிகமாக விருந்தினர்களுக்கு ஈத்தங்கனிகளும், அத்திப்பழங்களும் வழங்கப்பட்டன. வாசைன ஊட்டப்பட்ட நீரினை தண்ணீர்ப்பைகளில் வழங்கினார்கள். அக்காலக் கட்டத்தில் மதீனாவினல் நடத்தப்பட்ட ஒரு சிறந்த, எளிய திருமண விருந்தாக இது இருந்தது. (நூல்: இப்னுமாஜா)
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு 480 திர்ஹம்கள் மஹராகக்கொடுத்து திருமணம் செய்தார்கள். நபிபெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் மகளுக்கு ஒரு மூங்கில் நாற்காலி, ஒரு தோல் துருத்தி, இரண்;டு திருகைகள் மற்றும் இரண்டு மண்குடங்கள் போன்ற எளிமையான குடியிருப்புக்குத் தேவையான பொருள்களை கொடுத்தார்கள்.
‘திருமணங்களில் வீண்செலவு செய்வது தரித்திரத்தை உண்டாக்கும்; என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருளியுள்ளார்கள். (நூல்: இப்னுமாஜா)

ஒரு தடவை அலீ ரளியல்லாஹு அன்ஹு கொடியவன் அபூஜஹ்லின் மகளை இரண்டாம் தாரமாக மணமுடிக்க விரும்பினார்கள். இதைக் கேள்வியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களை அழைத்து ‘ஃபாத்திமா எனது உடலின் ஓர் அங்கமாகும். எவரொருவர் ஃபாத்திமாவுக்கு நோவினை தருகிறாரோ அவர் எனக்கு நோவினை தருகிறார். அவரைக் கோபமூட்டியவர் என்னைக் கோபமூட்டியவராவார். எவர் ஃபாத்திமாவை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசிக்கிறார். எனது அன்பு மகளும் இஸ்லாத்தின் விரோதி மகளும் ஒரே கூரையின்கீழ் வாழ முடியாது. எனவே, விரோதியின் மகளை மணக்க விரும்புவோர் என் மகளை விவாகரத்து செய்துவிடட்டும்’ என்று உபதேசித்தார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம், அஹ்மது) உடனே அலீ ரளியல்லாஹு அன்ஹு தனது விருப்பத்தை கைவிட்டுவிட்டார்கள்.
ஹிஸ்ரி 10 ஆம் ஆண்டு ரமளான் மாத முடிவில் நபி ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஒரு ரகசியத்தைத் தெரிவித்தார்கள். ‘ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் ஒவ்வொரு வருடமும் எனக்கு குர்ஆனை ஒரு முறை ஓத, நான் அதை அவருக்கு ஒரு முறை ஓதிக் காட்டுவேன். இந்த வருடம், இது இரண்டு முறை ஓதப்பட்டுள்ளது. இது எனது மரணம் சமீபித்துவிட்டது என்பதையே உணர்த்துகிறது’ என்றார்கள். (நூல்: புகாரி)
அதே ஆண்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேற்கொண்ட ஹஜ்ஜத்துல்விதாஉ எனப்படும் இறுதி பயண ஹஜ்ஜில், ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் கலந்து கொண்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிப்பதற்கு சில தினங்களுக்கு முன் திருக்குர்ஆனின் 110 ஆவது அத்தியாயம் வஹியாக இறங்கியது. இந்த அத்தியாயத்தின் அசல் பொருளை உணர்ந்திருந்த ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணமடையப் போகிறார்கள் என்று அறிந்து துயரத்தில் ஆழ்ந்தார்கள். சுகவீனத்தின்போது நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் சென்றிருந்துபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காதில் ஓர் ரகசியம் சொல்ல, அதைக்கேட்ட ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா தன் கண்ணீரினூடே சிரிக்கலானார்கள்.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறிச்செல்லும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா வினவ, அதை தற்போது கூறமுடியாது என மறுத்துவிட்டார்கள். சிலநாட்களில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறப்பெய்தியவுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் அந்த ரகசியங்களைக் கூறினார்கள். அதாவது, ‘எந்த சுகவீனத்தின் காரணமாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்களோ அதன் மூலமே மரணித்து விடுவதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அதைக்கேட்டு அழுதேன். பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், குடும்பத்தாரில் முதன்முதலில் அவர்களிடம் சென்று சேர்பவர் நான் தான் என அவர்கள் சுட்டிக்காட்டியதும் சிரிக்கலானேன்’ என்றார்கள். (நூல்: புகாரி)
தனது மரணத்தை சுபச்செய்தியாக ஏற்றுக்கொண்ட ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதுபோல அவர்கள் மறைந்த ஆறாவது மாதத்தில் அதாவது ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு ரமளான் மாதம் 3 ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று மரணமடைந்தார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜிஊன்) அப்போது ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வயது 29 (ஃபத்ஹுல் பாரீ)
வஸியத் செய்திருந்தபடி அஸ்மா பின்த் உமைஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை குளிப்பாட்டினார்கள். ஹஸன் ரளியல்லாஹு அன்ஹு மற்றும் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தனர். அம்மையாரின் ஜனாஸாத் தொழுகையை அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுக வைத்து "ஜன்னத்துல் பகீஃ" இல் நல்லடக்கம் செய்தார்கள்.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தொழுக வைத்து "ஜன்னத்துல் பகீஃ" இல் நல்லடக்கம் செய்தார்கள்.

அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
திரிகை சுற்றுவதால் தாம் அடையும் வேதனை குறித்து (என் மனைவி) ஃபாத்திமா முறையிட்டார். (இந்நிலையில்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் போர்க் கைதிகள் சிலர் கொண்டு வரப்பட்டனர். உடனே ஃபாத்திமா அவர்கள் (நபியவர்களிடம் வீட்டு வேலைக்காகக் கைதி எவரையாவது கேட்டு வாங்கிவரச்)சென்றார்.
ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் காணவில்லை; ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைத்தாம் அங்கே கண்டார். ஆகவே (தாம் வந்த நோக்கத்தை) ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் ஃபாத்திமா தெரிவித்தார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (வீட்டிற்கு) வந்த போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா வந்ததைத் தெரிவித்தார்கள். உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.
அதற்குள் நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்டவுடன்) நான் எழுந்து நிற்கப் போனேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீங்கள் (இருவரும்) உங்கள் இடத்திலேயே இருங்கள் என்று சொல்லிவிட்டு எங்களுக்கிடையே (வந்து) அமர்ந்து கொண்டார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களுடைய கால்களின் குளிர்ச்சியை நான் என் நெஞ்சின் மீது உணர்ந்தேன்.
பிறகு நீங்கள் இருவரும் என்னிடம் கோரிய (உதவி)தனை விடச் சிறந்த ஒன்றை உங்கள் இருவருக்கும் நான் கற்றுத் தரட்டுமா?

நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்கையில் முப்பத்து நான்கு முறை ''அல்லாஹு அக்பர்'' - அல்லாஹ் மிகப் பெரியவன் என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை ''ஸுப்ஹானல்லாஹ்'' - அல்லாஹ் தூயவன் என்று சொல்லுங்கள்; முப்பத்து மூன்று முறை ''அல்ஹம்துலில்லாஹ்'' - அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று சொல்லுங்கள். அது ஒரு பணியாளை விட உங்கள் இருவருக்கும் சிறந்ததாகும் என்று சொன்னார்கள். (புகாரி - 3705)
ஆட்சியாளரின் மகள் ஜனாதிபதியிடம் பணியாளைக் கேட்கிறார்கள் ஆனால் அதற்கு பதில் திக்ருகளை கற்றுக் கொடுக்கிறார் ஜனாதிபதி. உலகில் எங்காவது இப்படிப்பட்ட ஆட்சியாளரையும், இது போன்ற தீர்பை ஏற்றுக் கொள்ளும் இளவரசியையும் காண முடியுமா?
அகிலத்தின் அருட்கொடை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள், ‘ஃபாத்திமா (ரளியல்லாஹு அன்ஹா) சொர்க்கவாசிகளில் பெண்களின் தலைவி’. (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி)
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள்: ‘நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தவிர, வேறு யாரும் ஃபாத்திமாவை விட அதிகமாக உண்மை பேச நான் பார்த்ததில்லை.’ (நூல்: ரஜீன்)
‘இம்ரானின் மகள் மரியத்தைத் தவிர்த்து சுவனத்துப் பெண்களில் ஃபாத்திமாவே மிக்க மேன்மையானவராக இருப்பார்.’ (நூல்: அஹ்மத்]

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates