Elegant Rose - Diagonal Resize 2 கோபமும் காமமும்! ~ TAMIL ISLAM

திங்கள், 4 ஜூன், 2012

கோபமும் காமமும்!


 
இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி
 சினத்தையும் காமத்தையும் 
 நடுநிலையில் கொண்டு வந்தால் 
 நற்குணம் மணம் வீசும்!
[ காமம் என்பது வீணான ஒன்றல்ல! பயனைக் கருதியே காம உணர்ச்சி படைக்கப் பட்டிருக்கிறது. ஆசையும் இப்படித்தான். அதுவும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பயனைக் கருதியே உண்டாக்கப்பட்டிருக்கிறது. உணவின் மீது ஆசை இல்லாவிடில் யாரும் உணவை உட்கொள்ளப் போவதில்லை. புணர்ச்சியை விரும்பாவிடில் ஒரு மனிதனால் எப்படி உடலுறவு கொள்ள முடியும்? ஆண் பெண் இணைப்பு இல்லையெனில் சந்ததித் தொடர்பு அறுபட்டு விடுமே! அதுபோல ஒரு மனிதனுக்கு கோப உணர்ச்சியே இல்லாமல் போனால் அவனால் தனக்கு வரும் அபாயத்தை - தீங்கைத் தடுத்துக் கொள்ள முடியுமா?
சினத்தையும், காமத்தையும் வேரோடு களைந்தெறிய முடியாது. அவற்றை முற்றிலும் அடக்கியாண்டு விட முடியாது. இது மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால், பயிற்சியால் அவற்றின் போக்கைத் திருத்தியமைக முடியும். இவ்வாறு தான் நாம் பணிக்கப் பட்டிருக்கிறோம். நம் ஈடேற்றத்திற்கும் நாம் வல்லவனை அடைவதற்கும் இதுதான் வழி.
நபித்தோழர்களைப்பற்றி இறைவன் திருமறையில் "சினத்தை மென்று விழுங்கக் கூடியவர்கள்" என்று பாராட்டுகிறானேயொழிய "சினமற்றவ்ர்கள்" என்று குறிப்பிடவில்லை. எனவே சினத்தையும் காமத்தையும் நடுநிலையில் கொண்டு வருவதே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிற அவற்றைக் கட்டோடு அழிப்பதல்ல! ]
 சினத்தையும் காமத்தையும் நடுநிலையில் கொண்டு வா!

மனிதனின் அக அழகுக்கு நான்கு அங்கங்கள் உள்ளன. அவற்றை நடுநிலைமையில் அமைப்பதன் மூலமே நற்குணம் மணம் வீசும். அவை: 1. அறிவாற்றல், 2. சின உணர்ச்சி, 3. காம உனற்ச்சி, 4. இவற்றை நடுநிலைப்படுத்தும் ஆற்றல்.
அறிவாற்றல் :  இவற்றை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். உண்மையையும் பொய்யையும் இதன் உதவியால் பிரித்தறிய வேண்டும். நேர்மையையும் நீதியையும் உய்த்துணர வேண்டும். நல்ல கோல்கை எது, தீய கொள்கை எது, கெட்ட கொள்கை எது, நற்செயல் எது, துர்ச் செயல் எது என்று பகுத்தறிய வேண்டும்.

இந்த ஆற்றல் பக்குவப்படும்போது பேரறிவு உற்பத்தியாகிறது. இத்தகைய அறிவு நற்பண்பின் ஆணிவேர். "அறிவு அளிக்கப்பட்டவர்கள் அதிகமான நன்மை அளிக்கப்பட்டு விட்டார்கள்" என்று அல்லாஹ் குறிப்பிடுவது இந்த பேரறிவைத்தான்.
சின உணர்ச்சி :  சின உணர்ச்சி ஓரளவுக்கு அவசியம் தான். கோபமே இல்லாமல் மரக்கட்டையாகி விடக்கூடாது. கோபத்தால் மதியிழப்பதும் கூடாது. அறிவாற்றலுக்குத் தகுந்தபடி அது இயங்க வேண்டும். அப்போதுதான் சின உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாகும்.
காம உணர்ச்சி :  சின உணர்ச்சியைப் போன்றது தான் காம உணர்ச்சியும்.பகுத்தறிவுக்கும் மார்க்கத்துக்கும் கட்டுப்பட்டு அது இயங்க வேண்டும். அப்போதுதான் காம உணர்ச்சிக்குப் பெருமையும் அழகும் உண்டாக முடியும்.
நடுநிலைப் படுத்தும் ஆற்றல் :  இது பிரதானமான ஒன்று. சின உணர்ச்சியையும் காம உணர்ச்சியையும் பகுத்தறிவுக்கு, மார்க்கத்துக்கு அடிபணியச் செய்வது இந்த ஆற்றல்தான்.

சினத்தையும், காமத்தையும் வேரோடு களைந்தெறிய முடியாது. அவற்றை முற்றிலும் அடக்கியாண்டு விட முடியாது. இது மனிதனின் ஆற்றலுக்கு அப்பாற்பட்ட விஷயம். ஆனால், பயிற்சியால் அவற்றின் போக்கைத் திருத்தியமைக முடியும். இவ்வாறு தான் நாம் பணிக்கப் பட்டிருக்கிறோம். நம் ஈடேற்றத்திற்கும் நாம் வல்லவனை அடைவதற்கும் இதுதான் வழி.
கோப உணர்ச்சி நடுநிலையில் அறிவுக்குக் கட்டுப்பாட்டு இயங்கும்போது அதற்கு "வீரம்" என்ற பெயர் உண்டாகிறது. காம உணர்ச்சி நடுநிலையில் இயங்கும்போது "களங்கமின்மை" என்னும் பெயர் ஏற்படுகிறது.
சின உணர்ச்சியின் நடுநிலையிலிருந்து மேல் நோக்கிச் சாயும் போது "வெறி" உண்டாகிறது. காம உணர்ச்சி மேல் நோக்கிப் போகும்போது "காம வெறி" உதயமாகிறது.
சின உணர்ச்சி கீழ் நோக்கிச் சாயும்போது "கோழைத்தனம்" தலைத் தூக்குகிறது. காம உணர்ச்சி கீழே இறங்கும்போது "ஆண்மையின்மை" ஏற்படுகிறது.

இந்த இரண்டு நிலைகளும் விரும்பத்தக்கதல்ல. உணர்ச்சி வரம்பு மீறி வலுவேறக் கூடாது. வலுவோ இல்லாமலும் இருக்கக் கூடாது. நடுநிலை தான் விரும்பப் படுகிறது; புகழுக்குறியது.
சின உணர்ச்சிநடுநிலையில் இயங்கும்போது "வீரம்" உண்டாகிறது என்று குறிப்பிட்டோம் அல்லவா! வீரத்திலிருந்து சகிப்புத்தன்மை, தயாள மனப்பான்மை, மனோபலம், சினத்தை அடக்கியாண்டு வெற்றி கொள்ளுதல், கம்பீரம் முதலியவை உதயமாகின்றன. அன்பும், நட்பும் கூட தன் விளைவுகளே! இவை அனைத்தும் புகழுக்குரிய நற்குணங்களே, உயர்பண்புகளே!
ஆனால், இந்த உணர்ச்சி வலுவேறிப் போகும்போது வெறுக்கத்தக்க பல தன்மைகள் உற்பத்தியாகின்றன. தற்பெருமை, பொருட்படுத்தாமை, அலட்சிய மனப்பான்மை, தன்னைப்பற்றிய உயர்வெண்ணம் முதலியன முளைக்கின்றன. அதே சமயம் இந்த உணர்ச்சி வலுவிழப்பதும் விரும்பத்தக்கதல்ல. அப்போது கேவல மனப்பான்மை, இழிவெண்ணம், தன்னைத்தானே தாழ்வாக மதிக்கும் குணம் - இப்படிப் பல தன்மைகள் தலை தூக்குகின்றன.
காம உணர்ச்சி நடுநிலையில் இயங்கும்போது வரவேற்கத்தக்க பல நல்ல அம்சங்கள் தோன்றுகின்றன. தயாளம், வெட்கம், பெருந்தான்மை, சகிப்புத்தன்மை, அடக்கம், பேணுதல் முதலியன அதன் விளைவுகள்.

காம உணர்ச்சி எல்லையை மீறும்போது பேராசை, வெறி, தயாளமின்மை, பொறாமை, எதிரியின் இன்னல் கண்டு சிரித்தல், செல்வந்தர்களை இழிவாகக் கருதுதல், அறிஞர்களைத் தாழ்வாக எண்ணுதல் முதலியவை வெளிப்படுகின்றன.. இந்த உணர்ச்சி வலுவிழக்கும்போது நல்லம்சம் எதுவும் ஏற்பட்டுவிடாது. வெறுக்கத்தக்க பல குணங்களே உண்டாக முடியும்.
காமம் என்பது வீணான ஒன்றல்ல! பயனைக் கருதியே காம உணர்ச்சி படைக்கப் பட்டிருக்கிறது. ஆசையும் இப்படித்தான். அதுவும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பயனைக் கருதியே உண்டாக்கப்பட்டிருக்கிறது. உணவின் மீது ஆசை இல்லாவிடில் யாரும் உணவை உட்கொள்ளப் போவதில்லை. புணர்ச்சியை விரும்பாவிடில் ஒரு மனிதனால் எப்படி உடலுறவு கொள்ள முடியும்? இதனால் சந்ததித் தொடர்பு அறுபடுகிறது! அதுபோல ஒரு மனிதனுக்கு கோப உணர்ச்சியே இல்லாமல் போனால் அவனால் தனக்கு வரும் அபாயத்தை - தீங்கைத் தடுத்துக் கொள்ள முடியுமா?
ஆசையிருக்கும்போதெல்லாம் பொருளாசையும் இயற்கையாகாவே உண்டாகிறது. இந்த ஆசை நாளடைவில் "சேமிப்பு" என்று மாறுகிறது. பொருளை இப்படித்தேங்கச் செய்வது குறிக்கோளல்ல. பொருளை வாரி இறைப்பதும் கூடாது. நடுநிலையில் அதைச் செலவிட்டு பயனடைய வேண்டும். இதே போன்று சினத்தால் மதியிழக்காமல் அதை நடுநிலையில் இயங்கச் செய்ய வேண்டும். அப்போது கோழைத்தனத்துக்கோ வெறியுணர்ச்சிக்கோ இடமிருக்காது. ஆக, மனிதனின் உணர்ச்சி அதற்கு வலுவோடிருக்க வேண்டும். அதே சமயம் அறிவின் அறைகூவலுக்கு அடிபணிய வேண்டும்.
"அவர்கள் காஃபிர்களின் விஷயத்தில் கடின சுபாவமுடையவர்களாயிருந்தார்கள்..." என்று இறைவன் சத்திய ஸஹபாக்களைப் பற்றிக் கூறுகிறான். "கடினம்" என்பது சினத்தால் ஏற்படும் விளைவு. இந்த விளைவை அல்லாஹ் புகழ்ந்துரைக்கின்றான் தனது திருமறையில்.
சினத்தை அடியோடு களையவும் முடியாது; அதற்குத் தேவையும் இல்லை. சின உணர்ச்சி அடியோடு அழிக்கும்போது மார்க்கப் போர் - புனிதப் போர் எதுவும் நடைபெற முடியாது.

இப்படியிருக்க சினத்தையும் காமத்தையும் கட்டோடு அழிப்பதை எவ்வாறு குறிக்கோளாய் கொள்ள முடியும்? சாதாரண மனிதர்கள் ஒரு புறமிருக்க தீர்க்க தரிசிகளும் கூட இவ்விஷயத்தில் கட்டுப் பட்டவர்களே. அவர்களுக்கும் சினம்-காமம் எல்லாம் உண்டு. "நான் மனிதன் தான். எனவே மற்றவர்களைப் போல் நானும் சினமுறுகிறேன்" என்று திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். அவர்கள் விரும்பாத ஒன்றை அவர்களுக்கெதிரில் பேசப் படும்போது அவர்களின் வதனம் சிவந்துவிடுமாம்! ஆனால் அவர்கள் திருநபி, தீர்க்கதரிசி, உண்மையைத்தவிர்த்து - நியாயத்தை விடுத்து வேறு எதையும் கூற மாட்டார்கள். சினத்தினால் அவர்கள் மதியிழக்க மாட்டார்கள்.
நபித்தோழர்களைப் பற்றி இறைவன் திருமறையில் "சினத்தை மென்று விழுங்கக் கூடியவர்கள்" என்று பாராட்டுகிறானேயொழிய "சினமற்றவ்ர்கள்: என்று குறிப்பிடவில்லை. எனவே சினத்தையும் காமத்தையும் நடுநிலையில் கொண்டு வருவதே மனிதனின் குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவிற அவற்றைக் கட்டோடு அழிப்பதல்ல!
( -இமாம் கஸ்ஸாலி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ''இஹ்யா உலூமித்தீ(''ரியாலுந் நஃப்ஸீன்'')னிலிருந்து''... மொழியாக்கம்: மவ்லவி, எஸ். அப்துல் வஹ்ஹாப், பாகவி )

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

 
Design by Quadri World | Bloggerized by Mohammed Zubair Siraji - Premium Blogger Templates